கொரோனா தொற்று குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதற்கு முறையானதொரு திட்டம் அவசியமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது பெப்பிரவரி மாதம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் நூற்றுக்கு 70 வீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த ஜனவரி மாதம் முழுவது 112 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெப்பிரவரி மாதம் 20 நாட்களுக்குள் அதைவிட அதிகளவான உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான புள்ளிவிபரங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு உடனடியாக அறிக்கையொன்றை வெளியிட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் உரிய புள்ளிவிபரங்கள் பதிவு செய்யப்படாமையினால் பொது மக்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் கடுமையாக சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பில் போதிய தெளிவின்மை காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளார்

கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திடம் உரிய வேலைத்திட்டம் கிடையாது. உலக நாடுகளை பொறுத்தவரையில் நீண்டநாள் நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. ஆனால் எமது நாட்டை பொறுத்தவரையில் எந்த தரப்பினருக்கு தடுப்பூசியினை வழங்குவது என்பது தொடர்பில் தொற்றுநோய் தடுப்பு பிரிவினரால் உரிய வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றார்கள். யாரை தொடர்பு கொள்ள வேண்டும். போன்ற கேள்வி எழுந்துள்ளதுடன் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பில் போதிய தெளிவின்மை காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *