இந்திய தேசிய சின்னத்தை வடிவமைத்த சுரைய்யா தயாப்ஜி!

இந்திய தேசிய கொடியினை வடிவமைத்தது ஒரு முஸ்லிம் பெண் என்பதை இன்னும் பலரால் ஜீரணிக்க முடியவில்லை. பத்ருத்தீன் தயாப்ஜி – சுரைய்யா தயாப்ஜி தம்பதியரின் கூட்டுத்தயாரிப்பில் உருவான இந்திய தேசியக்கொடியின் வடிவமைப்பினை ஆரம்பத்தில் நேரு ஏற்கவில்லை என்பதும் ,தேசிய கொடியில் கருப்பு நிறத்தில் வைக்கப்பட்ட அசோகரின் தர்ம சக்கரத்தை கருநீல நிறத்தில் மாற்றும்படி சுரைய்யாவிற்கு காந்திஜி யோசனை தெரிவித்தார் என்பதையல்லாம் இந்திய சரித்திர எழுத்தாளர் கேப்டன் எல்.பாண்டுரங்க ரெட்டி விலாவாரியாக எழுதி டெல்லி ஆவணக்காப்பகத்தில் சமர்ப்பித்துவிட்ட போதும் மீண்டும் மீண்டும் பிங்கலி வெங்கய்யா தான் தேசிய கொடியை வடிவமைத்தார் எனும் புளுகினை அவிழ்த்துவிட்டபடியே இருக்கின்றனர். இதற்கு அப்போதைய இந்திய சுதந்திர கால நிகழ்வுகளை ஆவணப்படுத்திய ஆங்கில எழுத்தாளர் ட்ரவோர் ரோயல் என்பவர் எழுதிய பழைய ரெக்கார்டுகளையே ஆதாரமாக காண்பித்து வருகிறது வெங்கய்யா அவர்களது குடும்பம்.

ட்ரவோர் ரோயல் எழுதி வைத்த தகவலின்படி சுதேசி கொடியை வடிவமைத்தவர் தான் வெங்கய்யா, அவருடைய கொடியின் சாயல் இருப்பதாக கூறி தான் சுரைய்யாவின் கொடியினை ஏற்காமல் காலந்தாழ்த்தினார் நேரு. பிறகு காந்திஜியின் தலையீட்டின்படி இல்லாத ஒரு புதிய கொடியை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதை விட ஏற்கனவே நம்மிடையே இருக்கும் வர்ணங்களை வைத்து ஒரு கொடி தயாரித்தால் அது மக்கள் மனதில் பதிய ஏதுவாக இருக்கும் என காந்திஜி அபிப்ராயப்பட்டதாகவும்… இந்திய தேசியம் உருவாகப்போகிறது அதற்கு கொடி தயாரித்துவிட்டு வாருங்கள் என காந்திஜி உத்தரவிட்ட போது அதற்கு தலைமையேற்று டாக்டர்.ராஜேந்திர பிரசாத் தலைமையில் கொடி கமிட்டி அமைத்தவர் பத்ருத்தீன் தயாப்ஜியும் அவரது மனைவி சுரைய்யா தயாப்ஜியும் தான் எனும் போது திடீரென பிங்காலி எப்படி உள்ளே வந்தார் என கேள்வியெழுப்புகிறார் சுரைய்யாவின் பேத்தி. 1992க்கு பிறகு தான் திட்டமிட்டு தங்களது தாத்தா பாட்டியின் பெயர் இருட்டடிப்பு செய்யப்படுவதாக கூறும் அவர் மேலும் கொடுத்த தகவல்..

இந்திய தேசியத்தின் சின்னமாக (State Emblem of India) அசோகரின் நான்கு சிங்கங்கள் இருக்கும் லயன் கேப்பிடல் ஆப் அசோகா என்ற எம்பளத்தை தேசிய சின்னமாக தேர்ந்தெடுத்ததும் சுரைய்யா தயாப்ஜி தான் என்கிறார். அசோகருடைய அந்த சிங்க சின்னத்தை சாரனாத் ஸ்தூபத்தில் இருந்து எடுத்ததும், அதே போல ஒரு தர்மசக்கரத்துடன் கூடிய நான்கு சிங்க சின்னத்தை தாய்லாந்தில் இருக்கும் வாட் உமாங் பகுதியில் கண்டதாகவும் (படம் 3) , 13ம் நூற்றாண்டின் தாய்லாந்து மகாராஜா மங்குராய் என்பவரால் அது நிர்மாணிக்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்து…நமது நாட்டின் புராதன பௌத்த வடிவம் இங்கே நிர்மாணிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் கண்டதாக ஆதார குறிப்புகளை சுட்டிக்காட்டியதை எல்லாம் ஆராயாமல்,

தற்போது இந்திய தேசிய சின்னத்தை வரைந்தவர், சாந்தினிகேதன் குரு நந்தலால் போஸின் மாணவர் தீனநாத் பார்கவா எனவும் மாற்றி கூறி வருகின்றனர். 1950ல் முதலாமாண்டு மாணவரான தீனநாத்துடைய சாரநாத் வடிவத்தை தேசிய சின்னத்திற்காக தேர்ந்தெடுத்தனர் என்பதே ஒரு கடைந்தெடுத்த பொய் என்றும்… மதச்சார்பற்ற இந்தியாவில் முஸ்லிம்களின் பங்கு என எதுவும் இருக்கவேண்டாம் என்று முடிவு கட்டிய கூட்டத்தினருடைய சதி வேலைகள் இவை என்கிறார் சுரைய்யாவின் பேத்தி லைலா தயாப்ஜி.

மூன்றாவது படத்தில் இந்திய தேசிய சின்னம், தாய்லாந்து நாட்டிலும் அதே வடிவத்தில் வடிக்கப்பட்டுள்ளதையும் சிங்கங்களின் தலையில் தர்மசக்கரம் வைக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *