கொரோனாவால் 1 பில்லியன் டொலரை சேமித்த கூகுள்!

கொரோனா முதல் அலை ஏற்பட்டபோது, உலகம் முழுவதும் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் முதல் மிகச் சிறிய தனியார் நிறுவனங்கள் வரையில் வீட்டிலிருந்து பணியாற்ற தங்கள்  ஊழியர்களை அனுமதித்தன.  அதில் கூகுளும் ஒன்று.

சமீபத்தில் புளூம்பெர்க் அறிக்கையின்படி, கூகுளின் முதன்மை நிறுவனமான ஆல்பபெட், கடந்த காலாண்டில் 268 மில்லியன் அளவுக்குச் சேமித்திருக்கிறது.
நிறுவனத்தின் விளம்பரங்கள், பயணம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான செலவுகள் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெகுவாகக் குறைந்துள்ளன.

அதேபோல கடந்த 2020 ஆம் ஆண்டில், ஆல்பபெட் அறிக்கையில் விளம்பரம் மற்றும் மேம்பாட்டுக்கான செலவுகள் 1.4 பில்லியன் அளவுக்குக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதன் விளம்பர நடவடிக்கைகளை கொரோனா காரணமாக எல்லாவற்றையும் டிஜிட்டலாக மாற்றிவிட்டது. ஆல்பபெட் நிறுவனத்தின் பொழுதுபோக்குச் செலவுகளும் 371 மில்லியன் அளவுக்குக் குறைந்துள்ளது.

எல்லோருக்குமே தெரிந்த விஷயம். தங்கள் நிறுவன ஊழியர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டது கூகுள்.

எல்லா வகையான பொழுதுபோக்கு வேடிக்கைகள், நல்ல சுவையான உணவு மற்றும் கார்ப்பரேட் சந்திப்புகள் என ஊழியர்களின் உற்சாகத்திற்குக் கூகுள் முக்கியத்துவம் கொடுக்கும்.

கடந்த ஆண்டின் மார்ச் மாதம் முதல் கூகுள் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றி வருகிறார்கள். அதனால் அவர்களுக்கான செலவுகள் அனைத்தும் குறைந்து விட்டன. கூடுதலான பணத்தைச் சேமித்த கூகுள், புதிய ஊழியர்களை பணியில் நியமனம் செய்து ஈடுகட்டியது.

கூகுள் நிறுவனத்தின் வருமானம் 34 சதவீதம் அதிகரித்தாலும், தன் மார்க்கெட்டிங் மற்றும் நிர்வாகச் செலவுகளை அதிகரிக்காமல் தட்டையாகவே வைத்திருந்தது.

கடந்த செப்டம்பரில் ஒரு பேட்டியில் ஆல்பபெட் சிஇஓ சுந்தர் பிச்சை, வீட்டிலிருந்து ஊழியர்கள் பணியாற்றும் காலத்தில், பணிச்சூழலை நவீனமாக மாற்றப்போவதாக அறிவித்திருந்தார்.
அதாவது, ஒரு கருத்துக் கணிப்பின்படி கூகுள் ஊழியர்களில் 10 சதவீதம் பேர் எதிர்காலத்தில் அலுவலகம் வர விரும்பவில்லை. அதில் 15 சதவீதம் பேர் தேவையானால் மட்டும் அலுவலகம் வந்து செல்லலாம் என்று கருத்துத் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *