இஸ்ரேல் நாடு உருவான வரலாறு!

இஸ்ரேல் நாடு உருவான வரலாறு
இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த நேரம். யூதர்களுக்காக ‘இஸ்ரேல்’ என்ற நாட்டை உருவாக்க அமெரிக்கா முடிவு செய்தது.

‘ஹிட்லரால் கொடுமைப்படுத்தப்பட்டு சின்னாபின்னமானவர்கள் யூதர்கள். பாவம். அவர்கள் நாடில்லாதவர்கள். அவர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டாமா?’ என்று யூதர்களுக்காக ஒரு நாட்டை அமைக்கும் முயற்சி நடந்தது.

‘மேற்கு ஆசியாவின் பாலஸ்தீனப் பகுதிதான் யூதர்களின் தாயகப் பகுதி. எனவே பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றி புதிய நாட்டை உருவாக்குவோம்’ என இந்த முயற்சிகள் தொடங்கின.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இருந்தே பாலஸ்தீனத்தில் பிலிஸ்தியர் என்ற இனம் வாழ்ந்து வந்திருக்கிறது. அவர்கள் வேறு யாருமில்லை. பாலஸ்தீனர்கள்தான்.

பைபிளில், சிறுவன் தாவீது கவண் கல் எறிந்து கோலியாத் என்ற அரக்கனை வீழ்த்துவார் இல்லையா? அந்த கோலியாத் பிலிஸ்திய இனத்தைச் சேர்ந்தவர்தான்.

அமெரிக்காவைப் போலவே இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க ஆர்வம் காட்டிய இன்னொரு நாடு இங்கிலாந்து. காரணம், பாலஸ்தீனம் அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இஸ்ரேல் என்ற நாட்டை அங்கே உருவாக்கினால் பிரான்ஸ் நாட்டின் செல்வாக்கை அந்தப் பகுதியில் இல்லாமல் ஆக்கிவிடலாம் என்று இங்கிலாந்து கணக்குப் போட்டது.

இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க அமெரிக்காவும், இங்கிலாந்தும் இவ்வளவு ஆர்வம் காட்டியதற்கு இன்னொரு வேடிக்கையான காரணமும் இருந்தது.

எகிப்தின் செங்கடல் பகுதியில் இருந்த சூயஸ் கால்வாயைப் பாதுகாக்க இந்த இரு நாடுகளுக்கும் ஒரு இரவுநேர காவலாளி தேவைப்பட்டார்.

அப்படி ‘நைட் வாட்ச்மேனாக’ நம்ம ஆள் ஒருவர் அந்தப் பகுதியில் இருந்தால் நன்றாக இருக்குமே என்பதற்காக, இஸ்ரேல் நாட்டை உருவாக்க அமெரிக்காவும், இங்கிலாந்தும் அளப்பரிய ஆர்வம் காட்டின.

1947ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரபு மக்களின் எண்ணிக்கை 13 லட்சம். அதே காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த யூதர்களின் எண்ணிக்கை வெறும் 6 லட்சம் தான். பாலஸ்தீனத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் வெறும் 7 விழுக்காடுதான் யூதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.

பாலஸ்தீனம் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டபோது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக ஜெருசலேம் நகரில் ஒரே ஒரு யூத குடும்பம்தான் குடியிருந்தது.

இப்போது புதிதாக உருவாகப்போகும் இஸ்ரேல் நாட்டுக்காக உலகம் முழுவதும் இருந்து யூதர்களை இறக்குமதி செய்யும் வேலை ஆரம்பமானது.

ரஷியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த யூதர்கள், ‘அஸ்கெனாசி’ என்ற பெயருடன் பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கினார்கள். மேற்குலக யூதர்களும் இஸ்ரேலில் குவிய ஆரம்பித்தனர்.

இந்த இறக்குமதி வேலையில் மிகுந்த முனைப்புடன் இருந்தவர் டேவிட் பென்குரியன் என்ற யூதர். (பின்னாளில் இவர் இஸ்ரேல் நாட்டின் தேசத்தந்தையாக மாறினார்).

‘பாலஸ்தீனத்தில் வாழ்பவர்கள் (பாலஸ்தீனர்கள்) பத்து காசுக்குக் கூட பயனில்லாதவர்கள். அவர்கள் இருந்தும் ‘இல்லாத’ மக்கள். ஆகவே பாலஸ்தீனத்தை மக்கள் இல்லாத நாடாக்க வேண்டும். .அதை நாடில்லாத மக்களுக்கு (அதாவது யூதர்களுக்கு) தர வேண்டும்’ என்பது பெரியவர் பென் குரியன் உதிர்த்த மணிமொழி.

இஸ்ரேல் நாட்டின் இரண்டாவது பிரதமராக மாற இருந்த கோல்டா மேயர் என்ற அம்மையாரோ, ‘பாலஸ்தீனிய மக்கள் என்று யாரும் இல்லை. அவர்கள் தனிநாடு பெறத் தகுதியில்லாதவர்கள்’ என்று பேசினார்.

இஸ்ரேல் உருவாக இருந்த காலகட்டத்தில் இர்குன், லெகி என்ற பெயர்களில் இயங்கிய யூத தீவிரவாத இயக்கங்கள், ஜெருசலேம் நகரில் அடிக்கடி புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டி வந்தன. பின்னாளில் இஸ்ரேலின் மற்றொரு பிரதமராக மாறிய மெனாகெம் பெகின் கூட, இர்குன் தீவிரவாத அமைப்பின் முன்னாள் உறுப்பினர்தான்.

இப்போது யார் யாரையோ பயங்கரவாதிகள் என்று இந்த உலகம், முத்திரை குத்தி வைத்திருக்கிறது அல்லவா? இந்த பயங்கரவாதத்துக்கு உலகில் முதன்முதலில் விதை தூவியவர்கள் இந்த யூத தீவிரவாதிகள்தான்.

1946 செப்டம்பர் மாதம், ஜெருசலேம் நகரில் உள்ள கிங் டேவிட் ஓட்டலுக்கு இந்த யூத தீவிரவாதிகள் குண்டுவைத்ததில் 91 பேர் பலியானார்கள். அவர்களில் 41 பேர் அரபுகள், 28 பேர் இங்கிலாந்துகாரர்கள், 17 பேர் யூதர்கள்.

பன்னாட்டு மன்றமான ஐ.நா., பாலஸ்தீனத்தைப் பங்கு பிரிக்கும்போது, எங்கே ஜெருசலேம் நகரத்தையும், நெகேவ் பாலைவனப்பகுதியையும் ஜோர்டான் நாட்டுக்குத் தாரை வார்த்து விடுமோ, நமக்கு வெறும் மேற்கு கலிலேயா பகுதிதான் மிஞ்சுமோ என்ற பயம் யூத தீவிர வாதிகளுக்கு ஏற்பட்டு விட்டது.

இதனால், பன்னாட்டு மன்றத்தின் இடைநடுவராக இருந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த போல்க் பெர்னதத் என்ற அதிகாரியை ஜெருசலேம் நகரில் வைத்து ஒரு யூத தீவிரவாத இயக்கம் சுட்டுக் கொன்றது.

இப்படி குண்டுவைப்பதும், சுட்டுக்கொல்வதும் பயங்கரவாதம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆமாங்க. மற்றவர்கள் இப்படிச் செய்தால் அவர்கள் பயங்கரவாதிகள். யூதர்கள் செய்தால் அவர்கள் தேசப் பக்தர்கள், விடுதலை விரும்பிகள்.

1948ஆம் ஆண்டு, மே 15ஆம்தேதி இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டதாக பிரகடனம் செய்யப்பட்டது. இஸ்ரேல் உருவானபோது, ‘நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் இந்த நாடு எங்களுக்குக் கடவுள் தந்தது’ என்று டேவிட் பென்குரியன் திருவாய் மொழிந்தார். (கடவுள் எப்பப்பா ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் ஆனார்?)

இஸ்ரேல் நாடு உருவான இரண்டொரு வாரங்களில் அண்டை அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் வெடித்து விட்டது.

காஸா பகுதியும், யோர்தானின் மேற்குக் கரை பகுதியும் முழுக்க முழுக்க பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகள். இந்தநிலையில் போர் தொடங்கியதும், ஜெருசலேம் நகரம் உள்பட ஒட்டு மொத்த மேற்குக்கரைப் பகுதியையும் இஸ்ரேல் விழுங்கிக் கொண்டது. காஸா பகுதி இஸ்ரேலிய கடற்படையின் முற்றுகையில் சிக்கியது.

என்ஜெடி பாலைவனப் பசுஞ்சோலை, சாக்கடலின் தென்மேற்குக் கரை எல்லாம் இஸ்ரேலின் பிடியில் வந்துவிட்டது.

இஸ்ரேல் உருவானபோது, பன்னாட்டு மன்ற பொதுச்செயலாளராக இருந்த நார்வே நாட்டின் திர்க்விலி, இஸ்ரேலுக்கு ஒதுக்கியது 55 விழுக்காடு பரப்பளவுதான். ஆனால் முதல்போரில் பாலஸ்தீனத்தின் 80 விழுக்காடு பகுதியை இஸ்ரேல் விழுங்கிக் கொண்டது.

இந்தப்போரின்போது இஸ்ரேலின் முதல் பிரதமராக மாறியிருந்த டேவிட் பென் குரியன், அல்டாலனா என்ற கப்பலை மூழ்கடிக்க உத்தரவிட்டார்.

இந்த அல்டாலனா கப்பல், அரேபியர்களுக்குச் சொந்தமான கப்பல் என்று நீங்கள் நினைத்திருந்தால் தவறு. அது இர்குன் என்ற யூத தீவிரவாத இயக்கத்துக்குச் சொந்தமானது.

இர்குன் இயக்கம், இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்காததால் அவர்கள் யூதர்கள் என்றாலும் அவர்களது கப்பலை மூழ்கடிக்க பென் குரியன் உத்தரவிட்டார். என்ன ஒரு தயாள சிந்தனை பாருங்கள்.

சகோதர யூத இயக்கம் ஒன்றுக்கே இவ்வளவு சலுகை காட்டிய பெருமகன், அரபு சகோதரர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொண்டிருப்பார்?

பாலஸ்தீன மக்களை பாலஸ்தீனத்தில் இருந்து விரட்டியடிக்க தாலெத் (Dalet) என்ற மறைமுகத் திட்டத்தை இஸ்ரேல் நாடு வகுத்திருந்தது. மிர்ட்ஸ்சா நிகோயோன் (Mirtza Nikoyon) அதாவது இன சுத்திகரிப்பு என்றும் அது அழைக்கப்பட்டது.

1948ல் நடந்த போருக்கு அடுத்த ஆண்டு ஜெரிக்கோ நகரம், ஹெப்ரான் பகுதிகளை இஸ்ரேல் திருடிக்கொண்டது. இப்படியாக 78 விழுக்காடு அரபு மொழி பேசும் மக்கள் வாழ்ந்த பாலஸ்தீனப் பகுதியில் ஒட்டிக் கொண்டு உருவான இஸ்ரேல், கொஞ்சம் கொஞ்சமாக வீங்கி வெடிக்க ஆரம்பித்தது.

ஒட்டகம் முதலில் கூடாரத்துக்குள் மூக்கை நுழைத்தது. பின்னர் முதுகை உள்ளே புகுத்தியது. முடிவில் அது அரேபியனை வெளியே தள்ளி கூடாரத்தைத் தனதாக்கிக் கொண்டது.

கூடாரத்தில் ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த அரேபியனின் கதை உண்மையில் கதையல்ல. பாலஸ்தீனத்தில் நடந்த நிஜமான வரலாறு அது

இஸ்ரேல், 280 மைல் நீளமும், 85 மைல் அகலமும் கொண்ட நாடு. அதன் வடமுனை தென் முனை வழியாக 7 மணிநேரத்தில் இஸ்ரேலைக் கடந்து விடலாம். அதுவே கிழக்கு மேற்காக என்றால் 90 நிமிடங்களில் கடந்து போய் விடலாம்.

இந்த இஸ்ரேல்தான் பபுள்கம் முட்டை அளவுக்கு இருந்து பலூன் சைசுக்கு விரிய ஆரம்பித்தது.

இஸ்ரேல், முட்டையில் இருந்து குஞ்சாக வெளிவந்து கண்விழித்தபோது அதைக் கண்டு பரிதாபப்பட்டவர்கள் பலர். இத்தனை அரபு நாடுகளுக்கு இடையிலே இவ்வளவு குட்டியூண்டு நாடாக இஸ்ரேல் பிறந்திருக்கிறதே, இது எப்படி பிழைக்கப் போகிறது என்று பலர் கவலைப் பட்டார்கள்.

இஸ்ரேல் நாடு உருவானபோது அதை முந்தியடித்துக் கொண்டு அங்கீகரித்த நாடுகளில் சோவியத் ரஷியாவும் ஒன்று.

யூதர்கள் ‘கிப்புட்ஸ்’ என்ற பண்ணைமுறையை வைத்திருந் ததால் இஸ்ரேல் ஒரு கம்யூனிச நாடாகி விடும் என்று அப்போதைய ரஷிய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஒரு (தப்புக்) கணக்கு போட்டிருந்தார்.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே முதல்போர் வெடித்தபோது இரண்டாம் உலகப் போர்காலத்து ஆயுதங்களை வேறு ஸ்டாலின், இஸ்ரேலுக்கு அள்ளித்தந்தார். பிறகு இஸ்ரேலின் உண்மை முகம் இதுதான் என்று தெரிய வந்தபோது ஜோசப் ஸ்டாலின் அப்படியே அதிர்ந்து போனார்.

அவ்வளவு பெரிய ஹிட்லரையே போட்டு பொள பொள என்று பொளந்தவர் ஜோசப் ஸ்டாலின். ஆக, அந்த ஜோசப் ஸ்டாலினுக்கே வெகு இலாகவகமாக விபூதியடித்தவர்கள்தான் இஸ்ரேலியர்கள்.

இஸ்ரேல் நாடு உருவான புதிதிலேயே அண்டை அரபுநாடுகளில் அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. சிரியா நாட்டில் அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ.யின் உதவியுடன் ஒரு ராணுவப்புரட்சி நடத்தப்பட்டது. இஸ்ரேலுக்கு வேண்டப்பட்டவரான ஹோஸ்னி செய்ம் என்பவர் சிரியாவின் தலைவராக்கப்பட்டார்.

மற்றொரு அண்டை நாடான ஜோர்டானின் மன்னராக இருந்தவர் அப்துல்லா. அவருக்கு பாலஸ்தீன மக்கள் தனது கொடியின் கீழ், அம்மான் நகரை தலைநகரமாய் கொண்ட ஜோர்டான் நாட்டுக்கு அடிபணிந்து வாழ வேண்டும் என்று நீண்டநாளாக ஆசை.

அப்துல்லாவின் இந்த அடாத ஆசையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் இஸ்ரேலிய பிரதமர் பென் குரியன். அப்துல்லாவுடன் அவர் ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்.

பாலஸ்தீனத்தை தனதாக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக ஒரு கட்டத்தில் பாலஸ்தீன மன்னராக, நமக்கு நாமே திட்டம் மாதிரி, தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார் அப்துல்லா.

இஸ்ரேல் என்ற எதிரி ஒருபக்கம் இருக்க, அப்துல்லா என்ற துரோகியையும் இப்போது எதிர் கொண்டார்கள் பாலஸ்தீனர்கள்.

1951ஆம் ஆண்டு, ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்சா மசூதிக்கு மன்னர் அப்துல்லா தொழுகைக்கு வந்திருந்த நேரம். முஸ்தபா சுக்ரி என்ற தையல்காரர், மசூதியின் தலை வாசலுக்குப் பின்னால் மறைந்திருந்து மன்னர் அப்துல்லாவைத் தீர்த்துக் கட்டி விட்டார்.

பதிலுக்கு மன்னரின் பாதுகாவலர்கள் முஸ்தபா சுக்ரியை அதே இடத்தில் சுட்டுக்கொன்று விட்டார்கள்.

தையல்காரர் முஸ்தபா சுக்ரி, இஸ்ரேல் உருவானபோது நடந்த முதல் போரில், ஜெருசலேம் நகரை மீட்க அரபுப் படைகளுடன் சேர்ந்து போரிட்டவர் என்பது பின்னர் தெரிய வந்தது.

இஸ்ரேல் நாடு உருவாவதற்கு முன்பே யூத தலைர்கள் பலர் ‘அகண்ட இஸ்ரேல்’ என்று ஒரு கனவுத்திட்டத்தை கைக்குள் வைத்திருந்தார்கள். அதாவது எவ்வளவு முடியுமோ அவ்வளவு இஸ்ரேலின் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான் அகண்ட இஸ்ரேல் திட்டம்.

எடுத்துக்காட்டாக மாக்ஸ் நோர்ட்டோ என்ற யூத தலைவர் எழுதிவைத்திருந்த தகவலை இங்கே சொல்லி விடுவோம்.

‘பாலஸ்தீனத்துக்குப் போய் அங்கே நமது எல்லைகளை யூப்ரடிஸ் நதி வரை விரிவுபடுத்துவோம்’ என்பதுதான் அவர் எழுதிவைத்த வாசகம். ஒரு வாசகமானாலும் திருவாசகம்.

யூப்ரடிஸ் ஆறு, இராக் நாட்டில் ஓடுகிறது. அதாவது இராக் நாடு வரை இஸ்ரேலை இவருக்கு விரிவுபடுத்த வேண்டுமாம். (ஆசையைப் பாருங்கள்!).

இதற்கிடையே எகிப்து நாட்டின் மாபெரும் தலைவராக உருவாகியிருந்தார் கமால் அப்துல் நாசர். எகிப்து நாட்டின் நீண்டநெடிய வரலாற்றில் எகிப்தியர்கள் யாரும் எகிப்துக்கு தலைவராக இருந்ததில்லை. (அங்கேயுமா?)

நெக்டானிபோ என்ற பாரோ மன்னருக்குப்பிறகு எகிப்தை ஆள வந்த முதல் எகிப்தியர் நாசர்தான். அவருக்கு முன்பு, எகிப்தை கடைசியாக ஆண்ட பாரூக் மன்னர் அல்பேனியா நாட்டுக்காரர். (எகிப்திய அரசி கிளியோபாட்ரா கிரேக்க நாட்டுப் பெண்)

நைல் நதிக்கு குறுக்கே அஸ்வான் என்ற அணையைக் கட்டி நாட்டை வளமாக்க வேண்டும் என்பது நாசரின் கனவுகளில் ஒன்று. கனவு சரி. அதற்கு காசு வேண்டுமே? அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளிடம் நிதியுதவி கேட்டார் நாசர். (கடனாகத்தான்).

ஆரம்பத்தில் நிதி தருவதாகச் சொன்ன அமெரிக்காவும், இங்கிலாந்தும் பிறகு திடீரென என்ன நினைத்ததோ? கைவிரித்து விட்டன. ‘பங்காளி. அவனுக்கு பத்து டாலர் கூட குடுக்காதே. அவன் ஆபத்தானவன்’ என்று இஸ்ரேல் சொல்லியிருக்க வேண்டும்.

நாசரின் பார்வை இப்போது எகிப்தில் இருந்த சூயஸ் கால்வாயின் மீது விழுந்தது.

சூயஸ் கால்வாய் எகிப்திய மண்ணில் இருந்தாலும், அதன்மூலம் வரும் வருவாயில் பெரும்பகுதியை இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகள்தான் அனுபவித்து வந்தன. ‘அணைகட்ட பணம் தர மாட்டேன்ங்கிறாங்க. பேசாம சூயஸ் கால்வாயை தேசிய உடைமையாக்கிக் கொண்டால் என்ன? அதன்மூலம் பணம் வருமே. அதில் அணை கட்டலாமே?’ என்று யோசித்தார் நாசர்.

1956ஆம் ஆண்டு, ‘சூயஸ் கால்வாய் இனி எகிப்துக்கு மட்டுமே சொந்தம்’ என்று அறிவித்தார் நாசர். அவ்வளவுதான் வெடித்தது சூயஸ் போர்!

நியாயமாகப் பார்த்தால் சூயஸ் கால்வாயை எகிப்து சொந்தமாக்கினால் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளுக்குத்தான் கோபம் வர வேண்டும். ஆனால் இங்கே இஸ்ரேலுக்குத்தான் முதலில் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

எகிப்து மீது இஸ்ரேல் போர் தொடுக்க, அதன்பிறகு இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளும் எகிப்துக்கு எதிராக களத்தில் இறங்கின.

போர் தொடங்கிய 100 மணிநேரத்தில் எகிப்தின் சினாய் தீபகற்பத்தை இஸ்ரேல் கைப்பற்றியது. பாலஸ்தீனர்களின் காசா பகுதியையும் இஸ்ரேல் கபளீகரம் செய்தது. எகிப்தின் போர்ட் செயித் துறைமுகம் போன்ற பகுதிகளும் எதிரிகளின் கையில் சிக்கின.

இப்போது உங்களுக்கு ஒன்று புரிந்து போயிருக்கும். கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்தி எல்லைகளை விரிவாக்க வேண்டும் என்பதுதான் இஸ்ரேலின் திட்டம்.

இந்தநிலையில், இஸ்ரேலைப் பற்றி சில அரபுத் தலைவர்கள் அடித்த கமெண்ட்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த கமெண்ட்கள் வருமாறு:

‘இஸ்ரேல் நாடு, இஸ்லாமிய உலகு என்ற உடலில் தோன்றிவிட்ட நாற்றம்மிகுந்த, சீழ்பிடித்த கட்டி. அதை வெட்டி அகற்ற வேண்டும்’

‘இஸ்ரேல், குடிபுகுந்த மக்கள் மட்டுமே நிறைந்த ஒரு போலியான நாடு. இங்கே உள்ள யூதர்கள் அவரவர் வாழ்ந்து நாடுகளுக்குத் திரும்பிப் போயாக வேண்டும்’

‘இஸ்ரேல் என்ற நாடே இந்தப்பகுதியில் இருக்கக் கூடாது. இஸ்ரேலை பனிபடர்ந்த அலாஸ்கா பகுதிக்கு மாற்ற வேண்டும்’

‘‘இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் அமெரிக்காவால் பணிக்கு அமர்த்தப்பட்ட ஒரு போலீஸ்காரன்’

‘ஹிட்லர் ஜெர்மன் நாட்டுக்காரர். ஹிட்லர் யூதர்களைக் கொடுமைப்படுத்தியிருந்தால் ஜெர்மன் நாட்டின் ஒரு பகுதியில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்குங்கள். அதை விட்டுவிட்டு எங்களுக்குப் பக்கத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி ஏன் எங்கள் தாலியை அறுக்கிறீர்கள்? தப்பு செய்தவன் ஜெர்மன்காரன். தண்டனை அனுபவிப்பது நாங்களா?’

இப்படி எல்லாம் அரபுத் தலைவர்கள் இஸ்ரேலுக்கு வாழ்த்துரை வழங்கியிருந்தார்கள்.

இவை எல்லாவற்றையும் விட அரபுத் தலைவர் ஒருவர் இஸ்ரேல் பற்றி சொன்ன வர்ணனை கொஞ்சம் ஒருமாதிரியானது.

அவர் சொன்ன அந்த வர்ணனை.

‘இஸ்ரேல் என்பது இடம்மாற்றி நடப்பட்ட மயிர்!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *