இறந்த தாயின் உடலை 10 ஆண்டுகளாக பிரிட்ஜில் ஒளித்து வைத்த மகளால் பரபரப்பு!

ஜப்பானில் ஒரு பெண் இறந்துபோன தனது தாயின் உடலை 10 ஆண்டுகளாக வீட்டு பிரிட்ஜில் ஒளித்து வைத்திருந்த சம்பவமும், அதற்கு அவர் கூறிய காரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் வசிப்பவர் Yumi Yoshino (48).

மாதக் கணக்கில் வீட்டு வாடகை காட்டாமல் நிலுவையில் இருந்ததால், இரண்டு வாரங்களுக்கு முன்னர் Yumi Yoshino அவர் தங்கியிந்த குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் இருந்த வீட்டை சுத்தம் செய்ய வந்த நபர், அந்த வீட்டில் ஒரு மறைவான பகுதியில் இருந்த ஒரு குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அதில் ஒரு வயதான பெண்ணின் உடலை உறைந்துபோன நிலையில் பார்த்த அவர் பயத்தில் நடுங்கிவிட்டார். உடனடியாக பொலிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக உடனடியாக Yoshino கைது செய்யப்பட்டார். அவருடன் விசாரணை நடத்தியதில், உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல், வேறு யாரும் அல்ல Yoshinoவின் தாய் என தெரியவந்தது.

தாய் அவரது 60 வயதில், 10 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாகவும், அவரது உடலை இத்தனை ஆண்டுகளாக தான் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததாகவும் Yoshino ஒப்புக்கொண்டார்.

ஆனால், எதற்காக இப்படி செய்தார் என்பதற்கு அவர் கூறிய பதில் தான் ஹைலைட்.

அவரது தாய் நகராட்சி வீட்டுவசதி வளாகத்தில் உள்ள குடியிருப்பை குத்தகைக்கு எடுத்து வாழ்ந்துவந்துள்ளார். அதே வீட்டில் பல ஆண்டுகளாக Yoshinoவும் பகிர்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தாய் திடீரென இறந்துவிட்டார். அவர் இறந்தது வெளியே தெரிந்தால், எங்கே தன்னை இந்த வீட்டிலிருந்து வெளியேற்றிவிடுவார்களோ என்ற பயத்தில், அவர் இறந்ததையே மறைத்து, அவரது உடலை 10 ஆண்டுகளாக உறைபெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.

குடியிருக்க வேறு வழியில்லாமல் பெற்ற தாயின் இறப்பையே மறைத்து, மகள் செய்த இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாயின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டிருந்த நிலையில், அவரது இறப்புக்கான நேரத்தையும் காரணத்தையும் தீர்மானிக்க முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *