கொரோனாவால் இறந்தவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 150 பேரில் 21 பேர் மரணம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கை வழிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்பட்டதன் விளைவாக இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஒரே கிராமத்தைச் சேர்ந்த 21 பேர் உயிரிழந்திருப்பதுடன் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் அவலம் அரங்கேறி உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை கடந்த காலங்களில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் சுகாதாரத்துறையினரின் ஏற்பாட்டில் ஊழியர்களே அடக்கம் செய்தனர். வைரஸ் தொற்று உடலில் இருந்து வெளியேறிவிடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக அது எடுக்கப்பட்டது. பின்னர் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் உடல்கள் இறுதிச் சடங்குகளை செய்வதற்காக ஒப்படைக்கப்படுகின்றன. இருப்பினும் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதெற்கென சுகாதார அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ததன் பேராபத்தை ஒரு கிராமம் சந்தித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள கீர்வா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்ததால் கடந்த ஏப்ரல் 21ம் தேதி அவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வந்து அடக்கம் செய்தனர்.அவரது இறுதிச் சடங்கினை சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன.

சுமார் 150 பேர் அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருக்கின்றனர். உடலை போர்த்தியிருந்த பிளாஸ்டிக் கவரை பிரித்து பலரும் அவரின் உடலை கைகளால் தொட்டுள்ளனர். பின்னாட்களில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 150 பேரில் அடுத்தடுத்து என 21 பேர் உயிரிழந்தது கிராமத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்து சரக டிவிஷனல் அதிகாரி குல்ராஜ் மீனா பத்ரிகையாளர்களிடையே பேசும்போது, உயிரிழந்த 21 பேரில் 3 – 4 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியோர்களாக உள்ளனர். இங்கு சமூக பரவல் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 147 பேரின் மாதிரிகளை கொரோனா சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறோம்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *