மூச்சுத்திணறல் உள்ளவர்கள் கையை தட்டினால் உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்கும்?

மூச்சுத்திணறல் உள்ளவர்கள் கையில் வேகமாக தட்டுவதன் மூலம் ஆக்சிஜன் கிடைக்கும் என்றும் இது உயிர் காக்க உதவும் எனவும் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. இவற்றின் உண்மைத்தன்மை என்ன? – பார்க்கலாம்…

கைகளை தட்டுவது பாராட்டுதலுக்கு அடையாளம். வரவேற்புக்கு அடையாளம். ஆனால், சமீபமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடும் மூச்சுத்திணறலில் இருப்போருக்கு தற்காலிக தீர்வாக அவர்களது கையை வேகமாக தட்டுவதன் மூலம் நுரையீரலுக்கு ஆக்சிஜன் கிடைக்கச் செய்ய முடியும் என சிலர் வீடியோக்களை பரப்பி வருகின்றனர்.

இதுபோன்ற வீடியோக்களை நம்பி எதையும் முயற்சிப்பது ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் நோயாளியை மேலும் பாதிக்கக் கூடும் என எச்சரிக்கிறார் அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை துறை மருத்துவர் அம்பிகா.

இதுபோன்ற வீடியோக்களை நம்பி முயற்சித்தால் விபரீதம் ஆகும் என எச்சரிக்கிறார், ராஜிவ் காந்தி மருத்துவமனை நுரையீரல் நிபுணர் டாக்டர் சுந்தரராஜ பெருமாள். கை தட்டுவதற்கும், நுரையீரலுக்கு ஆக்சிஜன் கிடைப்பதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், உலக அளவில் எந்த ஆய்வுகளும் இதனை நிரூபிக்கவில்லை என்றும் கூறுகிறார் நுரையீரல் சிகிச்சை நிபுணர் சுந்தரராஜ பெருமாள்.

இதுபோன்ற வீடியோக்களை பார்த்து ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிக்கு யாரேனும் வீட்டிலேயே கையை தட்டிக் கொண்டிருந்தால் அந்த நபர் உயிரிழக்கக் கூட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கும் மருத்துவர்கள், இந்தக் கொரோனா பேரிடரில் மக்களை தவறாக வழிநடத்த முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *