அமெரிக்க, பிரேசில் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது!

இந்தியாவில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை, மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது. இதன் மூலம் மூன்று லட்சம் இறப்புகளைக் கடந்த அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

இறப்புகளின் எண்ணிக்கை மூன்று லட்சங்களை மீறியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக கடுமையான அடையாளத்தை கடக்கும் மூன்றாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. 5,89,703 இறப்புகளுடன் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. 4,48,208 இறப்புகளுடன் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கடந்த பல வாரங்களாக இந்தியா ஆயிரக்கணக்கான இறப்புகளைப் பதிவு செய்து வருகிறது. இது பல மாநிலங்களில் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவமனை படுக்கைகளின் பற்றாக்குறையால் நிகழும் மரணங்கள் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்புகளின் அதிகரிப்பு மொத்த எண்ணிக்கையை 2,65,30,132 ஆக உயர்த்தியது. நேற்று மட்டும் ஒரே நாளில் 2.4 லட்சம் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
கொரோனா நிலைமையைக் கையாள்வது குறித்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான மத்திய அரசு, வைரஸின் புதிய வகை ஆபத்தான மாறுபாடுகள் மற்றும் மக்கள் கொரோனா நடத்தை விதிகளை முறையாக பின்பற்றாததால் அதிகரித்திருப்பதாகக் கூறினாலும், சமீபத்தில் நடைபெற்ற கும்பமேளா மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் நோய்த்தொற்றுகள் அதிகரிக்க வழிவகுத்தது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *