அலுவலகங்களில் வேகமாக பரவுகின்றது கொரோனா!

நாட்டில் உள்ள நிறுவனங்களில் தற்போது கொரோனா தொற்றுப் பரவலானது அதிகரித்து வருகிறது. மூடிய மற்றும் குளிரூட்டப்பட்ட இடங்களில் தொற்றுநோய்க்கான ஆபத்து மிகவும் அதிகமாகவுள்ளது என தலைமை தொற்றுநோயியல் நிபுணரான டாக்டர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.

அலுவலக வளாகத்திற்குள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது பாரியளவில் அதிகரித்து இருப்பதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு மூடிய அறையில் குறிப்பாக குளிரூட்டப்பட்ட இடங்களில் மக்கள் வைரஸால் பாதிக்கப்படுவார்கள். எனவே, திறந்த ஜன்னல்கள் கொண்ட சூழலில் தங்க பரிந்துரைக்கப்படுகிறது. மூடிய அறையிலோ அல்லது குளிரூட்டப்பட்ட அறையிலோ தங்கும்போது சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு நாங்கள் மக்களை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

பொது மக்கள் கொவிட் -19 அறிகுறிகளால் பாதிக்கப்படுகையில் அல்லது உடல்நிலை குறைவால் இருக்கும் போது உடனடியாக மருத்துவமனைக்கு தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஒருவர் உடல்நல குறைவால் பாதிக்கப்படும் போது அவர்கள் வீட்டில் தங்குவதற்கும், சரியான மருத்துவ உதவியை நாடாமல் பல்வேறு மருந்துகளை பரிசோதிப்பதற்கும் முனைகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் கொவிட் -19 அறிகுறிகளைக் கொண்டு இருப்பின் மருத்துவமனைக்கு தெரிவிக்க வேண்டும்.

அனைத்து தனியார் மற்றும் அரச நிறுவனங்களிலும் உடல் வெப்பநிலை சோதனைகளை நடத்துவதற்கும் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றி பணியாற்றுமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது அனைத்து நிறுவனங்களிலும் வீடுகளில் இருந்து பணியாற்றும் நடைமுறை உள்ளமையினால் குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் நிறுவனங்கள் உள்வாங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *