இன்று விடுதலையாகிறார் சசிகலா!

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா இன்று காலை விடுதலையாக உள்ள நிலையில், அவர் எப்போது தமிழகம் செல்வார் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கான முடிவுகளை சசிகலா மற்றும் அவரது உறவினர்களே எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி சகிகலாவிற்கு கடந்த வாரம் மூச்சு திணறல், காய்ச்சல், சளி தொல்லை ஏற்பட்டதை தொடர்ந்து விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை ஐ.சி.யூ வார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 6 நாட்கள் சிகிச்சையில் அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கொரோனா தொற்றும் குறைந்து விட்டது. இதனால், சிறையில் இருந்து அவரை விடுதலை செய்வதில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதை சிறைத்துறை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

அதன்படி, இன்று காலை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில், அவரை விடுதலை செய்வதற்கான சான்றிதழ்களில் சிறை அதிகாரிகள் கையொப்பம் பெற இருக்கின்றனர். காலை 9 மணி முதல் 10 மணிக்குள் அவர்கள் விக்டோரியா மருத்துவமனைக்கு வந்து கையெழுத்து பெற்று கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 10.30 மணிக்கு அவர் விடுதலையாகி விடலாம். இந்த கால அவகாசம் மாலை 3 மணி வரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர் மருத்துவமனையில் இருந்து செல்லாவிட்டாலும், மாலை 6 மணியுடன் சிறை கைதிக்கான அனைத்து நடைமுறைகளும் திரும்ப பெறப்படும். இதையடுத்து, அவர் சாதாரண நோயாளியாகவே கருதப்படுவார். விருப்பம் இருந்தால் அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளலாம். இல்லையென்றால் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளலாம். இது குறித்து சசிகலா தரப்பில் கூறும்போது; மேலும் 2 நாட்கள் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு, பின்னர் வேண்டுமென்றால் தனியார் மருத்துவமனை அல்லது ஹோம் குவாரன்டைனுக்கு சென்று விடலாம் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் கொரோனா நோயாளி என்பதால், குவாரன்டைன் விதிமுறையை அவர் கடைபிடிக்க வேண்டியுள்ளது. இதனால் தொண்டர்களும், உறவினர்களும் அவரை நெருங்க முடியாது என்று கூறப்படுகிறது. அதே நேரம் காலதாமதமாக தமிழகம் சென்றால், தொண்டர்களின் வரவேற்பையும் பெறலாம். சென்னையில் ஏற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இவை அனைத்தும் சசிகலா மற்றும் அவர்களின் உறவினர்களில் கையில் உள்ளது. அவர்கள் எடுக்கும் முடிவை வைத்துதான் சசிகலா எப்போது தமிழகம் வருவார் என்பது தீர்மானிக்கப்பட இருக்கிறது. சி.சி.டி.வி கேமராவை வைத்து கண்காணிக்கப்படும் சசிகலா: சசிகலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது இருந்தே அவரது உறவினர்கள், வக்கீல்கள், முறையான சிகிச்சை வழங்கவில்லை. அரசு மருத்துவர்கள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் இதை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. சி.சி.டி.வி கேமராக்களை வைத்து சிகிச்சையை கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா நோயாளி என்பதால் சிறை விதி தளர்வு
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் உள்ள சசிகலாவை ஏன் சிறைக்கு வரவழைத்து விடுதலை செய்யவில்லை என்று சிறைத்துறை நிர்வாகத்திடம் கேள்விகள் கேட்டதற்கு அவர்கள் ‘சசிகலா கொரோனா நோயாளி அவரை மீண்டும், சிறைக்கு அழைத்து வந்தால் வேறு சிலருக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. மேலும் விதிமுறைப்படி அவரை சிறை குவாரன்டைன் மையத்தில் தனிமைப்படுத்தவேண்டியிருக்கும். இதை கருத்தில் கொண்டே அவரை மருத்துவமனையில் வைத்தே விடுதலை செய்ய சிறை நிர்வாகம் அனுமதித்ததாக கூறினர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *