சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும்!

– பஸ்றி ஸீ. ஹனியா
சட்டத்துறை மாணவி
யாழ். பல்கலைக்கழகம்

சட்டம் பற்றிய புரிதலில் சட்டம் என்றால் என்ன என்பதுடன் சட்டங்கள் எவ்வகைக்குள் அடங்குகின்றன என்ற புரிதல் அவசியமானதாகும். அந்தவகையிலே சட்டங்களில் சர்வதேசச் சட்டம், உள்நாட்டுச் சட்டம் ஆகிய பிரதான பிரிவுகள் அதிகமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன.

இந்த இரண்டு பிரதான பிரிவுகளில் சர்வதேசச் சட்டம் என்றால் என்ன என்பது பற்றிப் பல்வேறு கருத்துக்கள் பலரால் முன்வைக்கப்படுகின்றன.

சர்வதேசச் சட்டம்

உலகில் உள்ள நாடுகள் தங்களிடம் காணப்படும் உறவு காரணமாக அந்த உறவை ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வருவதற்குப் பல பிராந்தியங்களை உள்ளடக்கி ஒப்பந்தங்கள் மூலம் இயற்றுகின்ற சட்டங்களே சர்வதேசச் சட்டங்கள் எனப்படும்.

மேலும், இவ்வாறு ஏற்படுத்தப்படும் ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகள் நட்டஈடு பெறுவதற்குச் சட்ட ரீதியாக உரிமை உண்டு.

அதேவேளை, மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் பாதிக்கப்படும் நாடுகளுக்கு மாத்திரம் அன்றி பலமில்லாத நாடுகளுக்கும் பலமான நாடுகள் உதவுகின்றன.

இவ்வாறான ஒருங்கிணைவு உலக நீதியையும் பேணக் கூடியவாறு இருக்கின்றது.

உலக நீதி என்பது உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் சமத்துவமாகக் காணப்படுதல் மற்றும் சமத்துவமான முறையில் நடத்தப்படுதலாகும்.

இந்த நகர்வில் நாடுகள் அனைத்துமே சமமாகப் பார்க்கப்பட்டு நாடுகளுக்கிடையிலான ஒற்றுமை, சமாதானம் பேணப்படும்.

உள்நாட்டுச் சட்டம்

மறுபுறம் உள்நாட்டுச் சட்டங்கள் என்றால் என்ன என்று நோக்குமிடத்து ஒரு நாட்டின் குடிமக்களின் நடத்தையைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த நாட்டு அரசு (இறையாண்மை) வெளியிடும் ஒழுக்க விதிகளேயாகும். இவையே சட்டங்களாக இயற்றப்படுகின்றன.

உள்நாட்டுச் சட்டங்களைப் பொதுவாக நாட்டின் சட்டம் இயற்றும் மன்றங்கள் உருவாக்குகின்றன. உதாரணமாக இலங்கையைப் பொறுத்த வரைக்கும் நாடாளுமன்றமே சட்டங்களை இயற்றுகின்றது. அவ்வாறு உருவாக்கப்படும் சட்டங்கள் மீறப்படும்போது அரசு காவல்துறையின் பலத்தைக்கொண்டு அவற்றை நிர்வாகத்துறையில் அமுல்படுத்துகின்றது.

சர்வதேசச் சட்டங்களைப் பொறுத்தவரைக்கும் உள்நாட்டுச் சட்டங்கள் இயற்றல் போல் சர்வதேச சமுதாயம் ஒன்றில் சட்டங்கள் இயற்றும் மன்றங்கள் எதுவுமே கிடையாது; நீதித்துறைகள் கிடையாது; சட்டங்களை அமுல்படுத்தும் நிர்வாகத்துறை கிடையாது.

சர்வதேசச் சட்டமானது நாடுகளை ஆளுகின்றது, உள்நாட்டுச் சட்டமானது தனிமனிதனை ஆளுகின்றது எனப் பொதுவான கருத்துக்கள் இருக்கின்றன. இருந்த போதிலும் நாடுகளை ஆளும் சர்வதேசச் சட்டம் மறைமுகமாக நாடுகள் எனும் பெயரில் தனி மனிதனை ஆளுகின்றது.

சர்வதேசச் சட்டத்தைப் பின்பற்றும்போது சர்வதேசச் சட்டத்தை அவ்வாறே உள்நாட்டுச் சட்டத்தில் பின்பற்றலாமா? இல்லையா? அல்லது சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டுச் சட்டத்துக்குள் கொண்டு வருவதற்குச் சரியான படிமுறை இருக்கின்றதா? இல்லையா? என்பது தீர்க்கப்பட வேண்டும். அந்தவகையிலேயே இதனை இரண்டு கொள்கைகளின் அடிப்படையில் விளக்குவது சாலச் சிறந்ததாக இருக்கும்.

ஒருமைத்துவம் (Monism)

இந்தக் கொள்கையை எளிமையாக விளக்கினால் ஒரே விடயத்தில் சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் பின்பற்றப்படுகின்றன எனக் கருதலாம். இந்தக் கொள்கைச் சட்டத்தின் விதிகள் தனிநபர்களைக் கட்டுப்படுத்தினாலும் நாடுகள் அல்லது அரசு அல்லாத குழுக்களைக் கட்டுப்படுத்தினாலும் அவ்விதிகளை உள்ளடக்கிய சட்டம் ஓர் ஒற்றை அலகே என்று கருதப்படுகின்றது. அதனாலேயே இந்தக் கொள்கை ஒருமைத்துவம் எனப்படுகின்றது.

உதாரணமாக சர்வதேசச் சட்டத்தில் உருவாக்கப்படும் ஒரு சட்டத்தை ஒருமைத்துவ கொள்கையைப் பின்பற்றும் நாடானது எந்தவொரு மாற்றங்களும் இன்றி எந்தவொரு சிபாரிசுகளும் இன்றி அவ்வாறே பின்பற்றி தமது நாட்டுச் சட்டமாக மாற்றும்.

இருமைத்துவம் (Dualism)

இருமைத்துவக் கொள்கை என்பது உள்நாட்டுச் சட்டமும் சர்வதேசச் சட்டமும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட இரு சட்ட அமைப்பு முறைகளாகும்.

ஒரு சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டுக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு உள்நாட்டில் சட்டம் இயற்றும் தளத்திலிருந்து அனுமதி பெறுதல் அல்லது அந்த உள்நாட்டு ஆட்சி மன்றங்களின் செயன்முறைக்கு அமைய அந்தச் சட்டம் உள்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். ஒருவேளை அது நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லையாயின் சர்வதேசச் சட்டம் உள்நாட்டில் நடைமுறைப்படுத்தாமல் இழந்துவிடும்.

சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டு முறையில் செயற்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும்போது உள்நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேச நீதிமன்றத்தில் செயற்படுத்த வேண்டிய தேவையும் கூடவே ஏற்படுகின்றது.

உள்நாட்டுச் சட்டமா
அல்லது சர்வதேச
சட்டமா மேலோங்கும்?

சர்வதேசச் சட்டத்தை உள்நாட்டுச் சட்ட அதிகார வரம்பில் செயற்படுத்துவது குறித்துப் பார்ப்பதற்கு முதல் இவ்விரு சட்டங்களும் முரண்படும்போது எந்தச் சட்டம் மேலோங்கி நிற்கும் என்பதை அறிந்துகொள்வது அவசியமாகும்.

ஒரு சர்வதேச உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ள சர்வதேசச் சட்ட விதிக்கு நேர் விரோதமாக உள்நாட்டுச் சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், அந்த உள்நாட்டு நீதிமன்றம் எந்தச் சட்டத்தைப் பின்பற்றித் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.

இருமைத்துவக் கொள்கையாளர்களின் கருத்துப்படி சர்வதேசச் சட்ட விதியை விட உள்நாட்டுச் சட்டமே மேலோங்கியதாகச் சொல்லப்படுகின்றது. அத்தகைய முரண்பாடு எழும்போது, உள்நாட்டு நீதிமன்றம் உள்நாட்டுச் சட்டத்தையே பின்பற்ற வேண்டும். ஏனெனில் இருமைத்துவக் கொள்கையின்படி உள்நாட்டுச் சட்டம் தனியான சட்ட அமைப்பு முறையாகும்.

அந்தச் சட்ட அமைப்பு முறைக்குள் அந்த நாட்டின் இறையாண்மை அரசின் சட்டமே உயர்ந்த சட்டமாகும். இலங்கையும் இருமைத்துவ நாடு என்ற அடிப்படையில் எமது நாட்டில் மேற்குறிப்பிட்ட சட்டப் பிரயோகத்தை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால், இந்த விடயத்தில் ஒருமைத்துவக் கொள்கையாளர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பது அவதானிப்பில் அறிந்ததாகும். சில சட்டவியலாளர்கள், சர்வதேசச் சட்டமே மேலோங்கி நிற்கும் என்கின்றனர். வேறு சில சட்டவியலாளர்கள், குறிப்பிட்ட பிரச்சினைகள் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து சில வேளை சர்வதேசச் சட்டமும் சில வேளை உள்நாட்டுச் சட்டமும் மேலோங்கி நிற்கும் என்கின்றனர்.

எதுவாக இருப்பினும் இவை அனைத்துமே நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தைப் பொறுத்துத் தீர்ப்பளிக்கப்படுகின்றது.

சர்வதேசச் சட்டங்களும் உள்நாட்டுச் சட்டங்களும் மிகவும் முக்கியமானவை. அவை எவை எந்த நேரத்துக்கும் பொருத்தமானவை என்பதைப் பொறுத்து சட்டப் பிரயோகம் அமையுமானால் நாடும் நாட்டுப் பிரஜைகளும் சுபீட்சமான சூழலில் வாழ்வதற்கான நிலைமை ஏற்படும் என்பது திண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *