கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கும் மக்கள்!

கொரோனாவின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தன் அசுரக் கணக்கில் வேகம் காட்டிக்கொண்டிருக்கிறது. பரிசோதனைகளும் தடுப்பூசிகளும் மட்டுமே பாதிப்பைத் தடுக்க நம் கையில் இருக்கிற அஸ்திரங்கள். இப்போது நாட்டின் பல பகுதிகளில் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. ஆனாலும், ஹரியானா மாநிலத்திலுள்ள நூஹ் போன்ற மாவட்டங்களில் தடுப்பூசி முயற்சிகள் மிகமிக பின்னடைவில் உள்ளன.

நூஹ் மாவட்டத்தின் கிராமப்புறப் பகுதிகளில் இதுவரை ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. `கோவிட் தடுப்பூசி போட வலியுறுத்தினால், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசிகளைக்கூட நிறுத்திவிடுவார்கள்’ என்று அங்குள்ள சுகாதாரப் பணியாளர்கள் அஞ்சுகிறார்கள்.

இங்கு சில பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு நபருக்குக்கூட தடுப்பூசி செலுத்தப்படவில்லை. அது மட்டுமல்ல… இங்குள்ள சுகாதாரப் பணியாளர்கள்கூட ஆரம்பத்தில் பயந்து, தயங்கி, தாமதமாகத்தான் தடுப்பூசியை நம்பத் தொடங்கியிருக் கின்றனர். “ஒரு மாதத்துக்கு முன் தடுப்பூசி எடுக்கும்படி கேட்டபோது தான் பயந்ததாகச் சொல்கிறார் சுகாதாரப் பணியாளர் ஆஷா.

ஆனால், லேசான காய்ச்சல் தவிர, அவர் நன்றாகவே உணர்ந்தார். இன்னமும் மருத்துவமனை ஊழியர்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மத்தியில்கூட தடுப்பூசி தயக்கம் அதிகமாக இருக்கிறது. வைரஸ் உண்மையானதல்ல என்றே இங்கு பலர் இன்னமும் நம்புகின்றனர்.

இந்தியாவில் ஏப்ரல் 4 கணக்கெடுப்பின்படி கோவிட் -19 தடுப்பூசியை 78 நாள்களில் 75.9 மில்லியன் மக்களுக்குச் செலுத்தியுள்ளது. ஜூலை 31-ம் தேதிக்குள் 250 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி அளிப்பதற்கான ஆரம்ப இலக்கை அடைய, இந்தியா ஒரு நாளைக்கு 3.5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். கடந்த வாரத்தில், இந்தியா ஒரு நாளைக்கு சராசரியாக 1.8 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இதுவே குறைவான வேகம் எனும்போது, நூஹ் போன்ற மாவட்டங்கள் அரசுக்கு மிகப்பெரிய சவாலை அளித்து வருகின்றன.

“எங்கள் கிராமத்தில் கொரோனா அதிக அளவில் இல்லாதபோது, நாங்கள் ஏன் தடுப்பூசி போட வேண்டும்? தடுப்பூசி போடுமாறு கட்டாயப்படுத்துவது தவறு. தடுப்பூசிக்கு நாங்கள் பயப்படுகிறோம். இதன் காரணமாக இறக்க நாங்கள் விரும்பவில்லை” என்பதுதான் இந்தக் கிராமத்தில் பெரும்பாலான மக்களின் உண
இந்தியத் தலைநகரிலிருந்து இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான பயண தூரமாக இருந்தபோதிலும், நூஹ் ஹரியானாவின் ஏழ்மையான மாவட்டமாகவே உள்ளது. விவசாய பணிகளும் கால்நடை வளர்ப்புமே இம்மக்களின் வாழ்வாதாரம். எழுத்தறிவின்மை, அடிப்படை வசதிகள் குறைவு, விழிப்புணர்வு இல்லாமை போன்ற விஷயங்கள் காலம் காலமாகத் தொடர்வதால், நூஹ் போன்ற மாவட்டங்கள் எப்போதுமே பின்னடைவு பட்டியலில் இடம்பெறுகின்றன. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வசதிகளும் இல்லை. இங்கு 17.4% வீடுகளில் மட்டுமே டிவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் தடுப்பூசி மட்டுமல்ல… அனைத்துத் தடுப்பூசிகளுக்குமே இங்கு போராட்டம்தான். சில ஆண்டுகளுக்கு முன் வரை இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளில் ஆறில் ஒரு பங்கினர் மட்டுமே நோய்த்தடுப்பு தடுப்பூசிகளைப் பெற்று வந்தனர். பெரும் முயற்சிக்குப் பிறகே இந்த அளவை அதிகரிக்க முடிந்தது. வலுவான எதிர்ப்பும் குறைந்த விழிப்புணர்வுமே இதற்குக் காரணம்.

நூஹ் மாவட்டத்தில் முதலில் கோவிஷீல்டு தடுப்பூசி 10 டோஸ் குப்பிகளில் வழங்கப்பட்டிருக்கிறது, கோவாக்சின் 20 டோஸ் குப்பிகளில் வந்தது. இதற்கு ஒரே நேரத்தில் 10 அல்லது 20 பயனாளிகளைக் கண்டுபிடிப்பதும் சுகாதாரத் துறைக்குப் பெரும் சவாலானதாக இருக்கிறது.

“நீங்கள் மற்ற மாவட்டங்களையும் நூஹையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இங்கே பத்து மடங்கு சிக்கல்கள் உள்ளன, ஆனால், நாங்கள் கோவிட்-19 தடுப்பூசிக்கான விஷயங்களை எளிதாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி பசந்த் குமார் துபே நம்பிக்கையோடு கூறுகிறார். அவரின் முயற்சிகள் விரைவில் வெற்றி பெறட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *