கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நுகர்தல் பயிற்சி!

உலகமே கொரோனோ பீதியில் உறைந்திருக்கிறது. உலகிலேயே அதிக அளவிலான பாதிப்பு இந்திய மண்ணில் ஏற்பட்டுவருகிறது.

டெல்லி, குஜராத் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக் குறையால் உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. இந்த மாபெரும் துயர்க் காலத்தைக் கடக்க மக்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஸ்மெல் டிரெயினிங் எனப்படும் நுகர்தல் பயிற்சியை அறிமுகம் செய்துள்ளார்கள்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் எல்லா நறுமணங்களையும் கண்டறிய இந்தப் பயிற்சி அவசியம் என்று  பரிந்துரை செய்கிறார்கள்.

வெவ்வேறு வாசனையை ஒருசில மாதங்கள் நுகர்வதன் மூலம்  மூளை பலவித வாசனைகளை அடையாளம் காண உதவுகிறது. இந்த ஸ்மெல் பயிற்சி என்பது எளிமையானது மற்றும் விலை குறைவானது என்கிறார்கள் சர்வதேச மருத்துவ நிபுணர்கள்.

இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.

எந்த வாசனையும் கண்டறிய முடியாததும் தொடர் இருமலும் கொரோனா தொற்று ஏற்பட்டதற்காக அறிகுறிகளாக உள்ளன.
“கொரோனா பாதிக்கப்பட்ட பிறகு என்னால் எந்த வாசனையையும்  அறிய முடியவில்லை. எதுவும் சாப்பிட்டால் வாந்தி எடுக்கும் உணர்வு ஏற்படும். ஆட்டுக்கறி எனக்கு பெட்ரோல் போல வாசம் வீசும்” என்கிறார் ஒருவர்.

பெரும்பாலானவர்களுக்கு கொரோனா பாதிப்பு நீங்கிய பிறகு உடனடியாக வாசத்தை உணரும் தன்மை கிடைத்துவிடும். சிலருக்கு அது நாளாகிறது. எட்டு வாரங்களுக்குப் பிறகும் சிலரால் வாசனையை உணர முடிவதில்லை.
கார்டிகோஸ்டிராய்ட்ஸ் போன்ற சில மருந்துகளை எடுப்பதன் மூலமும் வாசனை நுகரும் தன்மையை மீண்டும் பெறமுடியும் என்ற கருத்தும் நிலவுகிறது.

“ஆனால் அதை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்யக்கூடாது” என்கிறார் நார்விச் மருத்துவப் பள்ளி பேராசிரியர் கார்ல் பில்பாட்.

கொரோனா பாதிப்புக்குப் பிறகு வாசனையை நுகரும் தன்மையை நோயாளிகள் இயல்பாகப் பெறுவார்கள் என்றும், ஸ்டிராய்ட்ஸ் சாப்பிடுவது பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் பில்பாட் செய்த ஆய்வில், 90 சதவீத கொரோனா நோயாளிகள் ஆறு மாதங்களுக்குப் பிறகு வாசனையை நுகரும் தன்மையைப் பெற்று விடுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

மனித மூளை வாசனையை அடையாளம் காண்பதற்கு முறையான  பயிற்சிகள் உதவும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *