நிலச்சரிவில் மாயமாகி 3 வருடங்களுக்குப் பின்னர் வீட்டுக்கு வந்த பூனை!

நிலச்சரிவில் மாயமான பூனை, மூன்று வருடத்துக்கு மீண்டும் கிடைத்திருப்பது ஆச்சரியப்பட வைத்திருக்கிறது அமெரிக்காவில்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா பார்பரா பகுதியில் கடந்த 2018-ல் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. பல பிரபலங்கள் வசித்த இந்தப் பகுதியில், அந்த நிலச்சரிவு காரணமாக 23 பேர் உயிரிழந்தனர். அதில் ஒருவர் ஜோஸி கோவர் (Josie Gower) என்ற பெண்.

இவர் செல்லமாக வளர்த்த பூனையை அந்த நிலச்சரிவுக்குப் பிறகு காணவில்லை. இதனால் கோவருடன் அதுவும் உயிரிழந்து விட்டதாக நினைத்தனர். ஆனால், மூன்று வருடத்துக்குப் பிறகு அந்தப் பூனை, உயிரோடு வந்து ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது, மறைந்த கோவரின் பார்ட்னருக்கு.

நிலச்சரிவுக்குப் பிறகு, அந்தச் செல்லம் என்ன ஆனது, என்ன செய்தது என்பது பற்றி எதும் தெரியவில்லை. அதனால் கோவரின் பார்டனர் கிட்டத்தட்ட அதை மறந்தே போய்விட்டார். ஆனால், நிலச்சரிவு நடந்த இடத்துக்கு அரை மைலுக்கு அப்பால், இந்தப் பூனை இப்போது மீண்டும் கிடைத்திருக்கிறது.

இந்தப் பூனையை கைப்பற்றிய விலங்குகள் நல அமைப்பு ஒன்று, பராமரிக்கத் தொடங்கியது. அப்போது, அந்தப் பூனைக்குள் மைக்ரோ சிப் ஒன்று வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்தசிப்பில், ஜோஸி கோவரின் பெயர் இருக்க, விலங்குகள் நல வாரியம், கோவரின் பார்ட்னர், நோம் போர்கடெல்லோவுக்கு போனை போட்டது.
ஓடோடி வந்த நோம், பூனைக்குட்டியைப் பார்த்ததும் கொஞ்சம் சென்டிமெண்டாக உணர்ந்தார். பிறகு, விலங்குகள் நல அமைப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு அதை வீட்டுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

இதுபற்றி அந்த விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள், “இந்தப் பூனை உயிரோடு இருப்பது அவருக்குத் தெரியாது. அதை அழைத்து செல்ல வந்தபோது, ஒரு பேயை போல, அதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்” என்று தெரிவித்து உள்ளனர். இருக்காதா பின்னே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *