வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை எல்லையை தாண்டியுள்ளது!

உள்நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, எல்லையைத் தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ள கொ​விட்19 ஒழிப்புக்கான இராஜாங்க அமைச்சரும் விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, பரிசோதனைகளின் மூலம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களை விட, அடையாளம் காணப்படாத தொற்றாளர்களின் எண்ணிக்கை, சமூகத்தில் அதிகமாக இருக்கின்றதெனச் சுட்டிக்காட்டினார்.

அதனால், பிசிஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும்வரை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறுவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பரிசோதனை முடிவுகள் கிடைப்பது தாமதமாகலாம் என்றும் எனவே, பொதுமக்கள் இதனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களுக்கு, அநாவசியப் பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் பொதுச் சுகாதார விதிமுறைகளைக் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ள அவர், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை முற்றாக ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இல்லையெனில், வைரஸ் வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்துவது சிரமம் என்றும் எச்சரித்துள்ள அமைச்சர், நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களை, சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலங்களைப் போன்று வெளிநாடுகளிலிருந்து அதிகளவானோர் வந்தால், அவர்களைத் தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *