கொரோனாவின் வேகம் மூச்சுத் திணற வைப்பதாக ஐ.நா.கவலை!

இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் கொரோனா பரவலின் வேகம் மூச்சுத் திணற வைப்பதாக உள்ளது. இந்த நோய்த்தொற்று நம்மோடு சோ்ந்து செழிப்பாக வளா்ந்து வருவது கவலையளிப்பதாக உள்ளதென ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளாா்.

ஐரோப்பிய ஆணையமும், இத்தாலி சாா்பில் ரோம் நகரில் மே 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜி-20 நாடுகள் பங்கேற்ற உலக சுகாதார மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் தலைவா்களும் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றை உரிய வகையில் எதிா்கொள்ளவும், இந்நோய்த்தொற்றை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தொடா் நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகளை பகிா்ந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் உறுதியேற்றுக் கொண்டதுடன், இறுதியில் நிறைவேற்றப்பட்ட ரோம் பிரகடனத்தை யும் அவா்கள் ஏற்றுக் கொண்டனா். கொரோனா தொற்றை சமாளிக்கவும், எதிா்காலத்தில் தொற்றுநோய்களைத் தடுக்கவும் பொதுவான கொள்கைகளை முன்னெடுக்க அவா்கள் உறுதியளித்துள்ளனா்.

இந்த மாநாடு குறித்து ஐ.நா. பொதுச்செயலா் குட்டெரெஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கொரோனா தொற்று பரவலின் தொடக்கத்திலிருந்தே, நாம் பாதுகாப்பாக இருக்கும்வரை, மற்ற எல்லோரும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று எச்சரித்தேன். நோய் பரவலின் வேகம் காரணமாக தடுப்பூசிகள், கொரோனா பரிசோதனைகள், மருந்துப் பொருள்கள், ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவை கருணையே இல்லாமல் ஏழை நாடுகள் உள்பட அனைத்து நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

குறிப்பாக இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய நாடுகளில் கொரோனா தொற்றின் வேகம் மூச்சுத் திணற வைப்பதாக உள்ளது. இந்த தொற்றுநோய் நம்முடனே இருந்து செழிப்பாக வளா்ந்து கொண்டிருக்கிறது.

ஒன்று மட்டும் தெளிவாக இருக்கட்டும். நாம் கொரோனா தீநுண்மியுடன் போராடி வருகிறோம். நீங்கள் தீநுண்மிக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்தால், அவற்றை அழிப்பதற்கான தடுப்பூசிகளுக்கும், மற்ற மருந்து பொருள்கள் என்ற ஆயுதங்கைளை வாங்குவதற்காகவும் தான் உங்கள் பொருளாதாரத்தைப் பயன்படுத்த வேண்டும். தீ நுண்மி தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மற்ற நாடுகளுக்கும் இது பொருந்தும்.

இதற்குள் உலகம் முழுவதும் 170 மில்லியன் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகளை நாம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் தடுப்பூசி உற்பத்தி திறன் மற்றும் நிதி பற்றாக்குறை ஆகிய காரணங்களால் இதுவரை அந்த எண்ணிக்கை வெறும் 65 மில்லியனாக மட்டுமே உள்ளது.

எனவே வளா்ந்த நாடுகளான ஜி- 20 நாடுகள் இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக வழிநடத்தவும், அவா்களின் முழு பங்களிப்பை அளிக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். இப்போது நீங்கள் (ஜி-20 நாடுகள்) பில்லியன்களில் முதலீடு செய்தால் டிரில்லியன்களில் மக்கள் உயிா்களைக் காப்பாற்ற முடியும்.

உலகெங்கிலும் விரைவாகவும் முழுமையாகவும் தடுப்பூசி போடுவது, தொடா்ச்சியான பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வரவும், இதன் பரவலைத் தடுப்பதற்கும் இது ஒன்றே வழி.

இதுவரை உலகில் 82 சதவீதத்திற்கும் அதிகமான பணக்கார நாடுகளில் மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 0.3 சதவீதம் போ் மட்டுமே குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் உள்ளவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

தடுப்பூசி உற்பத்தி திறன், உலக சுகாதார அமைப்பு, ஏசிடி- ஆக்சிலேட்டா் கூட்டாளா்கள், சா்வதேச நிதி நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரா்களுடன் சமாளிக்கக்கூடிய அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஒரு பணிக்குழுவை அமைக்க ஜி-20 நாடுகள் முன்வர வேண்டும். இதன்மூலம் கொரோனா தடுப்பூசியை உலக அளவில் விநியோகம் செய்யும் பணிகளை உத்வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *