ஐ.நா. சபை ஓர் அறிமுகம்!

– பஸ்றி ஸீ. ஹனியா
சட்டத்துறை மாணவி
யாழ். பல்கலைக்கழகம்.

ஐ.நா. சபை என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், ஐ.நா. சபை என்ற பெயர் தெரியாதவர்கள் சிலரே.

இன்றைய ஐ.நா. சபை பற்றிய புரிதலில், ஐ.நா. சபை என்பது ஐக்கிய நாடுகளின் சபை ஆகும். ஐக்கிய நாடுகள் என்பது எளிய பொருளில், சமாதானமாக ஒன்றாக இருக்கும் பல நாடுகளின் ஒருங்கிணைப்பு ஆகும். ஆங்கிலத்தில் United Nations Organization எனப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் வேர் விட்டுப் பரந்து காணப்படும் மிகப் பெரிய சர்வதேச அமைப்பாகும். உலகத்தையே கைக்குள் வைத்திருக்கும் ஒரு மிகப் பெரும் சக்தி கொண்ட  சர்வதேச அமைப்பாக நாம் இதனைக் கொள்ளலாம்.

உருவாக்கம்

உலகில் மிகப் பாரிய போர்கள் இரண்டு இடம்பெற்றன என்று நாம் அனைவரும் அறிந்ததே. அவற்றில் ஒன்று முதலாவது உலகப் போர்; மற்றையது இரண்டாவது உலகப் போர்.

ஒரு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த உடன் அதே போன்ற மற்ற பிரச்சினைகள் வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பதே சிறந்தது.

அவ்வாறேதான் முதலாவது உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தவுடன் உருவான சர்வதேச சங்கம் அல்லது பன்னாட்டு கழகங்கள் தேசங்களின் அணி (League Of Nations) எனும் அமைப்பானது உலக அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டாத காரணத்தால் இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டது.

1939ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஏற்பட்ட அழிவானது முதலாவது உலகப் போரை விட அதிகமாகும். ஏறத்தாழ ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் பெருமளவு பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தி உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட போரை இந்த அமைப்பால் தடுக்க முடியாமல் போய்விட்டது. ஆகவே, அந்த அமைப்பின் செயற்பாடுகளை முற்றுமுழுதாக நிறுத்திக்கொள்வது என்ன முடிவெடுக்கப்பட்டது. அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் உலகில் உடனடியாக நிரந்தரமான அமைதியை ஏற்படுத்துவதற்கான புதிய ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்தனர்.

வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் ஆகியோர் 1942ஆம் ஆண்டு ‘ஐக்கிய நாடுகள்’ என்ற வார்த்தையை உருவாக்கினர். இரண்டாம் உலகப்போரின்போது கூட்டணிக் கட்சிகள் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் சங்கம் மற்றும் பிறநாடுகளில் ஒத்துழைப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்க இந்த அறிவிப்பு செய்யப்பட்டது.

இறுதியாக ஜெனிவாவில் ஒன்றுகூடிய இந்த அமைப்பு தாங்கள் பயணித்த பாதையில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவங்கள் மற்றும் நன்மை – தீமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு  இன்னும் எதிர்காலத்தில் எப்படிப்  பலமான அமைப்பாக மாற்ற முடியும் என்று ஆய்வுகளின் விளைவாக ஐக்கிய நாடுகள் சபை உருவானது.

நோக்கம்

ஐக்கிய நாடுகள் சபையானது அதிகாரபூர்வமாக 1945ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஐ.நா. சபையானது பல நோக்கங்களை தன்னுள் கொண்டு இருந்தது.

அந்தவகையிலே எதிர்காலத் தலைமுறையினரைக் காப்பாற்றுவது, மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் அனைத்து நபர்களுக்கும் சம உரிமை உருவாக்குதல் மிக முக்கியமாக  இன்னொரு மாபெரும் போரை ஏற்படுத்தாதிருத்தல் மட்டுமல்லாது ஐ.நா. சபையின் அனைத்து உறுப்பு நாடுகளினதும் மக்களுக்கு நீதி, சுதந்திரம் மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் பரந்த நோக்கத்தையும் கொண்டிருந்தது .

இதற்கு மேலதிகமாக அகதிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், தீவிரவாதத்தைத் தடுத்தல், மக்கள் ஆட்சியை மேம்படுத்தல், குழந்தைகளின் நலம் பேணுதல், அம்மை நோயால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைத்தல், போலியோ நோயை ஒழித்தல், மலேரியா இழப்புகளைத் தடுத்தல் மற்றும் உணவு உற்பத்தியைப் பெருக்குதல் போன்ற உப நோக்கங்களையும் கொண்டே ஐ.நா. சபையானது உருவாக்கப்பட்டது.

நாடுகளின் அங்கத்துவம்

ஐக்கிய நாடுகள் சாசனம் என்பது ஐக்கிய நாடுகள் சபையானது தமக்கென ஒழுங்கு விதிகளையும் முறைகளையும் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களின் கோவை ஆகும். அந்தவகையிலே ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கு அமைவாக தமது கடமைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான விருப்பத்தையும் இயலும் தன்மையையும் வெளிப்படுத்துகின்ற சமாதான விரும்பிகளான சகல நாடுகளும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் அங்கத்துவம் பெறமுடியும்.

பாதுகாப்புச் சபையின் (பாதுகாப்புச் சபை என்பது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஆறு பிரதான உறுப்புகளில் ஒன்றாகும்) சிபாரிசுக்கமைய பொதுச் சபை (ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மற்றுமோர் உறுப்பாகும்) அங்கத்துவ நாடுகளை ஏற்றுக்கொள்கின்றது. அதேவேளை, ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கோட்பாடுகளுக்கும் முறைமைகளுக்கும் முரணாக நடக்கும் ஓர் அங்கத்துவ நாட்டை இடைநிறுத்தி வைக்க அல்லது வெளியேற்ற அந்தச் சாசனத்தில் சட்டம் உண்டு.

உத்தியோகபூர்வ
மொழிகள்

ஐக்கிய நாடுகள் சபையில் உத்தியோகபூர்வ மொழிகளாக சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ் என்பன காணப்படுகின்றன. பொதுச்சபை, பாதுகாப்புச் சபை, பொருளாதார சமூக நல சபை ஆகியவற்றால் அரபு மொழியும் உத்தியோகபூர்வ மொழியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

வீட்டோ அதிகாரம்

வீட்டோ அதிகாரம் என்பது எளிய மொழியில் தன்னிகரற்ற அதிகாரம் எனலாம். சரியான பொருள் எடுத்து நோக்கினால் தடுக்கும் அதிகாரம் எனப் பொருள்படும்.

சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராஜ்ஜியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரமுள்ள நாடுகளாகும்.

வீட்டோ அதிகாரம் என்பதிலிருந்து விளங்குவது யாதெனில், ஐ.நா. சபையின் வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகளில் ஒரு நாடாயினும் விரும்பாத ஒரு தீர்மானத்தை ஐ.நா. சபையால் எடுக்க முடியாது. அந்தத் தீர்மானத்தை எடுக்கின்றபோது கூட அதனைத் தடுத்து நிறுத்துகின்ற அதிகாரம் இந்த நாடுகளுக்கு உண்டு. இதனாலேயே ஐ.நா. சபை இயங்குகின்ற செலவில் அரைப்பங்கை இந்த 5 நாடுகளுமே ஏற்றுக்கொள்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *