இந்தியாவில் கொரோனா கால்பதித்து ஒரு வருடம் 1.54 இலட்சம் பேர் உயிரிழப்பு!

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவருக்கு கடந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி தொற்று பரவியது உறுதியானது.

இதுவே இந்தியாவில் ஏற்பட்ட முதல் கொரோனா தொற்றாக பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய என்ஜினீயர் ஒருவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் வைரஸ் தொற்று வேகமாக பரவியது.பின்னர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகரித்த பாதிப்பு செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை தொட்டது.

கேரளா, தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்தன. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நோய் பாதிப்பு அதிகமாகவே இருந்தது. இதைத் தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. போக்குவரத்து ரத்து, கல்வி நிறுவனங்கள் மூடல் என பல்வேறு கட்டுப்பாடுகள் அச்சமயம் விதிக்கப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். இதையடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த மாதங்களில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வந்து கொண்டிருக்கிறது. கேரளா, கர்நாடகாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு வெகுவாக குறையத்தொடங்கி இருக்கிறது.அதேநேரத்தில் இந்தியாவில் 1 லட்சத்து 54 ஆயிரம் பேரை கொரோனா காவு வாங்கி உள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 1 கோடியே 4 லட்சம் பேர் வரையில் குணம் அடைந்துள்ளனர். இருப்பினும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *