உணவுக் கழிவுகளிலிருந்து மின்சார உற்பத்தி!

அவுதிரேலியாவிலுள்ள கொக்பேர்ன் (Cockburn) நகரத்தின் உணவுக் கழிவுகளை, பசுமை ஆற்றலாக மாற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மனித வயிறு இயங்கும் முறையை பின்பற்றி, இயங்கக்கூடியது என்பதுதான் ஆச்சரியம்.
கொக்பேர்னிலுள்ள உணவகங்கள் மற்றும் அங்காடிகளில் சேகரிக்கப்படும் உணவு மற்றும் காய்கறி கழிவுகள் சேகரிக்கப்பட்டு, தொழிற்சாலை ஒன்றின் மூலம் அக்கழிவுகள் கூழ் நிலைக்கு மாற்றப்பட்டு, செயற்கையான சமிபாடடையும் தொட்டிகளில் இடப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அதிலுள்ள நுண்ணுயிரிகள் அவற்றை சிதைவடையச் செய்கின்றது.

அதனைத் தொடர்ந்து இடம்பெறும் செயற்பாடுகளின் மூலம், மெதேன் வாயு கிடைப்பதோடு, அதனைக் கொண்டு பெரிய மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் 2.4 மெகா வாற் மின்சாரம் இத்தொழிற்சாலையின் முழு செயற்பாட்டிற்கும் பயன்பத்தப்படுவதோடு, அருகிலுள்ள மூவாயிரம் வீடுகளுக்கும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு தங்களது வீடுகளுக்கு கிடைக்கும் மின்சாரம், உணவுக் கழிவுகள் மூலம்தான் கிடைக்கிறது என்று அங்குள்ள பலருக்கும் தெரியாது என தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 8 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்ட RichGro (ரிச் க்ரோ) எனும் இந்த சோதனைத் திட்ட தொழிற்சாலை மூலம், இதுவரை 43 தொன் உணவுக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கழிவுகள் குப்பை மேட்டில் தேங்கியிருந்தால், சுற்றுச்சூழலில் 81 ஆயிரம் கிலோகிராம் காபனிரொட்சைட்டு கலந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவ்வாறு சமிபாட்டுத் தொட்டிகளிலிருந்து கிடைக்கும் கூழ் போன்ற திரவத்தை, ‘ரிச் க்ரோ’ நிறுவனம் விவசாயிகளுக்கு உரமாக விற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கழிவுகளை ஆற்றலாக மாற்றும் நுட்பங்கள் தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் கவனம் செலுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *