இறைவனுக்கு எதிர்ப்புக் காட்டுவதற்காகவா பெருநாள் தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்போகின்றோம்

இன்றைய உலகில் கறுப்புக்கொடியேற்றுவதென்பதன் பொருள் எதிர்ப்பை, வெறுப்பைக்காட்டுவதாகும். உதாரணமாக, அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு விசேட தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றினால் அதன் பொருள் அந்த நாளை நாங்கள் கொண்டாடவில்லை; என்பதாகும்.

அதாவது ஒரு விசேட தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றினால் அந்த நாளை நாங்கள் துக்கதினமாக அனுஷ்டிக்கிறோம்; அந்த நாளுக்கான கொண்டாட்டத்தை நாங்கள் தவிர்க்கின்றோம்; எதிர்க்கின்றோம்; என்று பொருளாகும்.

நோன்புப்பெருநாள் என்பது என்ன? ஒரு மாதம் நோன்புபிடித்து அதன் முடிவில் அதன் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்கும் படைத்தவனுக்கு நன்றி தெரிவிப்பதற்குமாக படைத்தவனாலும் அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களாலும் எமக்கு வழங்கப்பட்ட நாள்.

அந்த மகிழ்ச்சியான நாளை நாம் எவ்வாறு ஒரு துக்கதினமாக அனுஷ்டிக்கமுடியும்? பெருநாளைக் கொண்டாடத்தந்தது அரசு இல்ல. இறைவன்தான் தந்தான். அந்த இறைவனுக்கு எதிர்ப்புக் காட்டுவதற்காகவா கறுப்புக்குடி ஏற்றப்போகின்றோம்?

புதிய துணிமணி வாங்கியவர்கள் அதனை உடுக்கமாட்டார்களா? அது மகிழ்ச்சி வெளிப்படுத்தல் இல்லையா? ஒரு புறம் மகிழ்ச்சியான நாள் கொண்டாடிக்கொண்டு மறுபுறம் துக்கதினம் அனுஷ்டிக்கப்போகிறோமா? இது ஒன்றுக்கொன்று முரண் இல்லையா?

பெருநாள் அன்று தக்பீர் சொல்லமாட்டமா? அது மகிழ்சி வெளிப்படுத்தலும் இறைவனுக்கு நன்றி செலுத்தலுமில்லையா?

பெருநாள் அன்று நோன்பு பிடிப்பதை இறைவன் ஹறாமாக்கியுள்ளான். ஏன்? அந்த மகிழ்ச்சியான நாளில் ஒருவன் நோன்பின் பெயரால் பசித்திருந்துவிடக்கூடாது; என்பதனால் இல்லையா?

இறைவனால் தரப்பட்ட ஒரு மகிழ்ச்சியான நாளை துக்கதினமாக அனுஷ்டிப்பதோ அல்லது துக்கத்தை வெளிப்படுத்துவதோ பொருத்தமா?

எனவே, இறைவனால், நோன்பு பிடித்ததற்காக மகிழ்ச்சி கொண்டாடுவதற்கு தரப்பட்ட ஒரு புனிதநாளை அரசியலுக்காக ஒரு துக்கதினமாக அடையாளப்படுத்தி அதன் புனிதத்தை யாரும் கெடுத்துவிடவேண்டாம். மாறாக, அன்றைய தினம் நிறைய பிரார்த்தனை செய்யலாம்.

தேர்தல் காலத்தில்தான் பகுத்தறிவைப் பயன்படுத்தமாட்டோம்; அதற்காக காலமெல்லாம் அப்படியா?

எனவே, பெருநாள் தினமென்பது தன் கட்டளையை ஏற்று மாதம் முழுவதும் நோன்புநோற்ற அடியான் மகிழ்ந்திருக்க இறைவன் வழங்கிய தினத்தை அரசியலுக்காக யாரும் களங்கப்படுத்திவிட வேண்டாம்.

(YLS Hameed)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *