பிரித்தானியாவில் பரவும் வைரஸ் திருகோணமலையில் கண்டுபிடிப்பு!

பிரித்தானியாவில் பரவிவரும் B.1.1.7 வகை கொரோனா வைரஸ் திருகோணமலையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட, கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கந்தளாய், சீனக்குடா, உப்புவெளி பிரதேசங்களில் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 42 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் 1961 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,20  மரணங்கள் இன்று வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று 11 ஆம் திகதிவரை 520 தொற்றாளர்கள் இணங் காணப்பட்டுள்ளதாகவும்,திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 மரணங்களும், உப்புவெளி பிரதேசத்தில் 07 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் மூன்று வைத்தியசாலைகளிலும் 240 கட்டில்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் மேலும் நோயாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் மூன்று வைத்தியசாலைகளை தெரிவு செய்து வைத்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார  பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *