படுகொலை செய்யப்பட்ட யுவதியின் தலை எரிப்பு?

பொலிஸ் அதிகாரியால் தலைவெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யுவதியின் தலையை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது குறித்த யுவதியின் தலை தொடர்பில் பொலிஸார் புதிய தகவலொன்றை கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி பெண்ணின் தலை கொலையாளியால் எரிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இப்பெண்ணின் தலையை கண்டு பிடிக்கும் வகையில் கொழும்பு மற்றும் மொனராகலையைச் சேர்ந்த இரு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கொலையை மேற்கொண்டதாக கருதப்படும் பொலிஸ் அதிகாரி தனது வீட்டிற்குச் சென்ற தினத்தன்று இரவு அவரது அழுக்கான ஆடைகள் குளியலறையில் இருந்ததாகவும் எனினும் மறுநாள் காலை அந்த ஆடைகளை காணவில்லை எனவும் அவரது மகளிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் தனது தந்தை வீட்டிற்கு வந்ததாகவும் அதன் பின் இரவு உணவை உட்கொண்டதாகவும் மகள் அளித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கொலையை மேற்கொண்ட நபர் அன்றைய தினம் இரவு உணவு உட்கொண்டதன் பின்னர் எவருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி இருப்பாரெனவும் அதன் பின் அவரது மகன் நிர்மாணித்துக் கொண்டிருக்கும் வீட்டிற்குச் சென்று அவரது அழுக்கு உடை மற்றும் கொலை செய்த பெண்ணின் தலை ஆகியவற்றை எரித்திருக்கலாமென சந்தேகிப்பதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் குழு தெரிவித்துள்ளது.

தற்போது அழுக்கான ஆடைகள் மற்றும் பயணப் பொதி எரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தை கண்டுபிடித்துள்ளதோடு தலையைத் தேடி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *