முருங்கையை உணவில் சேர்ப்போம் முன்னூறு நோய்களை விரட்டுவோம்

முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக
நிரூபிக்கப்பட்டுள்ளது.
மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும். ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமைக்கலாம்.
வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சேர்த்து வந்தாலே குடும்ப ஆரேக்கியம் மேம்படும்.
மருத்துவக் குணங்கள்
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.
நீரிழிவுக்காரர்களுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இல்லை என்கிறார்கள். குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது முருங்கை.
சைவ உணவுக்காரர்களுக்கு சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவுத் துறை நிபுணர்கள், இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய
புரதத்துக்கு இணையானது.
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு எகிறும்.
குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. முருங்கைப்பூவை பொடிமாஸ் மாதிரி செய்து சாப்பிடலாம். அரைவேக்காடு வேக வைத்த பாசிப்பருப்புடன், முருங்கைப்பூவையும் பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது குழந்தையின்மைப் பிரச்னை தீர உதவும். கர்ப்பப்பைகோளாறுகளை சரி செய்யும்.
ஒரே ஒரு கைப்பிடி பருப்பு சேர்த்து வைக்கிற தண்ணி சாம்பாரில், கொதிக்கும் போது நான்கைந்து கொத்து முருங்கைக்கீரையை அப்படியே கொத்தாகச் சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு அந்தக் கொத்தை அப்படியே எடுத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, நுரையீரலில் கட்டிக் கொண்ட கபத்தை வெளியேற்றும். அடிக்கடி சளி, இருமல், அலர்ஜியால் அவதிப் படுவோருக்கும் இது அருமையான மருந்து.
தினமும் சாப்பிட வேண்டிய அளவு
பெண்கள் 100 கிராம்
ஆண்கள் 40 கிராம்
10 வயதுக்கு மேலான குழந்தைகள் 50 கிராம்
முருங்கைச் சத்து முழுமையானது!
முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் சியும், வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம். மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.
முருங்கைக்கீரை சூப்
என்னென்ன தேவை?
முருங்கைக்கீரை (இளம் காம்புடன் சேர்த்து) – 2 கப், பூண்டு- 5பல், சாம்பார் வெங்காயம் – 6, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, மிளகு – 1 டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
உப்பு தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு, குக்கரில் 1 விசில் வைக்கவும். ஆறியதும் மிக்சியில் அரைத்து, கீரை வடிகட்டியில் வடிகட்டி உப்பு சேர்த்துப் பரிமாறவும்.
வாரத்துக்கு 3 முறை என 6 வாரங்கள் எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் (காலை வேளை). இதில் பால் சேர்க்கக்கூடாது. அதில் கால்சியம் இருப்பதால் கீரையில் உள்ள இரும்பை முறித்து விடும்.
எப்படி சமைக்கக்கூடாது?
முருங்கைக்கீரையின் சத்துகள் முழுமையாகக் கிடைக்க கீரையை நீண்ட நேரம் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் சமைப்பதால் பார்வைத்திறனுக்கு உதவக்கூடிய கரோட்டின் சிதைந்து விடும். முருங்கைக்கீரையை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
முருங்கைக்கீரை கூட்டு
என்னென்ன தேவை?
பாசிப்பருப்பு- 1 கப், முருங்கைக்கீரை – 2 கப், பூண்டு – 5 பல், சீரகம் – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் (கீறியது) – 3, உப்பு, மஞ்சள் தூள்- சிறிதளவு.
தாளிக்க…
கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பு, பூண்டு, பச்சைமிளகாய், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பாகம் வெந்ததும் அலசி வைத்துள்ள கீரையை அதில் சேர்க்கவும். 10 நிமிடங்கள் வேக வைத்து, இறக்கி, உப்பு சேர்த்து தாளித்துக் கொட்டவும்.
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
என்னென்ன தேவை?
பாசிப்பருப்பு – 2 கப், இஞ்சி- 1 துண்டு, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் – 1 கப், முருங்கைக்கீரை – 1 கப், பச்சை மிளகாய் – 3, கடூகு, சீரகம், கடலைப்பருப்பு – தாளிக்க, எண்ணெய், உப்பு – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பையும் பச்சை மிளகாயையும், இஞ்சி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வெங்காயம் தாளித்து, அலசி வைத்துள்ள முருங்கைக்கீரை சேர்த்து ஒரே ஒரு முறை வதக்கி, அரைத்த விழுதுடன் சேர்த்து, உப்பு சேர்த்து சின்ன அடைகளாக ஊற்றி சூடாக சாப்பிடவும். காலை மற்றும் மாலை உணவுக்கு ஏற்றது. இரவு உணவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம். செரிமானமாவதில் சிரமம் இருக்கும்.
என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)
ஆற்றல் 64 கிலோ
கலோரிகள்
கால்சியம் 185 மி.கி.
பாஸ்பரஸ் 112 மி.கி.
இரும்பு 4 மி.கி.
புரதம் 9.40 கிராம்
கொழுப்பு 1.40 கிராம்
நார்ச்சத்து 2 கிராம்
தண்ணீர் 78.66 கிராம்
முருங்கைக்கீரை கூட்டு / மிளகூட்டல்
தேவையான பொருட்கள்;-
முருங்கைக்கீரை – 3 கப்
பாசிப்பருப்பு – அரை கப்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தாளிக்க :
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு – தலா அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1
வறுத்து அரைக்க:
லேசாக வெதுப்பிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல் – 1
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
மணம் வர வறுக்கவும்.அத்துடன்
தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 5
சேர்த்து அரைக்கவும்.
தேவைக்கு தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து எடுக்கவும்.
செய்முறை:
கீரையை உருவி நன்கு அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும்.
ஊற வைத்த பாசிப்பருப்பை தேவைக்கு தண்ணீர் மஞ்சள் தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சூடு செய்யவும்.
கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல் கிள்ளி போடவும்.
கீரை சேர்த்து வதக்கவும்.
அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
ஒன்று சேர்ந்து சிறிது வேக விடவும்.கீரையை திறந்தே சமைக்கவும்.நிறம் மாறாமல் இருக்கும்.
பின்பு வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
சுவையான கீரை கூட்டு அல்லது மிளகூட்டல் ரெடி.
வெறும் சோற்றில் பிரட்டியோ தொட்டுக் கொண்டு சாப்பிடவோ சூப்பராக இருக்கும்.நீங்களும் செய்து பாருங்க.
வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்
தேவையானவை:
பொடியாக நறுக்கிய வாழைப்பூ –ஒரு கப்
முருங்கைக்கீரை —ஒரு கப்
தேங்காய்த்துருவல்—ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் –ஒரு டீஸ்பூன்
கடுகு — கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு–தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் —1
பெருங்காயத்தூள்—கால் டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை :
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காய்த்தூள், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, அதில் முருங்கைக்கீரை நன்றாக அலசி போடவும், வாழைப்பூ சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடியவிடவும், தண்ணீர் வடிந்தது, அதை வதங்கிக் கொண்டிருக்கும் முருங்கைக்கீரையுடன் போடவும், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, கடைசியாக தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி இறக்கவும்.
என்ன இந்த பேய் நல்ல பேய்தான அந்த டாக்டருக்கு எவ்வளவோ தேவல…..%%

நன்றி … வாழ்க வளமுடன்… %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *