IPL  போட்டிகளுக்கு என்ன ஆகும்?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய காலம் முதல் இதுவரை இப்படிப்பட்ட சோதனையை எதிர்கொண்டதில்லை.
மிகப் பிரம்மாண்டமான முறையில் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல். 2008-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக பயணித்துக்கொண்டு இருந்தது.

ஆனால் இந்த ஆண்டில் கொரோனாவின் தாக்கம் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் ஒவ்வொருவராக தங்கள் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருக்க, இந்த ஆண்டில் இனி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்காதா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஐபிஎல் ஒரு சாதாரண ஆட்டமாக இருக்கலாம். ஆனால் அதில் கோடிக்கணக்கான ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் நடக்காவிட்டால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கும் சுமார் 3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
அதனால் பாதியில் நின்ற ஐபிஎல் போட்டியை எப்படியாவது இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது.

இந்தச் சூழலில் ஐபிஎல் போட்டியை தொடர்ந்து நடத்த, கடந்த ஆண்டைப்போலவே இப்போது ஐக்கிய அரபு நாடுகளை பிசிசிஐ அணுகலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் இப்போட்டி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதால் இந்த யோசனை பிசிசிஐ-க்கு எழுந்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் (அக்டோபர் மாதம்) டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடப்பதாக உள்ளது. ஆனால் கரோனா அச்சத்தால் அதை ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடம் மாற்ற மற்ற நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அப்படி அந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் அக்டோபர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்கும்.

அப்படி உலகக் கோப்பை போட்டி நடந்தால், அதனுடன் சேர்த்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தினால் என்ன என்ற எண்ணம் பிசிசிஐ-க்கு உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தாவிட்டால், இங்கிலாந்தில் இப்போட்டியை நடத்தவும் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருகிறது.

டெஸ்ட் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆடுவதற்காக இந்திய அணி, எப்படியும் அடுத்த மாத இறுதியில் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளது.

இந்நிலையில் இப்போட்டி முடிந்த பிறகு இங்கிலாந்திலேயே ஐபிஎல் தொடரை நடத்தினால் என்ன என்ற எண்ணமும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு உள்ளது.
அப்படி நடத்தும் பட்சத்தில் ஐபிஎல்லுக்கு புதிதாக சில பார்வையாளர்கள் கிடைத்து, மேலும் வருவாய் கூடும் என்று கருதப்படுகிறது.

அங்கும் இல்லாவிட்டால் இந்தியாவில் நடப்பதாக உள்ள டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றி, அங்கேயே ஐபிஎல் தொடரையும் நடத்தினால் என்ன என்ற எண்ணமும் பிசிசிஐ-க்கு உள்ளது.
எது எப்படி இருந்தாலும், ஐபிஎல் தொடரின் 2-வது பாகத்தை எப்படியும் நடத்துவது என்று பிசிசிஐ உறுதியாக உள்ளது. ஆனால் அதற்கு கொரோனா அருள் செய்ய வேண்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *