உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்த வழிநடத்தியது யார்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் இந்தியா செயற்பட்டதா?

BBC சிங்கள சேவை இன்று (08) இது தொடர்பிலான தகவல்களை வௌிக்கொணர்ந்திருந்தது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் அது தொடர்பில் ஆராய்ந்த விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்துள்ள விடயங்களை அடிப்படையாக கொண்டே BBC இந்த தகவல்களை வௌிக்கொணர்ந்துள்ளது.

மொஹமட் சஹரான் ஹஷீம் இந்த தாக்குதலின் “சூத்திரதாரி” அல்லது தலைவர் என அநேகமானவர்கள் அடையாளப்படுத்தினாலும் இந்த தாக்குதலை வழிநடத்தியது அவர் அல்லவென்பது விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வாளர்களின் நிலைப்பாடாகும் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் மறைமுக சக்தியொன்று செயற்பட்டிருக்கலாம் என தாமும் சந்தேகிப்பதாக இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டவரான தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சஹரான் ஹஷீம் தாக்குதல்கள் அனைத்தையும் திட்டமிட்டவராக இருக்க முடியாது என ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனெவிரத்னவும் ஏற்கெனவே ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தார்.

அதனை வழிநடத்தியவர் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் குறித்த நபர் அல்லது அணி கண்டுபிடிக்கப்படும் வரை அது தொடர்பிலான விசாரணை முற்றுப்பெறாது எனுவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

உலகில் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலின் போதும் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் தற்கொலை குண்டுதாரியாக பலியாகவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்திருந்ததாகவும் BBC செய்தியில் நினைவு கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தத் தாக்குதலின் பின்புலத்தில் இந்தியா இருப்பதாக தாம் நம்புவதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ BBC சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் விசாரணைகளின் போது உறுதி செய்யப்பட்ட சில விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர் இந்த கருத்தினை வௌியிட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ முக்கியமான சில விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

* திடீர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி இந்திய புலனாய்வுப் பிரிவினர் முதலில் தகவல்களை வௌியிட்டமை

* கட்டுப்வாபிட்டிய தேவாலயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரியின் மனைவியான சாரா என்றழைக்கப்படுகின்ற புலஸ்தினி தாக்குதலின் பின்னர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றமை

* அவரை இலங்கைக்கு அழைத்து விசாரணை செய்வதில் இலங்கை அதிகாரிகள் ஆர்வம் செலுத்தாமை மற்றும் அவரை ஒப்படைப்பதற்கு இந்தியாவும் முன்வராமை

* பொலிஸார் இதுவரை சாராவிடம் விசாரணை நடத்தவில்லை என்பதுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவும் அது குறித்து கரிசனை கொள்ளாமை

* ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஸவை படுகொலை செய்வதற்கான சதி இருந்ததாக நாமல் குமார என்பவர் பாரதூரமான தகவல் ஒன்றை வௌியிட்டிருந்த நிலையில் அது தொடர்பிலான விசாரணை இடைநடுவே கைவிடப்பட்டமை

* இந்தத் தாக்குதல் முயற்சியுடன் தொடர்புள்ளவர் என கூறி கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை உளநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி விடுவிக்கப்பட்டமை

* நாமல் குமார என்பவரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சஹரான் ஹஷீமை கைது செய்வதற்காக பொலிஸ் பயங்கரவாத ஒழிப்புப்பிரிவு முன்னெடுத்த விசாரணை நிறுத்தப்பட்டமை

இத்தகைய பாரிய தாக்குதலின் பின்புலத்தில் போர் தொழில்நுட்பம் நிறைந்த சிறந்த புலனாய்வு வலையமைப்பும் அனுபவமுள்ள அணியொன்றும் இருக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

எனினும், சஹரானிடம் அத்தகைய வலையமைப்பொன்று இருந்தமைக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என முள்ளான் பாராளுமன்ற உறுப்பினர் BBC சிங்கள சேவைக்கு கூறியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

தாம் நியமித்த ஆணைக்குழு வௌியிட்ட அறிக்கை தமக்கே பாதகமாக அமைந்துள்ளது என்பது அரசாங்கத்திற்கு தெரியும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற விடயமும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் வழங்கிய ஆணையில் உள்ளடங்கியிருந்தது. எனினும் இதுவரை வௌியாகியுள்ள தகவல்களுக்கு அமைய சஹரான் ஹஷீமுக்கு மேல் இருந்தது யார். இந்த தாக்குதலின் சூத்திரதாரி யார்? இந்த தாக்குதலை திட்டமிட்டது யார் என்பது தொடர்பில் எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை. ஆகவே அரசாங்கம் உருவாக்கிய குரல் இன்று அரசாங்கத்திற்கே பாதகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே ஆணைக்குழுவின் அறிக்கைகளை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது

என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்:

இதனை மறைக்க வேண்டிய தேவை ஏன் அரசாங்கத்திற்கு உள்ளது?

கட்டுப்வாபிட்டிய தேவாலயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் மனைவி சாரா இந்தியாவிற்கு சென்றுள்ளார். ஆனால் அரசாங்கம் எந்த வகையிலும் சாராவை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்பாக கொண்டுவர முயற்சிக்கவில்லை. ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்தார். இந்தியாவின் வௌியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு வந்தனர். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த தாக்குதலின் முக்கிய தற்கொலை குண்டுதாரியின் மனைவி இந்தியாவில் இருப்பதாகவும் விசாரணைகளுக்காக அவரை இலங்கைக்கு அழைத்துவர வேண்டும் எனவும் அவர்கள் கொரிக்கை முன்வைக்கவில்லை. ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஒரு சில தகவல்களை மக்களிடமிருந்து மறைப்பதற்காக இவர்கள் முயற்சிக்கின்றமை தெரியவருகிறது

என அநுர குமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *