வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு!

”பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.

இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.

தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டுக் கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல்நீக்கி 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைத்து, மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, பூச்சிவெட்டு உள்ள இடத்தில தடவிவர வேண்டும்.

5 பூண்டுப் பற்கள் எடுத்துத் தோல்நீக்கி 100 மில்லி பசும்பாலில் போட்டு வேக வைக்கவேண்டும். நன்றாக வெந்த பின்பு பூண்டைக் கடைந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மார்புவலி, மூச்சு அடைப்பு சரியாகும்.

பூண்டுக் கஞ்சி சாப்பிடுவது கிராமத்து வழக்கம். தேவையான அளவு பூண்டினை எடுத்துத் தோல்நீக்கி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை முறையே 50 கிராம் சேர்த்து அரைத்து, தூள் செய்து, அரை லிட்டர் பசும்பால் விட்டு வேகவைத்து, வற்றும் சமயத்தில் அதில் பனங்கற்கண்டைச் சேர்க்க வேண்டும். மாதம் இருமுறை பூண்டுக் கஞ்சி சாப்பிட்டால் ரத்தசோகை மாறி உடல் வலிமை பெறும்.

பூண்டுக் கஞ்சியுடன் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரியக்குறைவு சரியாகும். மேலும் மலச்சிக்கல், சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவையும் சரியாகும்.

10 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 3 பூண்டுப் பற்களும், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 5 பூண்டுப் பற்களும் பனங்கற்கண்டுடன் சேர்த்து உண்டு வர உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம், ரத்த உறைவு, சீரற்ற ரத்த ஓட்டம் ஆகியவற்றுக்குப் பூண்டு நல்ல பலன் தரும். பூண்டுப் பல் 5 எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, அரைத்துத் தூள் செய்து, பால் கலந்து உண்டுவர ரத்த ஓட்டம் சரியாகும்.

வாதநோய்கள் (பக்கவாதம், மூட்டுவாதம், சுண்டுவாதம், நடுக்குவாதம், ஒருபக்க வாதம்) குணப்படுத்தவும் பூண்டு சிறந்த மருந்து. விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், புங்க எண்ணெய், புன்னை எண்ணெய் (புன்னை மர எண்ணெய்), இலுப்பெண்ணெய் ஆகியவற்றை 100 மில்லி எடுத்து ஒன்றாகக் கலந்து அத்துடன் தேவையான அளவு தழுதாளை இலை, நொச்சி இலை ஆகியவற்றைப் பூண்டின் சாறுவிட்டு அரைத்து, அதையும் எண்ணெயில் கலக்க வேண்டும். எண்ணெயை நன்கு கொதிக்க வைத்து ஆறவிட்டு வாதம் உள்ள இடத்தில் தடவி வர மேற்கூறிய வாதங்கள் சரியாகும்.” எனச் சொல்லும் சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் இறுதியாக இப்படிச் சொல்கிறார்.

”அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பூண்டுக்கும் பொருந்தும்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *