இலங்கையின் தேசியக் கொடியை அறிமுகப்படுத்திய முஸ்லிம்கள்!

சுதந்திர தினம் வந்து விட்டால் எங்கும் தேசியக் கொடி பறக்கவிடுவது வழமை.

ஆனால் இந்த தேசிய கொடிக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் ஓர் இறுக்கமான உறவு உள்ளதென்பது வரலாற்று உண்மையாகும்.

இந்த வரலாற்றுப் பின்னணிகள் மூலம் முஸ்லீம்கள் எந்தளவு தேசத்திற்காக உழைத்தார்கள் என்ற மிக முக்கிய செய்தி புலப்படுகிறது.

கி.பி 1310 ஆம் ஆண்டு முகலாய ஆட்சியாளர்கள் இந்தியாவின் பாண்டிய நாட்டை கைப்பற்றிய போது பாரசீகத்தைச் சேர்ந்த யூனானி வைத்தியர்கள் அடிக்கடி இலங்கை வருவதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

யூனானி வைத்தியம் என்பது முஸ்லீம்களுக்கு சொந்தமான பாரசீகத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட வைத்தியம் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பாரசீகத்தைச் சேர்ந்த சில வைத்தியர்கள் கேரளா ஊடாக இலங்கைக்கு வருவதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். காரணம் அன்று யூனானி வைத்தியம் என்பது இலங்கையில் மாத்திரமின்றி உலகின் முக்கிய அரச சபைகளில் பிரதான வைத்தியமாக திகழ்ந்தது.

பாரசீகத்தைச் சேர்ந்த சில வைத்தியர்கள் கேரளா மாநிலத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்ற போது அங்கிருந்த சமூரிய மன்னர்கள் அவர்களுக்கு மகத்தான வரவேற்பை வழங்கியிருந்தார்கள். அவர்கள் இலங்கை வந்தடைந்ததும் உடனடியாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இக் காலப்பகுதிகளில் தான் கண்டி ராஜ்ஜியத்தின் மன்னன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் அவர்களின் மனைவியர் குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த செய்தியை சிறைக்காவலர்கள் இவர்களுக்கு அறிவித்ததன் பின்னர் இவர்கள் மன்னனின் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதன் பின்னர் மன்னரின் மனைவிக்கு வைத்தியம் செய்வது பற்றி அவர்கள் ஆராய்ந்தார்கள். மன்னருடைய கேள்விகளுக்கு பதிலளித்த பாரசீகத்தைச் சேர்ந்த யூனானி வைத்தியர்கள் அவரது மனைவிக்கு அதாவது மகாராணிக்கு சிகிச்சை வழங்குவதற்கு முன்வந்தார்கள். இதன் அடிப்படையில், வழங்கப்பட்ட சிகிச்சை மூலம் மகாராணி குணமடைந்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த மன்னன் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து அவர்களை விடுதலை செய்த பின்னர் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளையும் வழங்கினார்கள் என்றும் கண்டி அரச சபையின் வைத்தியர்களாக நியமிக்கப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பின்னர் கண்டி நகரில் அவர்களுக்கான “சன்னஸ்” எனப்படும் காணி உறுதிப்பத்திரங்களையும் மன்னர்கள் வழங்கியதாகவும் இந்தக் குழுவில் கற்றறிந்த ஓர் ஆலிம் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புக்கள் சான்று பகர்கின்றன.

பாரசீகத்திலிருந்து வந்த வைத்தியரான இந்த மார்க்கத்தை கற்றறிந்த அறிஞர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்வதை வழக்கப் படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த குழுவில் வந்திருந்த கற்றறிந்த ஆலிம் ஒருநாள் காட்டு வழியூடாக செல்லும் போது தாகம் காரணமாக குடிப்பதற்கு எதுவும் கேட்டார்கள். யாரோ ஒரு அழகான வெள்ளை நிற மனிதர் குடிப்பதற்கு ஏதும் கேட்டதாக அறிந்து கொண்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த ஆலிமுக்கு குடிப்பதற்கு “கிதுல்ரா” எனப்படும் கிதுல் கள்ளை கொடுத்தார். இது போதையை ஏற்படுத்தும் என்பதை அறிந்திராத அந்த ஆலிம் “கிதுல்ரா” எனப்படும் கிதுல் கள்ளை குடித்தார். தனது விரலில் இருந்த பெருமதிவாய்ந்த மோதிரத்தை அந்த சிங்களப் பெண்ணுக்கு வழங்கினார். தனது வீட்டுக்கு வந்து ஒருவர் கிதுல்ரா எனப்படும் கித்துள் கள்ளை குடித்துவிட்டு சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலை மேலும் மோசமடைந்தமையினால் மன்னரின் சபைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. மன்னர் இந்தப் பெண்ணை முஸ்லீம் வைத்திய ஆலிமுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பினார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். பாரசீகத்தின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த தாம் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களை மாத்திரமே திருமணம் செய்ய விரும்புவதாகவும் இல்லாவிட்டால் நாட்டிலிருந்து வெளியேறி தனது சொந்த இடமான பாரசீகத்திற்குச் செல்வதாகவும் கூறினார்கள்.

உடனடியாக மன்னர் கண்டியின் “கொவிகம ரதல” குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

பாரசீகத்தின் முகலாய ராஜ்யத்தின் ஊடாக வருகை தந்த இவர்கள் அதாவது ஆலிம் உட்பட ஏழு மருத்துவர்களுக்கு அரசவையில் மகத்தான வரவேற்பும் கௌரவமும் வழங்கப்பட்டதாக அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பாக கண்டி இராஜ்யத்திற்கு வருகை தந்த அதாவது இந்தியாவில் முகலாய ஆட்சியின் ஊடாக வருகை தந்த இவர்கள் அந்த ஆலிம் அடங்கலாக ஏழு பேர் கண்டி ராஜ்ஜியத்தின் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தார்கள்.

அவர்களின் கையில் ஒரு கொடி எடுத்து வரப்பட்டிருந்தது. அவர்களுடைய கொடி சிங்கக் கொடியாக காணப்பட்டது. இலங்கை மன்னர் தமக்கு வழங்கிய கௌரவத்திற்கு தாங்கள் எடுத்து வந்த சிங்கக் கொடியை அந்த ஏழு முஸ்லீம் மருத்துவர்களும் சிங்கக்கொடியை மன்னருக்கு பரிசாக வழங்கினார்கள்.

அன்றுமுதல் சிங்கத்தின் உருவம் பொறித்த கொடியை தேசிய வைபவங்களில் பயன்படுத்த மன்னருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தக் கொடியை கி.பி 1464 ஆம் ஆண்டில் முஸ்லீம் வைத்தியர்கள் இரண்டாவது புவனேகபாகு மன்னனுக்கும் வழங்கினார்கள் என்று வரலாற்று ஆசிரியர் எஸ். ஏ நிகலஸ் என்பவர்கள் 1951ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வெளியான Time of ceylon என்ற பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்கள். வரலாற்று ஆசிரியர் எஸ். ஏ நிகலஸ் அவர்களின் கருத்துக்களுக்கு அமைய இலங்கையின் தேசியக் கொடியை முஸ்லீம்களே அறிமுகப்படுத்தினார்கள் என்றும் அதற்கு இந்த சான்று போதுமானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்

பாராளுமன்றத்தில் சிங்கக் கொடியை தேசியக் கொடியாக பிரகடனப்படுத்துவதற்கும் முன்மொழிந்தவர்கள் முஸ்லிம்கள்

இந்தப் பின்புலத்திலேயே இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கம் பொறித்த கொடியை இலங்கையின் தேசியக் கொடியாக அங்கீகரிக்கப்படுவதற்கான யோசனையை முன்வைத்தவர்களும் முஸ்லிம்களே.
சிங்கக் கொடியை தேசிய கொடியாக அறிமுகம் செய்தது ஒரு முஸ்லிம் என்பது வரலாற்று உண்மையாகும்.

இலங்கையின் தேசிய கொடி சிங்கக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற யோசனையை பாரளுமன்றத்தில் முன்வைத்தவர் பாராளுமன்ற உறுப்பினர் அஹமத் சின்ன லெப்பை அவர்கள் ஆவார்கள்.

சிங்கக் கொடியை தேசிய கொடியாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டபோது அவை அனைத்தையும் தாண்டி மட்டக்களப்புத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஹமத் சின்ன லெப்பை அவர்கள் 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இந்த யோசனையை சமர்ப்பித்தார்கள்.

இலங்கை சுதந்திரமடைந்தபின்னர், அதற்கான தேசியக்கொடியாக விஜயனின் வரலாற்றுடன் தொடர்புடைய வாளேந்திய சிங்கக் கொடியை அங்கிகரிக்கக்கோரி பிரதமர் D.S சேனநாயக்க அவர்களினால் 16 ஜனவரி 1948 ல் ஒரு பிரேரணை கொண்டு வரப்பட்டது. அதனை துணிந்து முன்மொழிந்தவர் அக்கால மட்டக்களப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அஹமத் சின்னலெப்பை அவர்கள் ஆகும். அதனை A.E குனசிங்ஹ ஆமோதித்தார்.

குறித்த சிங்கக் கொடியையும், வாளையும், ஏற்க முடியாது என காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினர் செல்வநாயகம், வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் போன்றோர் கடுமையாக எதிர்த்தனர்.

ஆனாலும் வாளேந்திய சிங்கக் கொடியை ஆதரித்து அன்று சின்னலெப்பை அவர்கள் மிகத் துணிவான கருத்துக்களை முன்வைத்தார். அதில் முஸ்லிம்களும் வாளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்தார்.

இந்த வாளின் மூலமான இறைமையை முஸ்லிம்கள் நம்புகின்றனர். என்றும் அது சிறுபான்மையினரை பாதுகாக்கும் எனவும் தெரிவித்தார். அவரது உரை இலங்கை வரலாற்றில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

குறித்த பிரேரணையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி அன்றைய பிரதமரால் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அதில் எஸ். டபில்யூ.ஆர்.டீ பண்டாரநாயக்க ( தலைவர்), சேர் ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர் ஜயவர்டன, கலாநிதி.டீ.பி ஜாயா, கலாநிதி எல்.ஏ ராஜபக்‌ஷ, ஜி்.ஜி். பொன்னம்பலம், செனட்டர் எஸ் நடேசன், கலாநிதி செனரத் பரணவிதாரண போன்றோர் அங்கம் வகித்தனர்.

குறித்த குழுவில் சிங்கத்திற்கும் வாளுக்கும் தமிழ்பிரதிநிதிகள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக செனட்டர் நடேசன் பூரணமாக எதிர்த்ததோடு இறுதி அறிக்கையில் ஒப்பமிடவும் மறுத்தார். ஆனால் முஸ்லிம் பிரதிநிதியான கலாநிதி ஜாயா அவர்கள் அதனை சிங்களவர்களுடன் இணைந்து ஆதரித்து அறிக்கை வெற்றி அடைய பங்காற்றினார்.

இது இலங்கையின் தேசியக் கொடியில் வாளேந்திய சிங்கத்தை பாதுகாக்க முஸ்லிம்கள் தம்மை அர்ப்பணித்த இரண்டாவது தருணம்

இதுபற்றி Carol Aloysius எழுதிய The Sri lankan Lion flag how it came to be என்ற கட்டுரையிலும் HM . Herath எழுதிய National Flag and National Anthem of Sri lanka, Sir Walter Wijayanayakka எழுதிய Sri lanka ‘s National flag ,Part of Constitution, போன்ற கட்டுரைகளிலும் காண முடியும். அத்தோடு மறைந்த முஸ்லிம் தலைவரான கலாநிதி அஷ்ரஃப் அவர்கள் சோம ஹாமதுருவுடனான விவாதத்தின் போதும் இந்த விடயத்தை இலங்கை முஸ்லிம்களின் நாட்டுக்கான அர்ப்பணிப்பாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் இந்த தேசத்தின் அடையாளமாக சிங்கமும், அதன்வாளும் அமைந்ததிலும், அவை பற்றிய வரலாற்றிலும் முஸ்லிம்கள் தம்மை அர்ப்பணித்துள்ளதுடன் வாளை தமது வாழ்வியல் கலாசார சின்னமாகவும் கருதி வந்துள்ளனர்

1951ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் திகதி தேசிய கொடிகயில் பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிறங்கள் இலங்கையில் வாழும் பிரதான சிறுபான்மை இனங்களை குறிக்கின்றதாகும். இந்த பிரேரணையை அன்றைய களனித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஆர் ஜெயவர்த்தன அவர்கள் முன் வைத்திருந்தாலும் அதனை பாராளுமன்றத்தில் முதலில் அறிமுகம் செய்து இலங்கையின் தேசிய கொடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற யோசனையை இலங்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட பெருமை மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஹமத் சின்ன லெப்பை அவர்களையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம்களின் சேவைகள் பற்றி நாங்கள் ஆராய்கின்ற பொழுது இலங்கையின் தேசியக் கொடியை அறிமுகம் செய்வதில் கூட முஸ்லீம்களின் மகத்தான தேசியப் பங்களிப்பு நல்கப்பட்டுள்ளது என்ற வரலாற்று உண்மை புடம்போட்டுக் காட்டப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *