சீனாவில் 3 கோடி ஆண்கள் திருமணம் முடிக்கவில்லை அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!

சீனாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நாட்டில் சுமார் 3 கோடி திருமணமாகாத ஆண்கள் உள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது சில நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனர்களிடையே பல ஆண்டுகளாக நீடிக்கும் ஆண் குழந்தை மோகம் தான் பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுத்தும் காரணியாக உள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிறக்கும் சிறுமிகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு இருப்பதாகக் கூறினாலும், பாலின இடைவெளி பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் ஏழாவது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தேசிய புள்ளிவிவர பணியகம் (என்.பி.எஸ்), கடந்த ஆண்டு பிறந்த 12 மில்லியன் குழந்தைகளில், ஒவ்வொரு 100 சிறுமிகளுக்கும் 111.3 சிறுவர்கள் இருந்தனர். 2010 இல், இந்த விகிதம் 100 சிறுமிகளுக்கு 118.1 சிறுவர்கள் இருந்தனர்.

“பொதுவாக சீனாவில், ஆண்கள் தங்களை விட மிகவும் இளைய வயது பெண்களை திருமணம் செய்கிறார்கள். ஆனால் மக்கள்தொகை அடிப்படையில், இன்னும் வயதான ஆண்கள் திருமணம் ஆகாமல் உள்ளனர். இது நிலைமையை பெரிதுபடுத்துகிறது. சீன குடும்பங்களில் மகள்களை விட மகன்கள் மீது விருப்பம் அதிகம் உள்ளதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.” என்று பேராசிரியர் ஸ்டூவர்ட் கீடன்-பாஸ்டன் கூறினார்.

மற்றொரு பேராசிரியரான பிஜோர்ன் ஆல்பர்மேன், திருமண வயதை எட்டும் நேரத்தில் சாத்தியமான மணப்பெண்களை கண்டறிவதில் பெரும் பற்றாக்குறை இருப்பதாக எச்சரித்தார். “கடந்த ஆண்டு பிறந்த இந்த 1.2 கோடி குழந்தைகளில், 6,00,000 சிறுவர்கள் வளரும் போது அதே வயதில் திருமண துணையைக் கண்டுபிடிக்க முடியாது.” என்று அவர் கூறினார்.

சீனாவின் ஒரு குழந்தைக் கொள்கை, 1979’இல் நடைமுறைப்படுத்தப்பட்டு, 2016’இல் திரும்பப் பெறப்பட்டது. சிறுவர்களுக்கு ஆதரவாக பாலியல்-தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்பு நடைமுறையை இந்த திட்டம் அதிகப்படுத்தியுள்ளது என்று மக்கள்தொகை பேராசிரியர் ஜியாங் குவான்பாவ் கூறினார்.

இதற்கிடையில், சீனாவின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.3 குழந்தைகள் என்ற அளவில் உள்ளது. ஒரு நிலையான மக்கள் தொகையை பராமரிக்க தேவையான 2.1’க்கும் குறைவாக இது உள்ளது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆண்கள் மணப்பெண்களைக் கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டதை எடுத்துரைத்து, சமூக மக்கள்தொகையின் இணை பேராசிரியர் காய் யோங், திருமணம் செய்யமுடியாமல் அவர்கள் உடல் மற்றும் உளவியல் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தார்.
பாலின இடைவெளியை மேம்படுத்த சமூக அணுகுமுறைகளை மாற்ற சிறிது காலம் எடுக்கும் என்று ஆல்பர்மேன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *