தொடர்ந்து மிரட்டப்படும் பிரபலங்கள்!

நடிகர்கள், அதிலும் நன்கு பிரபலமான நடிகர்கள் பொதுவெளியில் எது நடந்தாலும், தங்களின் கவனத்திற்கே வராத மாதிரி மௌனம் காப்பார்கள்.

இலங்கைப் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளுக்காக திரைக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறார்கள். அதற்காகச் சிலர் வழக்கையும் சந்தித்திருக்கிறார்கள்.

நடிகர் சூர்யா நீட் உள்ளிட்ட தமிழ்ச் சமூகம் சார்ந்த சில பிரச்சினைகள் குறித்து எழுதியதால், சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஜோதிகா மருத்துவமனையையும், கோவிலையும் இணைத்துப் பேசியதற்காக கண்டனத்திற்கு ஆளானார். நடிகர் பிரகாஷ்ராஜ் பொதுவெளியில் சில விமர்சனங்களை முன் வைத்தபோது, விமர்சிக்கப்பட்டார்.

தடுப்பூசி பற்றிப் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்.

தற்போதைய இலக்கு நடிகர் சித்தார்த்.

உ.பி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல உயிரிழப்பு நடப்பதைக் கண்டித்து பொய் சொல்ல வேண்டாம் என்று ஒரு பதிவை வெளியிட்டார். உடனே பலத்த கண்டனங்கள், அவருக்கு தொடர்ந்து தொலைபேசியில் கொலை மிரட்டல்கள்.

இது தொடர்பாக சித்தார்த் காவல்துறையில் புகார் அளித்தபோது, அவருக்குத் தனிப்பாதுகாப்பு வழங்க முன் வந்திருக்கிறது தமிழகக் காவல்துறை.
ஆனால் தன்னுடைய பாதுகாப்புக்காக ஏன் காவலர்கள் தங்கள் நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பிய சித்தார்த், தனக்கான பாதுகாப்பை ஏற்க மறுத்திருக்கிறார்.

அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் குரல்கள் கேட்கின்றன.
சித்தார்த் பதிவிட்டிருப்பதில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் ஒருவர் புகார் அளிக்கலாம்.

அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது. அதைவிட்டுக் கொலை மிரட்டல் விடுப்பது உரிய செயல் அல்ல.

சித்தார்த்தின் பதிவுக்கு எதிர்வினை இப்படியா இருக்க வேண்டும்?

திரைக்கலைஞர்கள் தங்களைச் சுற்றி எது நடந்தாலும் மௌனமாக இருக்க வேண்டும் என்கிற வற்புறுத்தல் தான் இந்த மிரட்டல்களின் மையமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *