விபத்தில் சிக்கி புதிய முகத்துக்கு மாறிய வாலிபர்!

இப்படி ஓர் அறுவை சிகிச்சை அரிதானது என்கிறார்கள் மருத்துவர்கள். கிட்டத்தட்ட புதிய மனிதராகத்தான் ஆகியிருக்கிறார் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஜோ டிமியோ (Joe DiMeo).

அந்தச் சம்பவம் நடந்து இரண்டு வருடங்களாகி விட்டன.
22 வயது ஜோ டிமியோ, மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அன்று கொஞ்சம் ஓவர் வேலை. நைட் ஷிப்ட் வேறு. வேலை முடிந்து கார் ஸ்டியரிங்கை பிடித்தவருக்கு கண்களை இறுக்கியது தூக்கம்.  போய் விடலாம் என்ற நம்பிக்கையில் ஆக்ஸிலேட்டரை அழுத்திக் கொண்டிருந்தார்.

சில நிமிட நேரங்களில் நடந்து விட்டது எதிர்பாராத அந்த விபத்து. லேசாகக் கண்ணசந்துவிட, நடைபாதையில் ஏறிய கார், விளக்கு கம்பத்தில் மோதி, கவிழ்ந்தது. அடுத்த நொடியே தீப்பிடிக்கத் தொடங்கி விட்டது கார். உள்ளே சிக்கிக்கொண்டார் ஜோ டிமியோ.

அந்த வழியாக வந்த சிலர், காரை ஓரமாக நிறுத்தி, ஜோடி டிமியோவை காயங்களுடன் மீட்டிருக்கிறார்கள். பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முகம், கைகளில் கடுமையான தீக் காயம்.

தொடர்ந்து தீவிரமான சிகிச்சைக்குப் பிறகு குணமானார் ஜோ. 20 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாம் அவருக்கு. ஆனாலும் அவர் கைகள் வேலை செய்யவில்லை. முகம் வேறு மாதிரி ஆகிவிட்டது.

அதனால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் முகம் மற்றும் கைகளை மாற்ற முடிவு செய்தனர் டாக்டர்கள். அதற்காக சரியான கைகள் தேடி அலைந்தனர். பிறகு ஒரு வழியாகக் கிடைத்தது. அதைப் பொருத்தி, ஆபரேஷன் செய்ய இருந்த நிலையில் கொடூரமாக வந்துசேர்ந்தது கொரோனா. டாக்டர்கள் அதில் பிசியாகிவிட, ஜோ அதே சிகிச்சையைத் தொடர்ந்தார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் அவருடைய முகம் மற்றும் கைகளை மாற்றி அறுவை சிகிச்சை செய்து புதிய மனிதனாக்கி இருக்கிறார்கள் டாக்டர்கள்.
கடந்த நவம்பர் மாதம் முதல் புனர்வாழ்வு முகாமில் இருக்கிறார் ஜோ. அங்கு சிரிக்கவும் கைகளை வீசவும், கண்களை சிமிட்டவும் பயிற்சி எடுத்து வருகிறார். பேச்சுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“பல உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. அதிலிருந்து இது மாறுபட்ட ஒன்று, அசாதாரணமானது” என்கிறார், உறுப்பு பகிர்வு அமைப்புக்கான தலைமை மருத்துவர் டேவிட் கிளாசன்.

“மறுவாழ்வு மையத்தில் கொஞ்சம் தீவிரமாகவே பயிற்சிகள் இருந்தது” என்கிறார் புதிய முகத்துக்கு மாறியிருக்கும் ஜோ!

பெற்றோருடன் வசித்து வரும் அவர், இது எனக்கு புதிதாக கிடைத்த வாழ்க்கை. விட்டுவிடக் கூடாது என்கிறார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *