மேலைத்தேய மனிதாபிமானம் இலங்கையை தனிமைப்படுத்துமா?

எண்ணங்கள் யதார்த்தமாகிவிட வேண்டும் என்ற மனநிலைகள், ஜெனீவாவை நோக்கி எழுந்தாடுகையில், 22 ஆம் திகதி கூட்டத் தொடர் தொடங்குகிறது. சிங்களத் தேசியமும் தமிழ்த் தேசியமும் தத்தமது, நியாயங்களைப் பலப்படுத்தும் பரீட்சைக் களம்தான் இந்த அமர்வு. இலங்கையளவில் இது நின்று விடாமல், சர்வதேசத்திலும் இவ்விடயம் சலசலப்பை ஏற்படுத்துகிறது. ஐ.நா மனித உரிமை அமைப்பில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில், மிக முக்கியமானதில் இலங்கையர்கள் வாழ்வதும், இன்னும் சிலதில் சிதறி வாழ்வதும், எஞ்சிய ஏனைய நாடுகளில் இலங்கையரின் வாடையாவது வீசுவதும்தான், அமர்வை அதிர வைக்கின்றன.

இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், நேபாளம், பஹ்ரைன், லிபியா, சூடான், மார்ஷல் தீவுகள், பஹாமாஸ், ஆர்மேனியா ஆகிய நாடுகளில், பல பரிணாமங்களுக்காக இது எதிரொலிக்கிறது. அரசியல், பொருளாதார, இராணுவ நியதிகளில்தான் இந்நாடுகள் இலங்கை பற்றிச் சிந்திக்கும்.

இங்குள்ள ஆர்ஜண்டீனா, ஒஸ்ரியா, பல்கேரியா, பெர்கினா பசோ, இத்தாலி, பிரிட்டன், ஜேர்மன், பிரான்ஸ், பிரேஸில் ஆகிய ஐரோப்பிய நாடுகளில், எண்ண அளவில் ஒரு தமிழீழமே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதுதான், இலங்கை அரசுக்கு கடிவாளமாகலாமென தமிழ் தரப்புக் கணிப்பிடுகிறது. நந்திக் கடல் வலிகளைச் சுமக்கும் ஈழத் தமிழர்களின் ஒரு உறவாவது இங்கு வாழாமல் இல்லை. புலம்பெயர் தமிழ்த் தேசியத்தின் பலத்தைப் பரீட்சிக்கும் களமாகவே, சிங்களம் இந்த ஐரோப்பாவைக் கணிப்பிடுகிறது.

செனகல், உக்ரைன், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, கியூபா, மெக்சிகோ, மாலாவி, காவொன், வெனிசூலா, தோகோ ஆகிய அமெரிக்க எதிர்ப்பு நாடுகளில் “கொமியூனிஸம்” செல்வாக்குச் செலுத்துகிறது. இதனால், சீனாவின் தோழமைகளாகவே இவை நோக்கப்படுகின்றன. எனவே மொரிடானியா, நமீபியா, பிஜி, உருகுவே, கெமரூன், கொரியக் குடியரசு, ஜப்பான், செக் குடியரசு என்பன சீனாவின் செல்வாக்கில் சிந்திக்கலாம். எனினும், இவற்றில் சில, அமெரிக்காவின் ஆடம்பர அபிலாஷைகளுக்குள் அள்ளுப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இருந்தாலும், இலங்கை இதுவரைக்கும் நம்புவது இந்த சீன அணியைத்தானே. மேலும், எரிடியா, சோமாலியா, ஐவரிக்கோஸ்ட், டென்மார்க் நெதர்லாந்து, போலந்து ஆகிய நாடுகளும் உறுப்பு நாடுகளாக அமர்வில் அமர்கின்றன.

இதுவல்ல விடயம், அமர்வு நடந்தாலும் வாக்கெடுப்புக்கு வாய்ப்பில்லையாம். கொரோனாச் சூழலில், அங்கத்துவ நாடுகளிடையே பிளவு ஏற்படுவது ஆரோக்கியம் இல்லை எனக் கருதும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு இம்முடிவுக்கு வந்துள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவிக்கிறார். அவ்வாறு, வாக்கெடுப்பு நடந்தாலும் 24 நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்கிறார் இவர். வெற்றி எமக்குத்தான் என்ற இலங்கை அரசின் பாணிதானிது. புலம்பெயர் தமிழர்களின் செல்வாக்கிற்குட்பட்ட மேலைத்தேயம், சிறுவர்களைப் படையணியில் சேர்த்து, போர்க்களத்தின் முன்னரங்குகளுக்கு அனுப்பிய புலிகளின் நடவடிக்கைகள் பற்றி ஒரு வார்த்தேயேனும் சொல்லவில்லை. ஐ.நா முன்னாள் செயலாளர் நாயகம் பான்கீமூன் இதைக் கண்டுகொள்ளவுமில்லை. பிரிட்டன், பிரான்ஸ் என்பன தங்களது முன்னாள் வெளிநாட்டமைச்சர்களான டேவிட் மில் பாண்ட் மற்றும் பேர்னாட் கௌச்சர் ஆகியோரை அனுப்பி, புலிகளின் முக்கியஸ்தர்களையே பாதுகாக்க முனைந்ததாகவும், யுத்த முடிவில் இவ்வாறு வந்து அழுத்தம் தந்தமை பயங்கரவாதத்தைப் பாதுகாக்கத்தான் என்றும்தான் இலங்கை பிரச்சாரம் செய்கிறது.

“சுமார் 12000 முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வளித்த அரசாங்கமும் படையினரும் பொதுமக்களைக் கொன்றதாகக் கூறுவது ஒருதலைப்பட்சமில்லையா?” சீன சார்பு அணிகளின் செவிகளில் ஊற்றப்படுபவையே இது. இந்தியாவும் இதைச் சிந்திக்காமலில்லை. பாகிஸ்தான் பிரதமர் இலங்கைப் பாராளுமன்றத்தில், எதையாவது தொட்டுக்காட்டி உரையாற்றினால், போரை நடத்திய இலங்கைக்கு ஆதரவளிக்க முடியாமல் போய்விடுமே. இதனால், பேசாமடந்தையாக்கப்பட்டுள்ளது இலங்கை வரும் பாகிஸ்தான்.

எல்லாவற்றுக்கும் சீனாவையே நம்பும் இலங்கை, சூடான் (டர்புர்) விடயத்தில் வல்லாதிக்க சீனா நடந்து கொண்டதையும் நினைத்துப் பார்க்க வேண்டுமே. இதற்கு மேலாக இன்னுமுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் துணைத் தலைவராக, புலம்பெயர் தமிழர்களின் செல்வாக்கில் உள்ள கனடாவைச் சேர்ந்த பொபரே உள்ளதுதான். என்னடா? எங்கு திரும்பினாலும் ஈழ வாடைதான் என்று இலங்கை அரசு தலையைச் சொறிவதும் இதனால்தான். ஒருவாறு, உள்ளபடி சிந்தித்தால் தமிழர்களின் சர்வதேசத் தளம் சிங்களத்தையும் விட பலமானது. ஆனால், இந்தப்பலம் யாருக்காகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதிலே, பலவீனமடைகிறது. பயங்கரவாதத்துக்கா? அல்லது பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கா? என்ற சிங்களத்தின் கேள்விகளில், மேலைத்தேயத்தின் ஜனநாயகமும் பலவீனமடைவதையே நோக்க நேரிடுகிறது.

“அடைய முடியாத இலட்சியங்களுக்காக தமிழர்களைப் பிழையாக வழிநடத்திய தமிழ் அரசியல் சக்திகளே, ஈழத் தமிழர்களின் இழப்புக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்” என மாற்றுத் தமிழ் தலைமைகள் முழங்கத் தொடங்கி உள்ளன. இதைத் தூக்கிப்பிடித்து பிரபல்யப்படுத்தும் சில பெரும்பான்மை ஊடகங்கள், ஜெனீவாவின் மனச்சாட்சியைத் திறக்கப்பார்க்கின்றன.

வியப்பு என்னவென்றால், முஸ்லிம் தரப்பு நம்பியிருந்த அயல் நாட்டுப் பிரதமரின் வருகை, பேச்சு, சந்திப்புக்கள் எல்லாம் எந்தப் பின்னணிக்குள் மட்டுப்படுத்தப்பட்டது என்பதுதான். தனித்து நின்று இயங்க இயலாத ஏதிலிச் சமூகமாகத்தான் இதுவரைக்கும் முஸ்லிம்கள் நோக்கப்படுகின்றனர். ‘தேவை வந்தால் தமிழர்களுடன் இணைவது, தோது வாய்த்தால் அரசுடன் சேர்வது’ இதுதான் இச்சமூகத்தின் போக்குகளாக உள்ளன. உள்ள பிரச்சினையை உரத்துப் பேசி, சமூகமயப்படுத்தும் ஆற்றல், இச்சமூகத்தின் அரசியல் தலைமைகளிடமோ? அல்லது சிவில் கட்டமைப்புக்களிடமோ? காண முடியாதுள்ளது. இச்சமூகத்துக்காக செயற்படும், செயற்பட்ட ஊடகங்களும் நிலைக்க வழியின்றி, விழிபிதுங்குவது, சமூகத்தின் விருப்புக்களைப் பிரதிபலிக்காததன் விளைவுகள்தான்.

மேலும், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கட்டாயமாக எரிக்கப்படுவது, நாடொன்றைத் தண்டிப்பதற்கான ஆதாரங்களில் உள்ளதென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார். இதைவிடவும், தீர்மானங்களை ஜெனீவாவில் இணைந்து முன்வைப்பதற்கு இலங்கை அரசுக்கும், பிரிட்டன் தலைமையிலான முதன்மை நாடுகளின் குழுவிற்கும் இடையில் இணக்கம் ஏற்படாதிருப்பதும் விபரீதத்தை விளக்குகிறது. இத்தனைக்கும் இலங்கை விடயத்தை கையாளும் முதன்மை நாடுகளின் குழுவிலுள்ள கனடா, ஜேர்மனி உட்பட சில நாடுகள், பிரித்தானியா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கவுள்ளமைதான் ஐரோப்பாவில் பேச்சாக உள்ளது.( சுஹைப்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *