கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விபரங்களை வெளியிட அரசாங்கம் மறுப்பு!

கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிட அரசாங்கம் இன்று (08) வியாழக்கிழமை மறுப்பு வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், குறித்த விபரங்களை கோரிய எழுத்து மூல பதிலை எதிர்பார்த்து முன்னறிவித்தல் கொடுத்திருந்தார்.

இந்த வினாவுக்கு கடந்த மார்ச் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பதிலளிக்கையில், கடந்த மார்ச் 19ஆம் திகதி வரை 546 பேர் கொவிட் – 19 தொற்று நோய் காரணமாக உயிரிழந்ததாகவும் தம்மிடம் கேட்கப்பட்ட ஏனைய விபரங்களை வெளியிட முடியாது எனவும் பதிலளித்துள்ளார்.

இவ்வாறாக தாம் எழுப்பிய முக்கிய வினாக்கள் சிலவற்றுக்கு உரிய பதிலை வழங்க மறுத்துள்ளதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

கொவிட் – 19 தொற்றால் உயிரிழந்தவர்களது விபரங்கள் யாவும் தனிப்பட்ட விடயங்கள் என்றும், அவை இரகசியத் தகவல்கள் என்றும் குறிப்பிட்டு, உண்மைத் தன்மையை மழுங்கடிக்கும் விதத்தில் உரிய தகவல்கள் மறைக்கப்பட்டிருப்பது பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என தாம் கருதுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் பின்வரும் விபரங்களை பாதிக்கப்பட்ட தரப்பினரின் பொதுவான நன்மை கருதியே அவர் சுகாதார அமைச்சரிடம் கோரி இருந்தார்.

கேட்கப்பட்ட கேள்விகள்:

(அ)

  1. கொவிட் 19 காரணமாக இலங்கையில் இதுவரை உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை யாது?
  2. உயிரிழந்தவரின் பெயர், முகவரி, உயிரிழந்த திகதி, உயிரிழக்கும் போது வயது, உயிரிழந்த இடம், உடலை இனங்கண்டுள்ள நெருங்கிய உறவினர், தகனம் செய்யப்பட்ட இடம் மற்றும் திகதி
  3. மரணம் பதிவு செய்யப்பட்ட திகதி, பதிவு இலக்கம் மற்றும் பிரிவு
  4. உயிரிழந்தோரின் மரணச் சான்றிதழ் ஒரு பிரதி வீதம் சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்படுமா?

(ஆ) இன்றேல் ஏன்?

இக்கேள்விகளுக்கு சுகாதார அமைச்சரிடமிருந்து வழங்கப்பட்ட பதில்கள் வருமாறு:

(அ)

  1. 2021.03.19 வரை கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 546
  2. சமர்பிக்க முடியாதுள்ளது.
  3. சமர்பிக்க முடியாதுள்ளது.
  4. சமர்பிக்க முடியாதுள்ளது.

(ஆ) வேண்டப்பட்ட தகவல்கள் மற்றும் ஆவணங்களில் மரணித்தவர்களின் தனிப்பட்ட தகவல்கள் உள்ளடங்கியுள்ளது. அவை இரகசியத் தகவல்கள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *