இந்தியாவில் தினசரி கொரோனா மரணம் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவின் ரோட்ஸ் ஐலண்ட் மாகாணத்தில் உள்ள பிராவிடன்ஸ் நகரத்தில் இருக்கும் பிரவுன் பல்கலைக்கழக பொது சுகாதார கல்வி நிறுவன டீன் ஆஷிஷ் கே.ஜா. கொரோனா நோய் பரவல் மற்றும் இறப்பு விகிதம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவர் தனது ஆய்வு முடிவுகளை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: இந்தியாவில் தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாவதாக அரசு தினமும் புள்ளிவிவரம் வெளியிடுகிறது. ஆனால், இது உண்மையல்ல. தினசரி இறப்பு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கும். மயானங்களை பார்த்தாலே சாவு எண்ணிக்கையை எளிதாக கணக்கிடலாம். கொரோனா தாக்கம் இல்லாத 2019ல் இந்தியாவில் தினமும் சராசரியாக 27 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது தினமும் 27 ஆயிரம் சடலங்களை இந்தியாவின் மயானங்களில் எந்தவித சிரமுமின்றி அடக்கமோ, தகனமோ செய்துள்ளனர்.

ஆனால், இப்போது அரசு கணக்கின்படி கூடுதலாக 4 ஆயிரம் பேர் கொரோனாவால் இறப்பதால் திடீரென மயானங்களில் நெருக்கடி ஏற்படாது.  24 மணி நேரமும் சடலங்களை தகனம் செய்ய வேண்டிய நிலை உருவாகாது.  விறகுகள் தட்டுப்பாடு ஏற்படாது. சராசரியைவிட 2 முதல் 4 மடங்கு சடலங்கள் தினமும் மயானங்களுக்கு வருகின்றன. அப்படியென்றால், தினமும் 55 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை தினமும் இறந்து போகிறார்கள். சாதாரண இறப்புகள் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் என்று வைத்துக்கொண்டால்கூட, கொரோனாவால் தினமும் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்பதுதான் என் கணிப்பு. கொரோனா தொற்றுக்கு ஆளாவோரில் 1 சதவீதம் என்றால், தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை இருக்கும். சர்வதேச அளவில் நோய் தொற்று பற்றிய பொன்மொழி ஒன்று உண்டு.

நீங்கள் நோயை கண்டுகொள்ளாமல் இருக்கலாம், பரிசோதனைகள் செய்யாமல் இருக்கலாம், நோயால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கையை குறைத்து காட்டலாம். ஆனால் சடலங்களை மறைக்க முடியாது. இந்தியாவில் தினமும் குவியும் சடலங்கள், கொரோனா தொற்றின் பாதிப்பு அரசின் புள்ளிவிவரங்களைவிட பல மடங்கு அதிகம் என்பதையே காட்டுகிறது.  இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *