இங்கிலாந்து கிரிக்கெட் அணி 107 வருடங்களுக்குப் பின்னர் சாதனைப் படைத்தது!

இலங்கைக்கு எதிரான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

முன்னதாக, காலேவில் கடந்த 22 ஆம் திகதி தொடங்கிய 2 ஆவது டெஸ்டில் நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 381 ஓட்டங்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ஓட்டங்கள் விளாச, இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்சன் 6 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, 344 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 186 ஓட்டங்கள் விளாச, இலங்கை தரப்பில் லசித் எம்புல்தெனியா 7 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இதை அடுத்து முதல் இன்னிங்ஸில் 37 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, 126 ஓட்டங்களுக்குச் சுருண்டது. லசித் எம்புல்தெனியா மட்டும் அதிகபட்சமாக 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ஓட்டங்கள் சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் டாம் பெஸ், ஜேக் லீச் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் 164 என்ற வெற்றி இலக்குடன் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, 43.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வென்றது. டாம் சிப்லி 2 பவுண்டரிகளுடன் 56, பட்லா் 5 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினா். இலங்கை தரப்பில் லசித் எம்புல்தெனியா 3, ரமேஷ் மெண்டிஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.

ஏற்கெனவே முதல் ஆட்டத்திலும் வென்றிருந்த இங்கிலாந்து, தற்போது தொடரை கைப்பற்றியுள்ளது. காலே டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தொடா் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டாா்.

இந்நிலையில் 107 வருடங்கள் கழித்து வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 5 டெஸ்டுகளை வென்று சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. 1911 முதல் 1914 வரை இங்கிலாந்து அணி வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 7 டெஸ்டுகளை வென்றது. தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்டுகளிலும் வென்றது. கடந்த வருடம் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய மூன்று டெஸ்டுகளையும் வென்ற இங்கிலாந்து அணி தற்போது இலங்கையில் விளையாடிய 2 டெஸ்டுகளிலும் வெற்றி கண்டுள்ளது.

அதேபோல இலங்கையில் தொடர்ச்சியாக 6 டெஸ்டுகளில் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. 2012 ல் ஒரு டெஸ்டும் 2018-19-ல் 3 டெஸ்டுகளிலும் வென்ற இங்கிலாந்து அணி தற்போது 2 டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *