கொரோனா அச்சத்தைப் போக்குவது எப்படி?

கொரோனாவினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் ஏறக்குறைய அனைவருக்குமே தெரியும். நோய் வந்தவர்களின் மன நல பாதிப்புகள் புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

அது சரியாக வேண்டுமானால், நோயிலிருந்து மீண்டு வந்து பழைய உடல் வலிமையைப் பெற்றால் சரியாகிவிடும்.

ஆனால் நோய் வராமலேயே, கொரோனா காரணமாக மன நல பாதிப்புகள் இருக்கின்றனவா என்று கேட்டால், நிச்சயமாக இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும்.

கவலை, பயம், டென்ஷன், அமைதியின்மை, தூக்கமின்மை போன்றவை மனதை வாட்டுகின்றன.

நமக்கு வந்துவிடுமோ, நமக்கு தெரிந்தவர்களுக்கு, நண்பர்களுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்பன போன்ற பயங்கள்தாம் மிக அதிகம்.

இப்படி பயப்பட வேண்டியிருக்கிறதே என்கிற எரிச்சலும் கூடவே இருந்து கொண்டிருக்கும்.

யாருமே விரும்பி மன நிலையைக் கெடுத்துக் கொள்வதில்லை என்றாலும் இந்த உணர்ச்சிகளால் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இதை எப்படி எதிர்கொள்வது?

முதலில் நாம் எந்த உணர்ச்சியால் அமைதியின்றி இருக்கிறோம் என்பதை அடையாளம் காணுங்கள்.

அது பயம் என்று வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் புரியாத, தெரியாத, தெரிந்தும் எதுவும் செய்ய முடியவில்லையே என்று வரும்போது, மனதில் எழுவது பயம்தான். கொரோனா நிச்சயமாக அப்படிப்பட்ட விஷயம்தான்.

“பயப்படாதீர்கள்” என்று சொல்வது எவ்வளவு எளிதோ, அந்த அளவுக்கு அர்த்தமற்றதும் கூட. முதலில் பயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இதை எப்படிச் செய்வது? அதைப் பிரித்துப் புரிந்து கொள்ளுங்கள்.

எதனால் பயம்? நோயைப் பற்றியே பொதுவான நடுக்கமா? உங்களுக்கு வந்தால் என்ன செய்வது என்ற பயமா?

பொது பயத்தை எப்படி எதிர்கொள்வது?

அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொள்வதன் மூலம்தான் இதை எதிர்கொள்ள முடியும். இப்படிப்பட்ட பயம் அர்த்தமற்றது. ஏனெனில் இதுதான் சூழ்நிலை.

உலகம் முழுதும் அதன் பிடியில் இருக்கிறது. அதைப் பற்றி பயந்தால் என்ன பயன் என்று யோசித்துப் பாருங்கள். இந்த பயம் தேவையற்றது என்று தெரிந்துவிடும்.

எனக்கு வந்துவிட்டால்?

அடுத்தது, எனக்கு வந்துவிட்டால்… என்பது. இது நியாயமான பயம். ஆனால் அதற்குள் ஒரு உள் நிபந்தனை ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

கொரோனா எல்லோருக்கும் வருவதில்லை. வந்தாலும் எல்லோரையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை.

உங்களுக்கு ஏற்கெனெவே நீரிழிவு, கொலஸ்ட்ரால், அல்லது உடலை பலவீனமாக்கும் இதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்காக மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் அச்சப்படக் காரணங்கள் நிச்சயமாக இருக்கின்றன.

‘வருமுன் காப்பது’ என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

கொரோனாவை வர விடாமல் பாதுகாத்துக்கொள்வது எளிதுதானே? முகக் கவசம் அணிவதில் துவங்கி, சத்துணவு, தேவையான தூக்கம், சுடு நீர் குடிப்பது, ஆவி பிடிப்பது, கஷாயம் அல்லது ரசம், கபசுர குடிநீர் போன்றவற்றை உட்கொள்வது,

சக மனிதர்களுடன் இடைவெளியைப் பேணுவது என்பவற்றைச் செய்வதற்குப் பெரிய செலவு ஒன்றும் ஆகிவிடாது அல்லவா?

இதைத் தொடர்ந்து செய்து வந்தாலே மனதில் நம்பிக்கையும், நான் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்ற எண்ணமும் இருக்கும்.

இதுவே பெரும் திருப்தியைக் கொடுக்கும் அல்லவா? அப்போது பயம் தானாக விலகிப் போகும்.

பிறரைப் பற்றிய அச்சம்

அடுத்ததாக, சொந்தங்கள், நண்பர்களைப் பற்றிய கவலை, அதனால் பயம்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அவரவர் பாதுகாப்பு அவரவரிடத்தில்தான் இருக்கிறது. அவர்களுக்குத் தங்களது உடல் நலம், உயிர் போன்றவற்றின் மீது அக்கறை இருக்காது என நாம் ஏன் நினைக்க வேண்டும்?

ஒருவேளை அவர் அறியாமையில் இருக்கிறார் என நினைத்தால், அவரோடு அடிக்கடி பேசி, விசாரித்து உடல் நலனைப் பாதுகாக்க வேண்டியதை, அதை எப்படிச் செய்வது என்பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

இதைத் தவிர எதையுமே உங்களால் செய்ய முடியாது என்ற அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

அவர்கள் உங்களுடன் இருப்பவராக இருந்தால், பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்கச் செய்யலாம். இல்லாவிட்டால் அவரோடு பேசலாம் அவ்வளவுதான்.

அக்கறையின் பேரில்தான் இதையெல்லாம் செய்கிறோம் என்பதைச் சொல்லும் முறையின் மூலம் புரியவையுங்கள்.

ஊடகங்கள் பெருக்கும் அச்சம்

மூன்றாவதாகச் சூழல் குறித்த இனம் புரியாத பயம், மனக் கிலேசம் இருப்பது பலருடைய பிரச்சினையாக இருக்கிறது.

அதற்கு முக்கியக் காரணங்கள், கட்சி ஊடகங்கள், சமூக வலைதளங்கள், செய்தித்தாள்கள். இவற்றைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என்பதே பலருடைய அனுபவம்.

அவையெல்லாம் பொய்யா? அர்த்தமற்றவையா? நிச்சயமாக இல்லை. அனைத்தும் உண்மைதான். அப்படியானால் எப்படி பயப்படாமல் இருப்பது என்று கேட்கலாம்.

நம்மை அச்சுறுத்துபவற்றை, அமைதியிழக்கச் செய்பவற்றை ஒதுக்க வேண்டும். குப்பைகளைப் போல.

ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகள் சேரும். அதனால் நகரெங்கும் நாற்றமடிக்கிறதா? இல்லையே!

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குப்பைத் தொட்டிகளில் போடப்படும் குப்பைகளைத் திரட்டி எடுத்துச் செல்கிறார்கள் நகராட்சி ஊழியர்கள்.

சாலையோரக் குப்பைத் தொட்டிகளில் அளவுக்கு மேல் குப்பைகள் சேரும்போது, நாற்றம் எடுக்கிறது. நாம் அதைக் கடந்து போகும்போது சங்கடமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?

இது குப்பைத் தொட்டி, அப்படித்தான் நாற்றமடிக்கும் என்பதைப் புரிந்து கடந்து போகலாம். அது நம்மை பாதிக்காதவாறு மூக்கை மூடிக் கொள்ளலாம். அந்தப் பக்கம் போகாமல் வேறு பக்கம் போகலாம்.

அப்படித்தான் எதிர்மறையான சூழலைக் குறித்தும், அதை அதிகமாகச் சேர்த்துக்கொண்டு வரும் ஊடகங்களைப் பற்றியும் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

இங்கே குப்பை என்பது நம்மை அச்சுறுத்தும் எதிர்மறைச் செய்திகள் என்பது புரிந்திருக்கும்.

ஆனால், அதே ஊடகங்களில், புதிய மருந்துகள், எவ்வளவு பேர் குணமானார்கள், அரசும் தன்னார்வலர்களும் எந்த அளவுக்கு உதவுகிறார்கள் என்ற விஷயங்களும் சேர்ந்தே வருகின்றன.

அவற்றைப் படிப்பதும் பார்ப்பதும் கேட்பதும் நம் கையில்தானே இருக்கிறது. அதைச் செய்யலாமே.

எதிர்மறையான செய்திகளை மட்டுமே பார்த்து, படித்துக் கேட்டுக் கொண்டிருந்தால் மனம் பாதிக்கப்படத்தான் செய்யும். இவற்றுக்கிடையே நல்லவற்றைத் தேடிப் பெறுவது அவசியம்

கொரோனாவைத் தவிர்ப்பது நம்மிலிருந்துதான் துவங்குகிறது என்பதை மறக்காதீர்கள்.

இதை நம் கடைபிடிப்பது, நமது உற்றார்களையும் கடைப்பிடிக்க வைக்க முயற்சிப்பது ஆகியன மனதில் பயத்தையும் குழப்பத்தையும் அமைதியிமையையும் போக்குவதற்கு மிகவும் உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *