பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில்!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கண்டி, பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தனது முதலாவது டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவர், தனஞ்சய டி சில்வாவுடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கி இலங்கை அணியை போட்டியின் மிகச் சிறந்த நிலையில் இருக்க வழி வகுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த நிலையில், நேற்றையதினம் வரை சிறப்பாக துடுப்பெடுத்தாடி 7 விக்கெட்டுகளை இழந்து 541 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் ஆகக் கூடுதலாக, நஜ்முல் ஹுஸைன் 163 ஓட்டங்களையும், அணியின் தலைவர் மொமினுல் ஹக் 127 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இலங்கை அணி சார்பில் விஷ்வ பெனாண்டோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய நான்காம் நாளில் தற்போது வரை 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 512 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காது 234 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு, மறு முனையில் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 154 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

பங்களாதேஷ் அணி சார்பில் தஸ்கின் அஹமட், மெஹ்தி ஹஸன் மிர்சா, தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

நாளை (25) போட்டியின் இறுதி நாள் என்பதோடு, இப்போட்டி எவ்வித பெறுபேறுமின்றி நிறைவடையும் வாய்ப்பே அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *