ஆயுளுக்கு எதிரியாகும் கொரோனா
அரசுகளும் அதிர்ச்சியில் விறைப்பு!

உலகையே அழவைத்துள்ள கொரோனா இன்று மூன்றாம் அலையாகத் தாண்டவமாடுகிறது. இதைத் தீர்த்துக் கட்டத் தைரியமின்றி உலக அரசுகளெல்லாம் அதிர்ச்சியில் விறைத்துப் போயுள்ளன. 2020 மார்ச்சில் ஊசலாடி, பின்னர் ஓய்ந்து, அதன் பின்னர் ஆகஸ்டில் இரண்டாம் அலையென எம்மை அச்சத்திலாழ்த்தியது இது. இப்போது 2021 மூன்றாம் படையெடுப்பாகியுள்ளதால், உலக அரசுகள் எல்லாம் மூச்சிழந்து கிடக்கின்றன. இத்தனைக்கும் நுணுக்குக்காட்டியிலும், கண்ணுக்குத் தெளிவாகத் தென்படாததுதான் இந்தக் கொரோனா. அமெரிக்கா, பிரேசில், இந்தியா என அனைத்து நாடுகளிலும் அரசுகளை ஆட்டங்காணச் செய்யுமளவு இதன் வீரியம் விறைப்படைந்துள்ளது. பிரித்தானியா, ஆபிரிக்க நாடுகளில் உருமாறி வீரியமடைந்தவை, மூன்றாம் அலையென, ஆயுள்களை அழித்து வருவதுதான் இன்று மானிட நிம்மதியை நெருப்பாக்கி உள்ளது.

எமது நாட்டிலும் இதனால் ஏற்படவுள்ள, அழிவுகள் குறித்து எச்சரிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆயிரத்தை எட்டப்பார்க்கிறது உயிரழிவுகள். ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டால் ஆறுதலடையக் கூடிய நிலைமைதானிது. ஆனால், எதிர்காலத்தில் இன்னுமேற்படுமென விடுக்கப்படும் எச்சரிக்கைகள், பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார விதிமுறைகளைப் பேணும்படி போடப்படும் சட்டத்தின் இறுக்கங்கள் எதையோ, உள்ளூரப் பயமுறுத்துகிறது. நாளாந்தத் தொற்றுக்கள் இரண்டாயிரத்தை எட்டி, இழப்புக்கள் இருபதையும் தாண்டுவாதால், இந்தியாவுக்கு அடுத்த ஊழித்தாண்டவம் இலங்கையில்தானோ? என்பதுதான் இன்று ஏற்பட்டுள்ள அச்சம்.

இது, இப்படி இருக்க, சுகாதார விதிமுறைகளைப் பேணுவதில்தான் நமது வாழ்க்கையின் விதியும் இருப்பதாகவே சுகாதாரத் துறையினர் நமக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர். இங்கிருந்துதான் இந்த எழுத்தின் பார்வைகளும் விரியப் போகின்றன. “எல்லாம் அவன் செயல்” என்பதை நம்பும் ஆத்மீகவாதிகள், இந்த அச்சுறுத்தல்கள், எச்சரிக்கைகளை கடந்த முதலாம், இரண்டாம் அலைகளின் போது கண்டுகொள்ளவில்லை. “வழிபாடு வணக்கஸ்தலங்களைத் திறந்துவிடுங்கள். கொரோனாவுக்குத் தீர்வு தருகிறோம்” என்றனர். ஆனாலும், இந்த மூன்றாம் அலைபற்றிய அச்சம், இவர்களது ஆத்மீக அறிவுகளிலும் அசைவுகளை ஏற்படுத்தி இருக்கலாம். மாதக் கணக்கில் மூடப்பட்டு கிடந்த மதஸ்தலங்களால் ஒரு முடிவுக்கு வரமுடியாது போயிற்று. விஞ்ஞானத்தை விஞ்சி, வெற்றி தேடப்புறப்பட்ட ஆத்மீகம், கொரோனா விடயத்தில் தன்னை சுதாகரித்துக்கொண்டது. பண்டிகைகள், பெருநாட்கள் மற்றும் பிரார்த்தனைகள் இப்படி என, எப்படி முயற்சித்தும் மௌனித்தே போகின்றன மத நம்பிக்கைகள். இதனால்தான், இவ்விடயத்தில் விஞ்ஞானம் பெருமைப்படப் புறப்படுகிது.

அஸ்ட்ராஸெனிகா, ஸ்புட்னிக் வி, சினோபார்ம், கொவிக்ஸ், கொவிஷீல்ட் என்று மருத்துவத்தின் ஆளுமைகள், மனித ஆயுளை ஒழித்து வரும் கொரோனாவை ஒழித்துக்கட்ட ஓயாது உழைக்கின்றன. பரவாயில்லை, ஓரளவு ஒழிக்க முடிந்தாலும் அதிகரிப்பைத் தடுக்க இயலவில்லையே! நாளொன்றில் ஆயிரம் பேருக்கு சிகிச்சையளிக்கலாம், பத்தாயிரம் பேரைப் பார்ப்பது எப்படி.? இப்படி அதிகரிப்புக்கள் நாளாந்தம் ஆயிரமாக எகிறினால், ஒட்சிசன், மருந்துகள், கட்டில்கள் ஏன், வைத்தியர்களுக்கு எங்கே செல்வது. இதற்காகத்தான் சிலர், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுதான் பிரச்சினை. ஆயிரம் உணவுப் பொதிகள் உள்ளன, பத்தாயிரம் பேருக்கு எப்படிப் பங்கிடுவது? ஏனையோர், பட்டினிச் சாவுதான் போன்றுள்ளன கொரோனாத் தொற்றுக்கள். இதற்காகத்தான் இந்த சுகாதார விதிமுறைகள். இதை, அவசியம் பின்பற்றினால், அதிகரிப்பைக் கட்டுப்படுத்தலாம்.

தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க, சுகாதாரத் துறையில் ஒரு இலட்சம் பேரை உள்வாங்கவும் அரசு தீர்மானித்துள்ளது. நியமனங்களில் ஏற்படவுள்ள, அரசியல் பங்கீடுகள் இருக்கிறதே, இது காலத்தைக் கடத்தாமலிருந்தால் சரிதான். காலங்கடத்தல் இன்னும் சில ஆயுள்களைக் காவிச்செல்வதைத் தடுக்க முடியாமல்தானாக்கும். மக்கள் பிரதிநிதிகள் இன்றைய நெருக்கடியைச் சிந்தித்து, நீதமாக நடப்பார்கள் என்பது உறவுகளை இழந்துள்ள, இழக்கவுள்ள தவிப்பாளர்களின் எதிர்பார்ப்பு. ஏன், மனிதாபிமானமும் இதைத்தானே எதிர்பார்க்கிறது.

கட்டடங்கள், கட்டில்கள், மருந்துகள் உட்பட தற்காலிக வைத்தியசாலைகளுக்கான உதவிகளையும் இந்த மனிதாபிமானிகள்தானே செய்கின்றனர். ஆனால், முதலாளித்துவம் இந்த மனிதாபிமானத்தை விட்டபாடில்லை. உலக சுகாதார ஸ்தாபனத்தின் உத்தரவையும் மீறி, தங்களுக்கு வேண்டிய நண்பர்கள், நாடுகளுக்கே தடுப்பூசிகளை விநியோகிக்கின்றன. இதனால், ஏழை நாடுகளின் ஆயுள்கள், ஆறடி நிலங்களுக்கு அருகில் நிற்கின்றன. எனவே, எல்லா நாடுகளின் நிலைமைகளையும், தீர்மானிக்கப்போவது எது? முதலாளித்துவமா? மனிதாபிமானமா? அல்லது மத நம்பிக்கையா? மனச்சாட்சியே! ஒரு முடிவைச் சொல்லு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *