புளியம்பழத்தின் மருத்துவப் பயன்கள்!

அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் புளி. சுவைக்காக பயன்படுத்தப்படும் புளியில் சத்துக்களும் மருத்துவப்பயன்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளியமரம் இந்தியா முழுவதிலும் வெட்ட வெளிப்பிரதேசங்களிலும், தென்னிந்தியாவிலும், இமயமலைப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்க்கப்படுகிறது. விதையின் பருப்பு, கனிகள், தண்டுப் பட்டை மற்றும் இலைகள் மருத்துவப் பயன் கொண்டவை. விதையின் பருப்பில் பாலசாக்கரைடுகள் உள்ளன. பாலசமைன், கட்டிக்கின், நாஸ்டர்ஷியம் டமரின், ஃபாஸ்ஃபாட்டிக் அமிலம், எத்தனாலமைன், செரீன் ஐனோசிட்டால், மற்றும் ஹார்டனைன் என்னும் இரசாயனப் பொருட்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின்,நியாசின், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்புசத்து, கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

தேள்நச்சு இறங்கும்.:
தேள் கடித்தவருக்கு புளியம் பழம் மருந்தாக செயல்படுகிறது. களாக்காய் அளவு நார் இல்லாத புளியம்பழத்தை எடுத்துக்கொண்டு அதே அளவு காரம் உள்ள சுண்ணாம்புடன் சேர்த்து இரண்டையும் நன்றாக அழுத்திப் பிசைந்தால் உடனே அது சூடேறும். சூடு ஆறும் முன் அதை அடையாக எடுத்து தேள் நச்சு உள்ள இடத்தில் வைத்து அழுத்த வேண்டும். இந்த மருந்து அப்படியே ஒட்டிக்கொள்ளும். நச்சு புளியம்பழத்தில் ஏறியவுடன் கடுப்பு நின்றுவிடும். படிப்படியாக குணமடையும்.

ரத்த கட்டு அகற்றும்.:
உடலில் எங்காவது அடிபட்டு ரத்தம் கட்டி வீக்கம் ஏற்பட்டால் புளியை ஒரு அளவு எடுத்து அதே அளவிற்கு உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து அதை சுண்டக்குழம்பு போல கரைத்து எடுத்து வடிகட்டி ஒரு இரும்புக் கரண்டியில் விட்டு, அதை அடுப்பில் வைத்து,நன்றாக கொதிக்க வைத்து அதை தாளக்கூடிய சூட்டுடன் வீக்கத்தின் மேல் கனமாகப் பற்றுப் போட்டுவிட வேண்டும். தினசரி காலை, மாலை பழைய மருந்தைக் கழுவி விட்டு புதிதாகப் பற்றுப் போட வேண்டும். இந்த விதமான மூன்று நாள் பற்றுப் போட்டால் வீக்கம் வாடிவிடும். வலி தீரும்.

பல்வலி குணமாகும்.:
பல்வலி ஏற்பட்டால் தேவையான அளவு கொஞ்சம் புளியை எடுத்து அதே அளவு உப்புத்தூளையும் எடுத்து இரண்டையும் நன்றாகப் பிசைந்து பல்லில் வலியுள்ள இடத்தில் அடையாக வைத்து அழுத்திவிட வேண்டும், பின் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வாயில் உமிழ்நீர் ஊறினால் அதை துப்பிவிட வேண்டும். கால் மணி நேரம் கழித்து புளியையும் துப்பிவிட்டு வெது வெதுப்பான வெந்நீர் கொண்டு வாயை பலமுறை கொப்பளிக்க பல்வலி குணமாகும். தினசரி காலை, மாலை தேவையானால் மதியம் கூட இந்த முறையை கையாளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *