கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 மாதங்கள் முழு ஊரடங்கு?

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பாதிப்பு அதிகமுள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடுத்த 6-8 வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைர் பல்ராம் பார்கவா பரிந்துரைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகக் கொடூரமாக உள்ளது. கடந்த 1ம் தேதி தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிய நிலையில் கடந்த சில நாட்களாக 3 லட்சமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி குறித்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதில், நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 727 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2 கோடியே 37 லட்சத்து 3 ஆயிரத்து 665 ஆக உள்ளது. தினசரி பலி எண்ணிக்கை 4,120 ஆக பதிவாகி உள்ளது. தொடர்ந்து 2வது நாளாக பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1 கோடியே 97 லட்சத்து 34 ஆயிரத்து 823 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 37 லட்சத்து 10 ஆயிரத்து 525 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் தினசரி பாதிப்பு, பலி மிக மோசமாக இருந்து வருகிறது.
இதனால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து மாநில அரசுகள் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இந்நிலையில், பாதிப்பு மிகுதியாக உள்ள மாநிலங்களில் இன்னும் கூடுதலாக 6 முதல் 8 வாரங்கள் வரை நீட்டிக்க வேண்டுமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பார்கவா வலியுறுத்தி உள்ளார். அவர் அளித்த
பேட்டியில் கூறியிருப்பதாவது:
கொரோனா பரிசோதனை மேற்கொள்வதில் 10 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும்பட்சத்தில் அந்தந்தப் பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும். இந்தியாவில் தற்போதைய சூழலில் மொத்தமுள்ள 718 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 4ல் 3 பங்கு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதில், மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற பெருநகரங்களும் அடங்கும். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை 6-லிருந்து 8 வாரங்கள் வரை நீட்டிக்க வேணடும். பாதிப்பு குறையாமல் எக்காரணம் கொண்டும் ஊரடங்கை தளர்த்தக் கூடாது.  ஊரடங்கு நீட்டித்தால் மட்டுமே கொரோனா பரவல் கட்டுக்குள் வரும். ஆரம்பத்தில் டெல்லியில் 35 சதவீதமாக இருந்த கொரோனா பாசிடிவ் சதவீதம் தற்போது 17 சதவீதமாக குறைந்திருக்கிறது. இந்த நேரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை டெல்லி போன்ற இடங்களில் தளர்த்துவது பேராபத்தானது. 5 சதவீதத்திற்கு கீழ் கொரோனா பாசிடிவ் விகிதம் குறையும் பட்சத்தில் தளர்வுகள் வழங்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

உலக நாடுகளை முந்தும்இந்திய மாநில பாதிப்புகள்
இந்தியாவில் தினசரி 3 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பிற நாடுகளில் இந்த எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. தினசரி பாதிப்பில் 2வது இடத்தில் உள்ள பிரேசிலில் நேற்று முன்தினம் 76,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வது இடத்தில் உள்ள அமெரிக்காவில் 35 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, கர்நாடகாவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரமாகவும், தமிழ்நாட்டில் 30 ஆயிரமாகவும், ஆந்திரா, மேற்கு வங்கத்தில் 20 ஆயிரமாகவும் உள்ளது. இதன்படி, பல உலக நாடுகளை இந்திய மாநிலங்களில் பாதிப்பு படுபயங்கரமாக இருக்கிறது.

மத்திய அரசு காலம் தாழ்த்தி விட்டது
கொரோனா முதல் அலையில் நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு கொண்டு வந்த போது, கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதால் இம்முறை நாடு முழுவதும் ஊரடங்கை அறிவிப்பதில் பிரதமர் மோடி தயக்கம் காட்டி வருகிறார். இந்த விஷயத்தில் மாநில அரசுகளே பாதிப்பை பொறுப்பு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவிப்பதில் தாமதித்து விட்டதாக பார்கவா கவலை தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை ஏற்று முன்கூட்டியே நாடு முழுவதும் முழு ஊரடங்கை விதித்திருந்தால் பாதிப்பை குறைத்திருக்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *