ரஜினி, கமல் வழியில் விஜய் சேதுபதி!

ஏதேனும் ஒரு மாநிலத்தில் பிரபலமாகிவிட்டால், அதை மூலதனமாகக் கொண்டு வெவ்வேறு மொழி திரைப்படங்களில் தலைகாட்ட முனைவது என்டிஆர், சிவாஜி காலம் தொட்டு தொடரும் வழக்கம்.

தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்குப் பிறகு விடுபட்டுப்போன அந்த கண்ணியைத் தன் கையிலெடுத்திருக்கிறார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி.

இந்த அணுகுமுறை, இப்போதைய சூழலில் சரியானதுதானா?!

ராமராவும் நாகேஸ்வரராவும்..!

மீரா இந்தி பதிப்பு உட்பட ஒரே நேரத்தில் வெவ்வேறு மொழிகளில் உருவான திரைப்படங்களில் நடித்தவர் மக்கள்திலகம் எம்ஜிஆர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த அடையாளத்தை உருவாக்க முற்பட்ட காலம் முதல் அசைக்க முடியாத தடத்தை விட்டுச் சென்றது வரை வேறு மொழி திரைப்படங்களில் அவர் தன் கவனத்தைத் திருப்பவில்லை.

மாறாக, நட்புக்காக தெலுங்கில் 9 திரைப்படங்களிலும் மலையாளம் மற்றும் இந்தியில் 2 திரைப்படங்களிலும் நடித்தவர் சிவாஜி. இவற்றில் பெரும்பாலானவை கவுரவ வேடங்களே.

அதேபோல, தனக்குரிய நட்சத்திர அந்தஸ்து கொஞ்சமும் குறையாமல் கர்ணன், சம்பூர்ண ராமாயணம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் என்.டி.ராமாராவ்.

1950களிலேயே தமிழில் தலைகாட்டிய நாகேஸ்வர ராவ் தொடங்கி, அதன்பின்னர் நடிக்க வந்த பிரேம் நசீர், கல்யாண் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தமிழில் நடித்திருக்கின்றனர்.

இதேபோல, 60களில் ஓரிரு இந்திப் படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார் ஜெமினி கணேசன். 1970களில் தமிழில் நடித்து பெரும்புகழோடு இருந்தபோதே மலையாளப் படங்களிலும் நடித்தார் ரவிச்சந்திரன்.

ரஜினி கமலின் பொற்காலம்!

80களின் இறுதிவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி திரைப்படங்கள் பெரும்பாலும் சென்னையிலேயே உருவாக்கப்பட்டன.

ஹைதராபாத், திருவனந்தபுரம், பெங்களூருவுக்கு தனித்தனியாகத் திரைப்படத் தயாரிப்பு பிரிந்தபோது, அவற்றுக்கிடையேயான இடைவெளியும் அதிகமானது.

கிட்டத்தட்ட இந்தக் காலகட்டம் வரை தமிழின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழ்ந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் உலக நாயகன் கமல்ஹாசனும் தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரதான வேடங்களில் நடித்தனர். அவை பெரும்பாலும் வெற்றிப் படங்களாக அமைந்தன.

தமிழில் பிற நடிகர்களோடு சேர்ந்து நடிக்கத் தயங்கிய இருவரும், இந்தியில் ரிஷிகபூர், அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெராஃப், சத்ருகன் சின்ஹா, கோவிந்தா போன்ற நடிகர்களுடன் இணைந்து ‘மல்டி ஸ்டார்’ திரைப்படங்களில் நடித்தது வரலாறு. கிட்டத்தட்ட தமிழ் நடிகர்களுக்கு வேறு மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்த பொற்காலம் அது.
இவர்களைப் பின்பற்றி கார்த்திக், அர்ஜுன், ராம்கி, அருண் பாண்டியன் போன்றவர்கள் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நேரடியாக நடித்தனர். அவை ‘டப்’ செய்யப்பட்டு தமிழிலும் வெளியிடப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில், மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப் பல தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தும் தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்தவர் விஜயகாந்த்.

அவரது சமகால போட்டியாளர்களான சத்யராஜ், பிரபு உட்படப் பல நடிகர்கள் இன்று மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் வெற்றிகரமாக குணசித்திரப் பாத்திரங்களை ஏற்று வருகின்றனர்.

90களின் தொடக்கத்திலேயே ரஜினியும் கமலும் தங்களது படங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துக்கொண்டனர். அதற்கு ஏதுவாக, அவர்களுக்கான சந்தையும் அளவில் பெரிதானது.

இதனால் அவர்களது படங்கள் வேறு மொழிகளில் டப்பிங் அல்லது ரீமேக் ஆகின. இதன் தொடர்ச்சியாக தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், விஜயசாந்தி, ராஜசேகர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் படங்கள் தமிழில் ‘டப்’ செய்யப்பட்டன.

மலையாளத்தில் இருந்து மம்முட்டி, மோகன்லால் நடித்த திரைப்படங்களும், வெகுசில கன்னட திரைப்படங்களும் தமிழில் வெளியாகின. அந்த காலகட்டத்தில் வேறு மொழி திரைப்படங்கள் கன்னடத்தில் ‘டப்’ செய்ய அனுமதியில்லாததால், அம்மொழிப் படங்கள் மட்டும் தமிழில் மொழிமாற்றம் ஆகின.

90களில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ் உட்பட பல தெலுங்கு நட்சத்திரங்கள் தங்கள் படங்களை இந்தியிலும் தயாரித்தனர். இவை இரு மொழிப் படங்களாக அமைந்தன.

குறைவான ‘டப்பிங்’ படங்கள்!

தமிழில் அஜித், விஜய் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்த பிறகு, வெற்றி பெறும் ‘டப்பிங்’ படங்களின் எண்ணிக்கை சொற்பமானது. அதே நேரத்தில் சூர்யா, விக்ரம் நடித்த திரைப்படங்கள் நேரடியாகவோ அல்லது ‘டப்’ செய்யப்பட்டோ தெலுங்கிலும் இந்தியிலும் வெளியாகின.

குறிப்பாக, சூர்யா நடித்த ‘கஜினி’ தெலுங்கில் பெருவெற்றி பெற்று தமிழ் படங்கள் ‘டப்’ செய்யப்படும் கலாசாரத்தை மீண்டும் பரவலாக்கியது. அதன்பிறகு விஷால், கார்த்தி உள்ளிட்ட சில நடிகர்களின் திரைப்படங்கள் தெலுங்கில் ‘டப்’ செய்யப்படுவது ஒரு வழக்கமாகிப் போனது.

சொல்லப் போனால், தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு காட்சிகளையும் களத்தையும் தீர்மானிக்கும் அளவுக்கு நிலைமை மாறிப்போனது. இதனால், சில படங்கள் ‘பப்படம்’ ஆனது தனிக்கதை.
இதெல்லாமே, ஒரு மாநிலத்தில் அல்லது மொழியில் வெற்றி பெறும் நட்சத்திரங்கள் அடுத்தடுத்த திரையுலகங்களில் கால் பதிப்பதென்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்த்துகிறது. சில நேரங்களில் ‘பைலிங்குவல்’ முயற்சிகள் அமைய இதுவே காரணம்.

இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஒரு திரைப்படத்தை உருவாக்க அதிக காலம் தேவைப்படுமென்ற நிலை வரும்போது, பலரும் ‘டப்பிங்’கையே தங்களுக்கானதாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் மலையாளம், தமிழ், கன்னட மொழியில் தங்கள் படங்களைத் தொடர்ந்து வெளியிடுகின்றனர்.

இன்று விஜய், அஜித் படங்கள் மட்டுமல்லாமல், தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்களில் முக்காலே மூணு வீசம் வெவ்வேறு மொழிகளில் ‘டப்’ செய்யப்படுகின்றன.

மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மொழிகளில் திரைப்படங்களுக்கான சேனல்களின் பெருக்கத்தால், எல்லா மொழிப் படங்களும் வேறொரு மொழிக்கு எளிதாக மாற்றப்படுகின்றன.

இப்படியொரு சூழலில்தான், தனக்கான சந்தையை விரிவுபடுத்தும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார் விஜய் சேதுபதி. மலையாளம், தெலுங்கு, இந்தி என்று எந்த பாரபட்சமும் பார்க்காமல் எல்லா மொழிகளிலும் முகம் காட்டுவதைத் தொடர்கிறார்.

விசேவின் ‘பழைய பார்முலா’!

2004இல் தமிழ் திரையுலகில் நுழைந்தாலும் நாயகனின் தோழனாக, வில்லன் கூட்டத்தில் ஒருவராக என்று பல்வேறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. பெண் எனும் சீரியலிலும் நடித்திருக்கிறார்.

ஆனாலும், ‘தென்மேற்கு பருவக்காற்று’ மட்டுமே அவரை நாயகனாகக் காட்டியது. அதன்பிறகும் கூட ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படங்களின் வெற்றி மட்டுமே அவரை புகழ் வெளிச்சத்தில் நிறுத்தியது.

நாயகனாக நடிக்கத் தொடங்கிய இரண்டொரு ஆண்டுகளிலேயே ‘சூது கவ்வும்’ படத்தில் 45 வயதுமிக்கவராக நடித்தார். ‘ஆரஞ்ச் மிட்டாய்’ படத்தில் வேறொரு நடிகரின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் 60 வயதான முதியவர் வேடத்தை ஏற்றார்.

இந்தப் படங்கள் அனைத்தும் ‘ஊமை விழிகள்’, ‘புலன் விசாரணை’யில் வயதான கதாபாத்திரத்தில் மட்டுமே வந்த விஜய்காந்தைப் பார்த்தது போலிருந்தது.

தந்தை, மகன் அல்லது இரட்டை வேடங்களில் ஏதோ ஒன்று முதிய பாத்திரம் ஏற்பதைவிட, படம் முழுக்க அந்தப் பாத்திரத்தில் மட்டுமே நடிப்பது வழக்கமாக நாயகர்கள் தவிர்க்கும் விஷயம்.

ஜெயப்பிரகாஷ் – துளசி ஜோடிக்கு முக்கியத்துவம் உள்ள ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் துணை கதாபாத்திரத்தை ஏற்றார்.

ஜிகிர்தண்டா, திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களில் கவுரவ வேடங்களில் தலை காட்டினார். வி.சே. நடித்த படங்களின் எண்ணிக்கை அரை சதத்தை தொட்டதில், இந்தப் படங்களின் எண்ணிக்கைக்கும் பங்குண்டு.

2019இல் வெளியான ‘மார்கோனி மத்தாய்’ மூலமாக மலையாளத்தில் அறிமுகமானார் விஜய் சேதுபதி. அதேபோல, நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரஞ்சீவி நடித்த ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் மிகச்சிறிய வேடத்தில் நடித்தார்.

இப்போது, தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் ‘உப்பெனா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அதுவும் நாயகியின் தந்தையாக..

உப்பெனா ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சிரஞ்சீவி, சைரா படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தபோது விஜய் சேதுபதியைப் பார்ப்பதற்காகவே சில ரசிகர்கள் வந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

“முதலில் அவர்கள் என்னைப் பார்ப்பதற்காகவே வந்ததாக நினைத்தேன். அதன்பிறகே, விஜய் சேதுபதியைப் பார்க்க வந்தது தெரிந்தது. அந்த நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து ஆச்சர்யமடைந்தேன்” என்று மேடையில் தெரிவித்தார்.

உப்பெனாவில் தன் சகோதரி மகன் நாயகனாக நடித்திருக்கிறார் என்பதையும் தாண்டி, அப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதித்ததாக இயக்குனர் சொன்னபோது தான் மேலும் ஆச்சர்யமடைந்ததாகக் கூறினார்.

கண்டிப்பாக இது எல்லாமே அப்படத்தை ரசித்த தெலுங்கு ரசிகர்களின் மனதில் பிரதிபலித்திருக்கும். அவர்களில் ஒரு சிலர், நாளை தெலுங்கில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தையோ அல்லது ‘டப்’ செய்யப்பட்ட படத்தையோ ரசித்து விசிலடிப்பதற்கான வாய்ப்புகள் அனேகம்.

தவறிப்போன இந்தி வாய்ப்பு!

1993இல் வெளியாகி படுபயங்கர வசூலையும், ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளையும் அள்ளிய படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இப்படத்தில் டாம் ஹேங்ஸ் நடித்த வேடத்தை இந்தியில் ஏற்றிருக்கிறார் அமீர்கான்.

‘லால்சிங் சத்தா’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் அமீர்கானோடு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் பயணிக்கும் ஒரு பாத்திரத்தில் நடிக்கவிருந்தார் விஜய் சேதுபதி.

கொரோனா பாதிப்பில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் வேறு சில காரணங்களால், இப்போது அந்த வேடத்தில் நாகசைதன்யா நடிக்கவிருக்கிறார்.

ஒரு நல்ல வாய்ப்பு கை நழுவிப்போனாலும், வேறொரு வாய்ப்பு மூலமாக அதனை சரிக்கட்டியிருக்கிறார் வி.சே. இந்தியில் ரீமேக் ஆகும் ‘மாநகரம்’ படத்தில் நடிக்கிறார்.

அந்த படத்தில் ஸ்ரீயோ அல்லது சந்தீப்போ ஏற்ற நாயக பாத்திரங்கள் அல்லாமல் முனீஸ்காந்த் வேடத்தை ஏற்றிருக்கிறார் என்பது இன்னொரு ஆச்சர்யம். குணசித்திர பாத்திரம் என்றபோதும், புதிய மொழியில் அதிக ரசிகர்களைக் கவர்வதற்கு உத்தரவாதமான வாய்ப்பு இது.

இப்படித் தேர்ந்தெடுத்து தெலுங்கு, மலையாளம், இந்தியில் நடிக்கும் வழக்கம்தான், 80களில் ரஜினியும் கமலும் சென்ற பாதையில் சில மாற்றங்களுடன் வி.சே. தற்போது பயணிக்கிறார் என்பதைப் புடம்போட்டு விளக்குகிறது.

ஆனால், தாங்கள் நடித்த தமிழ் திரைப்படங்களில் இருந்து முற்றிலுமாக விலகி ‘மல்டி ஸ்டார்’ கதைகளிலும், ஆர்ட் சினிமாக்களிலும் நடித்ததே அவர்கள் இருவரின் பாணியாக இருந்தது.

அப்படங்களிலும் கூட, அவர்கள் தென்னக நட்சத்திரங்களாகவே அறியப்பட்டனர்.

அவர்களது பிறமொழிப் படங்களின் வெற்றி சதவிகிதம் குறைந்ததே, பிற்பாடு இருவரது முழுக்கவனமும் தமிழ் திரையுலகில் படியக் காரணமாக இருந்தது.

மாறாக, விஜய் சேதுபதியின் தனிப்பட்ட நடிப்பு பாணி அலுப்பு தட்டுவதாக விமர்சகர்கள் குறைபட்டுக்கொள்ளும் சூழலில் அவர் தனது கவனத்தை வேறு மொழி திரைப்படங்கள் மீது திருப்பியிருக்கிறார்.

இன்று வரும் நாயகர்கள் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று படங்களைத் தேர்ந்தெடுக்கும் நிலையில், தொடர்ச்சியாக பத்துக்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் விஜய் சேதுபதியின் கைவசமிருக்கின்றன.

இது தவிர, சிறு இடைவெளிக்குப் பிறகு ‘மாஸ்டர் செஃப்’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தடம் பதிக்கத் தயாராகிறார்.

பொதுவெளியில் மக்களில் ஒருவராகத் தனது பிம்பத்தை வடித்துள்ள வி.சே., அதில் இருந்து இம்மியும் பிசகாமல் சர்ச்சைக்குரிய விஷயங்களில் கூட தன்னை வெளிப்படுத்தி வருவது அவரது வெற்றிகளுள் ஒன்று. விரைவில் நாடு முழுக்கத் தெரிந்த பிரபலமாக அவர் மாறக்கூடும்.

அதற்காகவே, தன்னை அறிந்தவர்களின் பரப்பை பெருக்கும் இன்னொரு முயற்சியில் இறங்கியிருக்கிறார். இது எல்லாமே, மெல்லப் படரும் அவரது திட்டமிட்ட உழைப்பின் பரிமாணம்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *