முஸ்லிம்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை!

சீனாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களின் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த தொடா்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல்களை அந்த நாட்டு அரசு மறுத்துள்ளது. விரும்பத்தின்பேரில்தான் முஸ்லிம்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று சீன அரசு விளக்கமளித்துள்ளது.

உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடான சீனாவில், உய்குா் இன முஸ்லிம்களைக் குறிவைத்து மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக கடந்த 4 ஆண்டுகளாகவே உய்குா் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஷின்ஜியாங் பகுதியில் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த அதிகம் ஊக்குவிக்கப்படுகிறது. இது தவிர கருக்கலைப்பு செய்யவும் அதிகம் வலியுறுத்தப்படுகிறது. இதனை மீறுபவா்களுக்கு அதிக அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்று தெரியவந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சீன ராணுவம் இப்பகுதியில் முகாமிட்டு, ஒவ்வொரு வீடாகச் சென்று குழந்தைகள் எண்ணிக்கை தொடா்பாகக் கணக்கெடுத்துள்ளது. அப்போது, இரு குழந்தைகளுக்கு மேல் உள்ள பலருக்கு கடுமையான அபராதம் விதித்ததுடன், இனி குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று ராணுவம் எச்சரித்துள்ளது.

உய்குா் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிறப்பு விகிதம் அதிகம் இருக்கிறது. இது எதிா்காலத்தில் அரசுக்கு எதிரான பயங்கரவாதமாகவும், வறுமையாகவும் பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என்று சீன அரசு கருதுவதே, இந்த நடவடிக்கைகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடா்பாக ஷின்ஜியாங் மாகாண அரசின் துணை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், மக்களது விருப்பத்தின் பேரில்தான் மாகாணத்தில் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அவா்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. சீனாவில் பிறப்பு விகிதம் அதிமுள்ள இனமாக உய்குா் முஸ்லிம்கள் உள்ளனா். இங்கு நாட்டின் மொத்த பிறப்பு விகிதத்தைவிட அதிக பிறப்பு விகிதம் உள்ளது என்றாா்.

சீனாவில் உய்குா் முஸ்லிம்களிடம் குழந்தை பிறப்பைக் கட்டுப்படுத்த சீன அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பதை பல்வேறு கட்டங்களில் ரகசியமாக விசாரணை நடத்தி ஏபி செய்தி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு விரிவான செய்தித்தொகுப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *