அரசாங்கம் முஸ்லிம்கள் மீது பழிசுமத்தி திசை திருப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது!

ஷரீஆ சட்டத்தை பின்பற்ற வேண்டுமாக இருந்தால் சவூதி அரேபியாவுக்கு போகவேண்டிய தேவையில்லை. நாடு சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே அனைத்து இன மக்களுக்குமான தனியார் சட்டங்கள் நாட்டில் அமுலில் உள்ளன.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையில் அரசாங்கம் எதிர்பார்த்தவர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படவில்லை.

அதனால் முஸ்லிம்களின் மீது பழிசுமத்தி திசை திருப்பும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

இலங்கை மக்கள் நாட்டு சட்டத்தையே பின்பற்ற வேண்டும். அஸாத் சாலி ஷரீஆ சட்டத்தை பின்பற்றுவதாக இருந்தால் சவூதி அரேபியாவுக்கு செல்லவேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் அவர்களுக்குரிய தனியார் சட்டங்கள் ஒல்லாந்தர் காலம் முதல் இருந்து வருகின்றன. சிங்கள மக்களுக்கு கண்டிய சட்டம், இந்துக்களுக்கு தேசவழமை சட்டம் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டம் என நாடு சுதந்திரம் பெற்று 73 வருடகாலமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த சட்டங்களை பின்பற்றி வருகின்றோம்.

அதனால் ஷரீஆ சட்டத்தை பின்பற்றுவதற்கு சவூதி அரேபியாவுக்கு செல்லவேண்டியதில்லை.

அத்துடன் நாட்டு சட்டத்தை மதிக்கப்போவதி்லலை என நான் தெரிவித்ததாக தெரிவித்து என்னை கைதுசெய்வதாக அமைச்சர் சரத் வீரசேக தெரிவித்துள்ளார்.

என்னை கைதுசெய்வது தொடர்பில் நான் அலட்டிக்கொள்ளப் போவதில்லை. கைது செய்தாலும் நீதிமன்றத்தில் என்னை ஆஜர்படுத்த வேண்டும்.

அம்பாறையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினையை சரத் வீரசேகரதான் திட்டமிட்டு மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த குரல் பதிவு என்னிடம் இருக்கின்றது.

இனங்களுக்கடையில் பிரச்சினையை ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிரான ஆதாரங்களையும் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்போம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *