சட்டம் ஒரு வெளிச்ச அறை: சட்டம் என்றால் என்ன?

– பஸ்றி ஸீ. ஹனியா
சட்டத்துறை மாணவி
யாழ். பல்கலைக்கழகம்.

ட்டம் என்றால் என்ன என்று கேள்வி அடிப்படையாகவே எல்லோரிடமும் உருவாகுவது வழக்கம். அதற்கான பதில்தான் சரியாக வழங்கப்படுகின்றதா? இல்லையா? என்பது இன்னும் வினாவாகவே இருந்து கொண்டிருக்கின்றது.

எது எவ்வாறாக இருப்பினும் உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறான வாழ்க்கையை நாம் விரும்பும் வகையில் அப்படியே முழுமையாக வாழ்ந்தோமா? வாழ்கின்றோமா? வாழ்வோமா? என்றால் நிச்சயமாக இல்லை. ஏதோ ஓர் ஒழுங்கு விதிகள், கட்டுப்பாடுகள், நெறிமுறைகள் சூழ்ந்திருக்கின்றன.

இவ்வாறாக எம்மைச் சூழப்பட்ட வேலியே சாதாரண பொருளில் ‘சட்டம்’ எனப் பொருள்படும். எம்மில் பலர் சட்டம் என்றால் கட்டுப்பாடுகள் என்ற புரிந்துணர்வோடு இருக்கின்றார்கள். பொதுவாக சட்டம் என்பது நாம் எவ்வாறு சரியாக வாழ வேண்டும் என்பதற்கான ஒழுங்கு முறையாகும்.

ஒவ்வொரு அரசும் நிர்வாகம் செய்வதற்காகச் சில விதிகளையும் ஒழுங்குகளையும் உருவாக்குகின்றன. இவ்விதிகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஓர் அரசின் எல்லைகளுக்குள் வாழும் மக்கள் மாத்திரம் கட்டுப்படல் வேண்டும். அரசுக்குள் அதன் அதிகாரங்கள் மீறப்பட்டால் மீறுபவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள். சாதாரணமாக இவ்விதிகள், ஒழுங்குகளே சட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

உண்மையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்க்கை என்பது சில விதிகள் அல்லது சட்டங்கள் இன்றி சாத்தியமற்றதாகும். சமூகத்தில் காணப்படும் நிறுவனங்கள், அமைப்புக்கள் கூட தம்மை முகாமை செய்வதற்குச் சில துணைவிதிகளை உருவாக்குகின்றன. ஆயினும், சட்டம் என்ற சொல் அரசால் அதற்குரிய பிரமாணத்துக்கு ஏற்ப இயற்றப்பட்டு பிரயோகிக்கப்படுகின்றபோதே அதற்குரிய உண்மையான பெறுமானத்தைப் பெறுகின்றது.

சட்டம் என்றால் கடினமானது, பயங்கரமானது என்ற வியூகங்களில் பார்க்கப்படுகின்றது. ஆம், நிச்சயமாக சட்டம் என்பது பயங்கரமானது; கடினமானதுதான் அதனை மீற நினைப்பவர்களுக்கு.

சட்டத்துக்கான
வரைவிலக்கணம்

சொல் இலக்கணப்படி சட்டம் என்ற சொல் மொழிக்கு மொழி வேறுபட்ட நிலையில் தோற்றம் பெற்றதாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது. பழைய ரியுரொனிக் (Teutonic) சொல்லாகிய லாக் (Lag ) என்பதிலிருந்து லோ (Law ) என்னும் சொல் பெறப்பட்டதாகக் கூறப்படுகின்றது. லாக் (Lag) என்னும் சொல் சமமான முறையில் இடுதல், வைத்தல், அமைத்தல் என்ற கருத்துடையது. சிலர் இலத்தீன் சொல்லாகிய ஜுஸ் (Jus) என்பதிலிருந்து லோ (Law) என்ற சொல் பெறப்பட்டது எனக் கூறுகின்றார்கள். ஜுஸ் (Jus) என்ற சொல் பிறிதொரு இலத்தீன் சொல்லாகிய ஜுங்கேரே (Jungere ) என்பதுடன் தொடர்புடையதாகும். இச்சொல்லின் பொருள் கட்டுப்பாடு (Bond) அல்லது பிணைத்தல் (Tie) என்பதாகும்.

சட்டம் என்றால் என்ன என்பதற்குப் பல்வேறு வரைவிலக்கணங்கள் பல்வேறு சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. அரிஸ்டோட்டில், “தீவிர உணர்ச்சிகளை நீக்கிய பகுத்தறிவே சட்டம்” எனக் கூறுகின்றார். ஒஸ்ரின், “இறைமையின் கட்டளையே சட்டம்” எனக் கூறுகின்றார். கிராப்பி (Krabbe), “மனிதர்களின் பொதுவானதும் குறிப்பானதுமான உணர்வுகள் அல்லது உரிமைகளில் இருந்து வருகின்ற எழுதிய அல்லது எழுதாத விதிகளின் முமுமை அல்லது தொகுப்பே சட்டம்” எனக் கூறுகின்றார். சல்மொன்ட் (Salmond) என்பவர், “அரசால் அங்கீகரிக்கப்பட்டதும், நீதியான நிர்வாகத்தில் பிரயோகிக்கப்பட்டதுமான விதிகளின் திரட்சியே சட்டம்” எனக் கூறுகின்றார். ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி, “அதிகாரத்தால் சட்டக் கோப்புச் செய்யப்பட்ட விதிகளே சட்டம்” எனக் கூறுகின்றது. இவ்வரைவிலக்கணங்களூடாக ஒரு பொது முடிவுக்கு வருவதாயின் “ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தில் இறைமை பெற்ற அரசியல் அதிகாரத்தால் செயற்படுத்தப்படும் சமூக அங்கத்தவர்களின் புற நடத்தைகள் பற்றிய பொதுவான விதிகளே சட்டம்” ஆகும்.

சட்டம் எவ்வாறு
உருவாக்கப்பட்டது?

ஆரம்ப காலங்களைப் பொறுத்த வரைக்கும் சனத்தொகை மிகக் குறைவாக இருந்த காலங்கள். அவ்வாறு இருந்த சனத்தொகையினரும் ஓர் ஆற்றங்கரையை அண்டிய நாகரிகங்களாகப் பிரிந்தே வாழ்ந்தனர். ஒரு குறிப்பிட்ட குழுவில் இருக்கும் மக்கள் தத்தமது தேவைகளைத் தாமே நிறைவேற்றிக் கொண்டனர். காலம் நகர நகர சனத்தொகை அதிகரிக்க தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு வளங்களில் மட்டுப்பாடுகள் ஏற்பட்டன.

அவ்வாறு வளங்களில் மட்டுப்பாடுகள் ஏற்படும்போது சேமிக்க வேண்டிய தேவையும் கூடவே ஏற்பட்டது. அதற்கமைய சேமித்த குழுவினர் செல்வம் கொண்டவர்களாகவும், சேமிக்காத குழுவினர் செல்வம் இல்லாதவர்களாகவும் காணப்பட்டனர். அவ்வாறு செல்வம் இல்லாதவர்கள் சேமித்த குழுவினரிடமிருந்து சேமிப்புக்களைப் பறிக்க முயலும்போது அங்கே பல குழப்பங்கள் உருவாக ஆரம்பித்தன. அவ்வாறு ஏற்படும் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் எதிர்காலத்தில் குழப்பங்கள் ஏற்படாது இருப்பதற்கும் ஏதாவது ஓர் ஒழுங்குமுறை தேவையாக இருந்தது. அவ்வாறு தேவைப்பட்ட வேளையில்தான் சட்டம் என்ற கருத்தியல் உருவானது.

அவ்வாறு உருவாக்கப்பட்ட சட்டம் அம்மக்களை ஆட்சி செய்ததோடு அச்சட்டத்தைப் பாதுகாக்க ஆட்சியாளரையும் உருவாக்கியது. அவ்வாறு உருவாக்கப்பட்ட சட்டங்களால் மனிதர்களுக்கிடையில் குழப்பங்கள் குறைவாகக் காணப்பட்டன. இதனை அவதானித்த சட்டக்காவலனான ஆட்சியாளன் மற்றும் குடிமக்கள் தொடர்ச்சியாக சட்டங்களை உருவாக்கத் தொடங்கினர். இதன் பிரதிபலன் இன்று வரைக்கும் நாம் ஒரு சட்டத்தின் கீழ் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

சுருக்கமாக விளக்குவோமாயின் உலகின் படைப்புகள் சமமானவை அல்ல. அவ்வாறான படைப்புகளில் வலியனவைக்கும் வலுவற்றவர்களுக்கும் இடையிலான சமமின்மை காரணமாக உருவாகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதே சட்டம் உருவான பின்னணி ஆகும்.

சட்டம் ஏன்
உருவாக்கப்பட்டது?

சட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்த்தை எளிமையாக நோக்கின் வாகனங்கள் செல்லும் பாதையில் வாகனங்கள் பாதையின் எதிரெதிர் திசைகளில் பயணிக்கும்போது விபத்துக்கள் அதிகமாகவே இருக்கும். ஒரே திசையில் பயணிக்குமானால் விபத்துக்கள் நிகழாது. இவ்வாறு ஒரே திசையால் அனைவரையும் பயணிக்க வைப்பதற்காகவே சட்டம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதரும் தங்கள் விருப்பத்துக்கும் மனதுக்கும் சூழலுக்கும் ஏற்ப நடந்துகொள்வாராயின் அவ்வாறான நடத்தை பல குழப்பங்களையும் பிரச்சினைகளையும் விளைவிக்கும். அனைவரும் ஒரு கட்டுக்கோப்பான அறநெறியில் பயணிப்பார்களாயின் குழப்பங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

சட்டத்துக்கு ஏன்
கட்டுப்பட வேண்டும்?

சட்டத்துக்கு ஏன் கட்டுப்பட வேண்டும் என்ற குதர்க்கமான கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது வழமை. அதற்கான விடை, கட்டுப்படாவிட்டால் தண்டனை கிடைக்கும் என்பதாகும். தண்டனை என்பதற்கு மேலாக கட்டுப்படாவிட்டால் இங்கிருக்கும் மனித ஜீவராசிகள் அல்ல எந்த ஜீவராசிகளும் வாழ முடியாது என்பதாகும்.

சட்டமற்ற சமூகம் குழப்பத்துக்கு மேல் குழப்பத்தை ஏற்றுக்கொண்டு கடைசியில் அனைவரையும் தாக்கி பூஜ்ஜியத்தைப் பெருக்கியது போல் ஒன்றுமே இல்லாது ஆகிவிடும்.

இத்தனை சட்டங்கள் நடைமுறையில் இருந்தும், இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தும் இன்னமும் நாம் சுபீட்சமான ஒரு சூழலில் வாழவில்லை. நாம் பல பிரச்சினைகளை அனுபவித்துக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை என்றால் பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டே தீர வேண்டும்.

சட்டத்துக்கு
கட்டுப்படாவிட்டால்
என்னவாகும்?

மனிதர்கள் சட்டத்துக்குக் கட்டுப்படாவிட்டால் இந்த உலகத்தில் எதுவுமே நடக்காமல் அனைத்துமே ஸ்தம்பிதம் அடையும். உலகமே அடுத்த அடியை வைக்க முடியாத அளவுக்குச் சென்று விடும்.

அனைவரும் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்தேயாக வேண்டும். சட்டத்துக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. சட்டத்துக்குக் கீழ்ப்படிதலை மக்கள் தமது பழக்கமாக உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

சட்டத்தின்
நோக்கம்

சமூகத்தை ஒழுங்குபடுத்தி இவ்வாறான ஒழுங்குபடுத்தல் மூலம் ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதிசெய்வதற்கு உதவுவதே சட்டம் என்ற திட்டத்தின் நோக்கமாகும்.

சட்டங்கள் இன்றி மனித வாழ்க்கையைச் சிறந்த முறையில் நடத்த முடியுமா? மனித வாழ்க்கையைச் சிறந்த முறையில் நடத்த முடியும். ஆனால், அதற்கு சில அடிப்படை விடயங்களைப் பூர்த்திசெய்ய வேண்டியுள்ளன. அதாவது நிர்வாக எல்லைக்குள் எந்தவொரு வேற்றுமைகளும் இருக்கக்கூடாது. எந்தவோர் ஏற்றத்தாழ்வும் இருக்கக்கூடாது. அனைவரது தேவையும் சமமாகவே பூர்த்தி செய்யப்பட வேண்டும். இவ்வாறு எந்தவொரு பிரச்சினைகளும் அற்ற ஒரு சமூகம் எப்போது உருவாகின்றதோ அன்று சட்டத்தின் தேவையும் இவ்வுலகில் இருக்காது.

எளிமையாகக் கூறுவோமாயின் பிரச்சினைகள் இருந்தால்தானே காவல்நிலையங்கள் தேவை. காவல் நிலையங்களை உருவாக்கத்தானே சட்டங்கள் தேவை. பிரச்சினைகளே இல்லாவிடில் சட்டங்களின் தேவையே இருந்துவிடாது.

ஆனால், இங்கு நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்னவென்றால், இவ்வாறு வேற்றுமைகள் அற்ற – ஏற்றத்தாழ்வற்ற – குழப்பங்கள் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க முடியுமா என்ற வினாவே. நிச்சயமாக பல்வகை கலாசார சமூகத்தில் பிறந்த மனிதர்களாகிய நம்மிடம் எண்ணங்களும் செயற்பாடுகளும் வேறுபாடுகள் கொண்டவையாகவே காணப்படும். ஒவ்வொருவரும் தாம் வாழும் சூழல், மரபணுக்கு ஏற்ப பலவிதமான நடத்தைகள், செயற்பாடுகளுடன் காணப்படுவார்கள். இவை அனைத்தையும் ஒரே குடைக்குள் கொண்டு வருவதென்பது இரவிலே தோன்றும் சூரியன்தான்.

சட்டத்தின் சிறந்த விளைவைப் பெற முதலில் ஒவ்வொரு குடிமகனும் சட்டம் என்பது எமது நலனுக்காகவே உருவாக்கப்பட்டது என்பதில் தெளிவுபெற வேண்டும்.

அவ்வாறு பெறும் தெளிவானது சரியான பாதைக்கு இட்டுச் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும்.

சட்டங்களைப் பின்பற்றாமல் இருப்பதும் தவறு; பின்பற்றுபவர்களுக்கு இடையூறு செய்வதும் தவறு.

பிரஜைகள் சமூக, அரசியல் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் நேர்மை, புத்திசாலித்தனம், கல்வி வளர்ச்சி கொண்டவர்களாக இருக்க வேண்டும். இப்பிரஜைகள் உணர்வுபூர்வமாகச் சட்டத்துக்கு எவ்வாறு கீழ்ப்படிந்து நடப்பது என்பதையும், சமாதானம், சமூக முன்னேற்றம் என்பவற்றுக்குச் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்ற நெறிமுறை உணர்வு தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

சட்டத்துக்குக் கீழ்ப்படிதலை ஒரு பழக்கமாக அல்லாமல் தமது கொள்கையாகக் கடைப்பிடிக்க வேண்டும. லஸ்கியின் வார்த்தைகளாகிய, “நலன்புரி சமூகம் ஒன்றுக்காகச் சட்டத்துக்குக் கீழ்ப்படிதல் அவசியமானதாகும். சட்டங்கள் கீழ்ப்படிதலை மட்டும் வலியுறுத்துபவையாக இருக்கக்கூடாது. அரசின் பௌதீகப் பலத்தாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரத்தாலும் சட்டங்கள் உருவாக்கப்படுபவைகளாக இருக்க வேண்டும் என்பது கவனத்தில்கொள்ளத்தக்கது” என்பதை நினைவுபடுத்துவோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *