நீடிக்கும் ஊரடங்கு இனி தியேட்டர்களின் எதிர்காலம் என்னவாகும்?

கொரோனா குதறி எடுத்தத் துறைகளில் பிரதானமானது சினிமாத் துறை. படப்பிடிப்புகள் தடை பட்டு நிற்கிறது.
தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. காலப்போக்கில் இவை சரியாகலாம். ஆனால் பல மாதங்கள் மூடப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தியேட்டர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி விட்டது.

மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்னர் நூறு படங்களாவது தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கும்.

எத்தனை படங்கள் வசூல் குவித்திருக்கும் என நினைக்கிறீர்கள்?

மூன்றே மூன்று படங்கள் மட்டும் தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளன.

அவை – மாஸ்டர், கர்ணன், சுல்தான்.

கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியான மாஸ்டர், 70 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆன சுல்தான் இரு வாரத்தில் 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

கடந்த 9 ஆம் தேதி வெளியான கர்ணன் ஒரே வாரத்தில் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இந்தப் படங்களைக் காட்டிலும் கதை அமைப்பிலும், கதை சொன்ன விதத்திலும் நல்ல படங்கள் வந்துள்ள போதிலும், அவை வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

காரணம்? கொரோனா.

இந்த பெரும் தொற்று, இரக்கம் இல்லாமல், ஆட்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்த பின்னர் மக்கள் நடமாட்டத்தைக் குறைத்து விட்டார்கள்.

சினிமா ரசிகர்கள், பெரிய நடிகர்கள் படங்களை மட்டுமே தியேட்டரில் பார்ப்பது என முடிவு எடுத்து விட்டார்கள்.

அதனால் தான் விஜய், தனுஷ், கார்த்தி ஆகிய மூன்று நடிகர்கள் படம் மட்டும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

மற்றவர்கள் படங்களை ஓ.டி.டி. மற்றும் சின்னத்திரையில் பார்த்து கொள்ளலாம் என தீர்மானித்து விட்டனர் மக்கள்.

பாதி இருக்கைகளுடன் மட்டும் திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்ற ஆணையால் பெரிய பாதிப்பு கிடையாது.

ஏனென்றால், கொரோனாவுக்கு, முந்தைய காலகட்டத்திலும் தமிழகத்தில் உள்ள முக்கால்வாசி தியேட்டர்களில் பாதிக்கும் குறைவான இருக்கைகள் தான் நிரம்பின.
சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் தான் ஹவுஸ்புல் ஆகும்.

நட்சத்திர நடிகர்கள் படங்கள் மட்டும் விதி விலக்கு. அடுத்ததாக பெரிய நடிகர்கள் படம் எப்போது வரும் என்பது தெரியவில்லை.

ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ மற்றும் அஜித்தின் ‘வலிமை’ ஆகிய படங்கள் மட்டுமே இப்போது பெரிய படங்கள்.

இரண்டு படங்களில் ஷுட்டிங் இன்னும் முடியவில்லை.

இவை ரிலீஸ் ஆனால் தான் மீண்டும் தியேட்டர்களில் கூட்டத்தைப் பார்க்கலாம் என திரையரங்க உரிமையாளர்கள் சோர்வடைந்துள்ள நிலையில், புதிய லாக்டவுன் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நமது ஊரில் இரவு காட்சிகள் தான் நிரம்பும்.

தற்போது இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமையும் முழு நேர ஊரடங்கு.

இந்த ஊரடங்கு, மறு உத்தரவு வரும் வரை என்று சொல்லி இருக்கிறார்கள்.

கொரோனாவின் தாக்கம் குறையும் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

இதனால் கொஞ்ச மாதங்களுக்கு சினிமா தியேட்டர்களை இழுத்து மூடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளனர் தியேட்டர்கள் முதலாளிகள்.

கொரோனா முற்றிலுமாக ஒழிந்தால் மட்டுமே தியேட்டர்களுக்கு எதிர்காலம் என்பதே உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *