இலங்கையில் மட்டக்களப்பு எனும் பெயர் எப்படி வந்தது?

உப்பாற்றால் (நீரேரி) அப்பிரதேசம் சூழப்பட்டதால் இதை “களப்பு” என்று அழைப்பதால் மட்டக்களப்பு எனும் பெயர் உருவாகியது” என்று நம்பப்படுகிறது.
இலங்கைமீது படையெடுத்த முற்குகர், கிழக்குப் பக்கமாக தமது படகை செலுத்தி வந்த அவர்கள் உப்பாறு (நீரேரி ) ஊடாக செல்லும் போது ஆழம் குறைவானதால் படகு தட்டியது. இது மட்டும் மட்டடா மட்டக்களப்படா (இந்தக் களப்பு இதுவரையும் தான்) எனக் கூறி மட்டக்களப்பு எனும் பெயரை இட்டனர். “மட்டமான” களப்பு என்பதனால் “மட்டக்களப்பு” எனவும் கூறப்படுகிறது. மட்டக்களப்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ‘Batticaloa’ (பற்றிக்கலோ) போர்த்துக்கீச சொல்லிலிருந்து உருவாகியது.
Lady Manning Bridge (லேடி மன்னிங் பாலம்) சப்தமற்ற இரவு நேர முழுமதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது. மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு “மீன் பாடும் தேன் நாடு” எனப் பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது.
இற்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் மக்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கு உதாரணம் புராதனமான நூலாகிய இரமாயணமும்கூட. இங்கு அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயமும் அதன் தீர்த்தக்கேணியும் ஹனுமானால் உருவாக்கப்பட்டது எனக் கூறுகிறது.
மட்டக்களப்பு உப்பாறு (நீரேரி) இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒருபகுதி எழுவான்கரை (சூரியன் எழும் பகுதி அது கிழக்குப்பகுதி) என்றும் மறு பகுதி படுவான்கரை (சூரியன் மறையும் பகுதி அது மேற்குப்பகுதி) என்றும் அழைக்கப்படுகின்றது.
சாலைகள் ஏ-4 நெடுஞ்சாலை மட்டக்களப்பையும் கொழும்பையும் பொத்துவில், கல்முனை ஊடாக இணைக்கிறது.
ஏ-5 நெடுஞ்சாலை மட்டக்களப்பை செங்கலடி ஊடாகப் பேராதனையுடன் இணைக்கிறது.
ஏ-15 நெடுஞ்சாலை மட்டக்களப்பை திருகோணமலையுடன் இணைக்கிறது.
பேருந்து மட்டக்களப்பு நகரின் முக்கிய செயற்பாடுகளில் அங்கம் பெறுகின்றன.
புளியந்தீவு: மட்டக்களப்பு வாவியில் ஓர் தீவாக இது அமைந்து. இங்கு அரச திணைக்களங்கள், அலுவலகங்கள், பாடசாலைகள், வங்கிகள், சமய வழிபாட்டு நிலையங்கள், பொது வைத்தியசாலை, மட்டக்களப்புக் கோட்டை, மட்டக்களப்பு பொது நூலகம், விளையாட்டரங்கு, கடைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அலுவலகங்கள் என்பன காணப்படுகின்றன.
புதூர்: புளியந்தீவை மேற்குத் தரைப்பகுதியுடன் பாலம்மூலம் இணைக்கும் இப்பகுதியில், இலங்கை வான்படைக்குச் சொந்தமான மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் போக்குவரத்திற்கு பயன்படும் விமானத்தளம் ஒன்று உள்ளது.
பரந்துபட்ட கிழக்கு மாகாணத்தின் முதன்மைப் பல்கலைக்கழகமான கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை இம் மாவட்டத்தின் வந்தாறுமூலை எனும் ஊரில் அமைந்துள்ளது.
மட்டக்களப்பு கல்வி வலயங்கள் மண்முனை வடக்கு, மண்முனைப் பற்று, மண்முனை மேற்கு, ஏறாவூர்ப் பற்றென நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 233 அரச பாடசாலைகள் உள்ளன.
தேசிய பாடசாலைகள்…
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட புனித மிக்கேல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, சிசிலியா பெண்கள் பாடசாலை, வின்சன்ட் பெண்கள் பாடசாலை போன்றனவும், சுவாமி விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் மற்றும் மட்டக்களப்பு விவேகானந்தா பெண்கள் மகா வித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக் கல்லூரி என்பனவாகும்.
தமிழர் பண்பாடு செல்வாக்கு செலுத்தும் ஒன்றாக இங்கு காணப்படுகின்றது. இசை, நடனம், நாடகம், சமயமென இதன் தாக்கம் உள்ளது. தமிழர் ஆடற்கலைகளில் ஒன்றான நாட்டுக்கூத்து (வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்து) இங்கு பிரபல்யம் பெற்றது. ஆயினும், குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இசுலாமிய கலாச்சாரம் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததால், இங்கு ஐரோப்பிய கலாச்சாரத்தின் தாக்கமும் காணப்படுக்கின்றது. அதிலும் போர்த்துக்கேய கலாச்சாரத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இங்கு “கத்தோலிக்க பறங்கியர் ஒன்றியம்” என்ற போர்த்துக்கேய கலாச்சாரத்தைப் பின்பற்றும் அமைப்பு காணப்படுகின்றது.
இந்து, இசுலாம், கிறிஸ்தவம், பெளத்தம் ஆகிய நான்கு சமய நம்பிக்கை கொண்டவர்கள் இம்மாவட்டத்தில் காணப்படுகின்றனர்.
இவர்களில் இந்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர். இச் சமயங்களைப் பிற்பற்றுவோர் இந்துக்கள், இசுலாமியர், கிறித்தவர், பெளத்தர், ஏனையோர் முறையே 64.6%, 25.5%, 8.8%, 1.1%, 0.0% என்ற அடிப்படையில் 2012ம் ஆண்டில் இலங்கை குடித்தொகை, புள்ளிவிபர திணைக்கள கணக்கெடுப்பில் காணப்பட்டனர். மட்டக்களப்பு வரலாற்றுடன் சமயங்களின் முக்கியத்துவமும் அங்கு காணப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புராதன இந்து ஆலயங்கள் பலவற்றைக் காணலாம். இராமாயணத்துடன் தொடர்படுத்தப்படும் மாமாங்கம் முதல் பல புராதன இந்து ஆலயங்கள் இங்கு காணப்படுகின்றன.
இங்கு கண்ணகி வழிபாடு வேறுபகுதிகளில் இல்லாதவாறு முக்கியத்துவம் பெற்று காணப்படுகின்றது.
துடுப்பாட்டம், காற்பந்தாட்டம் என்பன பரவலாக விளையாடப்படும் விளையாட்டாகவுள்ளது. ஆனாலும் தேசிய அளவில் மட்டக்களப்பிற்கு புகழ் தேடித் தந்த விளையாட்டாகக் கூடைப்பந்தாட்டம் அமைந்துள்ளது.
மட்டக்களப்பு நகரில் “வெபர் அரங்கு” எனும் பிரதான விளையாட்டு அரங்கு காணப்படுகின்றது
இலங்கை சுதந்திரம் அடைந்தபோது மட்டக்களப்புப் பிரதேசம் (தற்போதைய மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் பகுதிகள்) 6,998 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் 202,987 சனத்தொகையையும் கொண்டிருந்தது. 1960 இன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்டது.
ஈழப் போர் ஆரம்பித்தபோது, அதன் தாக்கம் இங்கும் பரவியது. இந்திய அமைதி காக்கும் படையினர் பிரசன்னம், அவர்களுடனான போர் என்பன இப்பகுதியில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2007 ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பின் பெரும் பகுதி தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்(LTTE)கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *