வியப்பூட்டும் 52 ஆண்டுகள்
78 வயதிலும் அசையாத சிங்கம்!

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் சினிமாவில் அடியெடுத்து வைத்து 52 ஆண்டுகள் ஆகின்றன.

அவர் நடித்த முதல் படமான ‘சாத் இந்துஸ்தானி’ 1969 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி வெளியானது.

படம் ரிலீஸ் ஆவதற்கு 9 மாதங்கள் முன்பாக, அந்தப் படத்தில் நடிக்க கையெழுத்து போட்டார். அதாவது 15.02.1969. அந்தப் பொன்னான தருணத்தை தனது வலைத்தளத்தில் அமிதாப்பச்சன் இப்படி பகிர்ந்து கொண்டுள்ளார்..

“இன்று நான் சினிமாவில் அடியெடுத்து வைத்த நாள்.

பிப்ரவரி, 15, 1969.

52 ஆண்டுகள்.

நன்றி.”

-என முதல் சினிமா ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து போட்ட நாளை நினைவு கூர்ந்துள்ளார்.

‘சாத் இந்துஸ்தானி’ படம் குவாஜா அகமது படேல் இயக்கிய படம். போர்ச்சுகீசிய காலனி ஆதிக்கத்தில் இருந்து கோவாவை மீட்கப் போராடிய 7 இளைஞர்களைப் பற்றிய படம்.
‘சாத் இந்துஸ்தானி’ ரீலீசான பிறகு ஆனந்த், கோவா டூ பாம்பே ஆகிய படங்களில் நடித்தார் அமிதாப்.

எனினும் பிரகாஷ் மெஹ்ரா டைரக்டு செய்த ‘சஞ்சீர்’ என்ற படம் தான் அமிதாப் பச்சனை இந்தியா முழுமைக்கும் தெரிய வைத்தது
அந்தப் படத்தில், வேலை வாய்ப்பின்மை, ஊழலுக்கு எதிராக போராடும் கோபக்கார இளைஞராக அமிதாப்பச்சன் முகம் காட்டி இருந்தார்.

“இந்தி சினிமாவுக்கு சூப்பர் ஸ்டார் வந்து விட்டார்’’ என அவரை அடையாளம் காட்டிய படம் ‘சஞ்சீர்’.

1975 ஆம் ஆண்டு வெளியான ‘ஷோலே’ திரைப்படம் அமிதாப் பச்சனின் சினிமா வாழ்க்கையில் மைல் கல்லாக அமைந்தது.
தொடர்ச்சியாக கபி கபி, டான், அமர் அக்பர் அந்தோணி, நமக்காரம் என பல்வேறு ‘ஹிட்’களை கொடுத்தார்.

90-கள் அவருக்கு போதாத காலம்.

அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஏ.பி.சி.எல்) என்ற பெயரில் சொந்த சினிமா கம்பெனி ஆரம்பித்து, பெரும் பொருளாதார இழப்பை எதிர்கொண்டார்.

இழந்த பணத்தை மீட்க, சின்னத் திரையில் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பமானது.

“கான் பனேகா குரோர்பதி’’ எனும் கோடீஸ்வர நிகழ்ச்சியைத் தொலைக் காட்சியில் தொகுத்து வழங்கினார்.

நிறைய பேரை கோடீஸ்வரர் ஆக்கிய அந்த நிகழ்ச்சி, அமிதாப்பச்சனும் பல கோடிகளைக் குவிக்க உதவியது.

தற்போது அமிதாப்பச்சனுக்கு 78 வயதாகிறது.

அமீர்கான், சல்மான் கான், ஷாரூக்கான் என பல கான்கள் வந்து விட்டாலும், இன்றைக்கும் இந்தி ‘சூப்பர் ஸ்டாராக’ அவரே நீடிக்கிறார்.
பிரமாஸ்திரா, மே டே, ஜுந்த், ஷேரா ஆகிய நான்கு படங்களில் நடித்து வரும் அமிதாப், நேற்றைக்குக் கூட புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘மகாநடி’ படம் மூலம் அறிமுகமான நாக் அஷ்வின் இயக்கும் விஞ்ஞானப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தப் படத்தில் அமிதாப்புடன் பிரபாஸ், தீபிகா படுகோனே ஆகியோரும் நடிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *