தினமும் 21 மணிநேரம் தூங்கும் 21 வயது இளம் பெண்

21 வயது இளம்பெண் ஒருவர் ஒரு நாளைக்கு 21 மணிநேரம் தூங்கும் வியாதி அவரை பரிதாப நிலைக்கு தள்ளியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் தென் யார்க்ஷயரின் டான்காஸ்டரைச் சேர்ந்தவர் எம்மா டக்(21) இந்த இளம்பெண்ணுக்கு, இரண்டு சிறுநீரகங்களிலும் சிறுநீரக கற்களால் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் இவரது அன்றாட பணிகளை அவரால் சரி வரச் செய்ய முடியவில்லை. அதோடு எம்மாவால் சரியான உணவைக் கூட எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் நாளுக்கும் 21 மணி நேரமும் படுக்கையிலேயே படுத்தபடி உள்ளார்.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை நன்றாக ஆக்டிவாக தான் இருந்துள்ளார். அதோடு லீட்ஸ் பெக்கெட் பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் பட்டம் பயின்றும் வந்தார்.

இப்படி ஒரு நிலையில், ஒரு நாள் அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இது சிறுநீரக கற்களாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் மருத்துவரைப் பார்க்கச் சென்றுள்ளார்.

ஆனால், மருத்துவர்கள் அவருக்குச் சிறுநீர் தொற்றாக இருக்க வாய்ப்புகள் அதிகம் எனவும், எம்மா இளவயது என்பதால் அவருக்குச் சிறுநீரக கற்களுக்கான வாய்ப்புகள் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும், ஸ்கேன் செய்து பார்த்ததில், எம்மாவுக்குச் சிறுநீரக கற்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒருபக்க சிறுநீரக கல் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்னொன்று அவரது சிறுநீரகத்தில் சிக்கிக்கொண்டது.

இதனையடுத்து குழாய் மூலம் அந்த இன்னொரு கல்லையும் மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர். அந்த குழாயானது சிலவார காலம் அவருக்குள் இருந்துள்ளது. ஆனால் அதற்குப் பின்னர் தான் எம்மாவிற்கு உண்மையான அவஸ்தையே ஆரம்பித்துள்ளது.

மருத்துவச் சிகிச்சை காரணமாக அவரது வயிறு கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போய்விட்டது என்ற நிலைக்கே சென்று விட்டது. அன்றாடம், அவரால் சரி வர எந்த உணவையும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அவரது உடல் எடை 34 கிலோவாகக் குறைந்தது.

இதனால், மீண்டும் எம்மாவிற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்றாண்டுகளாக அவதிப்பட்டுவரும் எம்மாவுக்கு gastric pacemaker கருவியைப் பொருத்தினால் பலன் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதனைப் பொருத்திக் கொள்ள 30,000 பவுண்டுகள் வரை செலவாகும் எனக் கூறப்படுகிறது. அதோடு லண்டனுக்குச் சென்றால் மட்டுமே அதற்கான உரியச் சிகிச்சையும் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதில் சோகம் என்னவென்றால் எம்மாவால் படுக்கையை விட்டுக் கூட எழும்ப முடியவில்லை. அந்த அளவிற்குத் தான் அவருடைய உடலில் தெம்பு உள்ளது.

மேலும், எம்மாவின் பரிதாப நிலையைப் பார்த்த அவரது நண்பர்கள் எம்மாவின் சிகிச்சைக்காகப் பணத்தைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *