யார் நிஜமான ஹீரோக்கள்!

“பொது முடக்கத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் திரைப்படத் தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு நடிகர் சல்மான்கான் தலா ரூ.1500 நிதியுதவி!” – இது இன்றைய செய்தி.

இது இன்றைய செய்தி மட்டுமல்ல என்பதுதான் குறிப்பிட வேண்டிய தகவல்.

முதலில் சல்மான்கான் உதவி பற்றி பார்ப்போம்.

மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை அடுத்து, வரும் 15ம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது அம்மாநில அரசு. இதையடுத்து, திரைப்படம் மற்றும் டி.வி. சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

‘இதனால் பாலிவுட் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டும்!’ என்று மேற்கிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் திரைத் துறையினரிடம் கோரிக்கை வைத்தது.

இக்கோரிக்கையை ஏற்று நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும், மும்பையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான யஷ்ராஜ் ஸ்டூடியோவும் திரைப்பட தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்கில் போடப்போவதாக அறிவித்துள்ளன. இவர்கள் சில ஆயிரம் போருக்கு உதவுவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில்தான், பாலிவுட் நடிகர் சல்மான்கான், திரைப்பட ஊழியர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ள திரைப்படத் தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேருக்கும் தலா ரூ.1500 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மொத்த மதிப்பு மூன்றே முக்கால் கோடி ரூபாய்.

இதே போல நடிகர் சோனு சூட் செய்த உதவிகளை பட்டியலிட்டு மாளாது. இரண்டாவது கொரோனா அலை வீசும் தற்போது, கொரோனா நோயாளிகளுக்கு உதவ ஒரு குழு அமைத்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவித்தபோது சோனு சூட்டும், அவரது குழுவும் தேவையான ஆக்சிஜனை ஏற்பாடு செய்தனர். அதனால் 22 நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

தவிர, படுக்கை வசதி மற்றும் வெண்டிலேட்டர் கிடைக்காமல், மிக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நாக்பூரைச் சேர்ந்த 25 வயது கைலாஷ் அகர்வால் என்ற பெண்ணை, கொரோனா சிகிச்சைக்காக நாக்பூரிலிருந்து ஐதராபாத் தனியார் மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வர உதவியிருக்கிறார்.
இந்த உதவியை இப்போது இந்தியா முழுதும் பேசுகிறது.

கொரோனா முதல் அலை ஊரடங்கின்போது வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் சிக்கித் தவித்த எளிய மக்கள் பலரை, தனது சொந்த பொறுப்பில் விமானங்கள் ஏற்பாடு செய்து, அவரவர் ஊர் சென்று சேர உதவினார்.

நடிகர் அக்ஷய் குமார் செய்த உதவிகளும் ஏராளம். அவரும் அவரது மனைவி ட்விங்கிள் கன்னாவும் தற்போது 100 ஆக்சிஜன் சிலிண்டர்களை அளித்துள்ளனர்.

நடிகை ஸ்வரா பாஸ்கரும் கடந்த அலையின்போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல உதவி செய்தார்.

நடிகர் ஷாருக்கான், சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு 2,000 பாதுகாப்புக் கவசங்களையும், கேரளாவில் உள்ள சுகாரதாரப் பணியாளர்களுக்கு 20,000 N95 முகக் கவசங்களையும் வழங்கி இருக்கிறார்.

பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமல்ல… தயாரிப்பாளர்களும் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர்.

தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா பாலிவுட் திரையுலகில் தினக் கூலிகளாக இருக்கும் தொழிலாளிகளுக்கு தடுப்பூசி கிடைக்க உதவி வருகிறார்.

பொருளாகவும், பணமாகவும் அவர் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.
கடந்தமுறை 3000 பேருக்கு மேல் அவர் உதவியது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை பெண்கள் மற்றும் வயதான தொழிலாளிகளுக்கு தலா 5000 ரூபாய் அளித்துள்ளார்.

நடிகை டாப்ஸியை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உதவிக்காக தொடர்பு கொள்கிறார்கள்.

அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை ட்விட்டரில் பகிரும் டாப்ஸி, அந்த உதவிகள் கிடைத்திட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். பலர் அவரால் பயன்பெற்றுள்ளனர்.

மூச்சு வாங்குகிறதா..?

இப்போது தமிழ்நாட்டின் பக்கம் வருவோம்.

நமது ஹீரோக்கள்… அதுவும், ‘முதல்வர் பொறுப்பேற்று நாட்டையே மாற்றிக் காட்டுவேன்’ என்று முழங்கிய அல்லது தற்போதும் மறைமுகமாக முழங்கி (!) வரும் நடிகர்கள், இந்த கொரோனா கொடுந்தொற்று காலத்தில் என்ன செய்திருக்கிறார்கள்?

இவர்களை வாழ வைக்கும், ஒட்டுமொத்த மாநில மக்களுக்கு வேண்டாம்… தாங்கள் சார்ந்த திரைத்துறை தொழிலாளர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்?

ஒரு சில உதவிகள் உங்கள் நினைவுக்கு வரலாம். இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. கூகுளில் தேடுங்கள். இவர்கள் செய்த உதவிகள் (!) தெரியவரும்.

அதன் அளவைக்கொண்டே இவர்களது மனதை அறியலாம். இறுதியில், ‘பாலிவுட் நாயகர்கள் ஹீரோக்கள்தான்!’ என்ற எண்ணம் உங்களுக்கு வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *