பயணிகள் விமானம் ஜாவா கடலில் வீழ்ந்து நொருங்கியது!

இந்தோனேசியாவில் உள்நாட்டு சேவையில் ஈடுபட்டிருந்த சிறிவிஜாயா (Sriwijaya) எயார் லைன்ஸ் விமானம் ஒன்று 60 பயணிகளுடன் ஜாவா கடலில் (Java Sea) வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

இன்று சனிக்கிழமை பகல் சிறிது நேரம் தொடர்புகள் இன்றிக் காணாமற் போயிருந்த அந்த விமானம் தலைநகர் ஜக்கார்த்தா அருகே கடலில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது. விமானத்தின் சிதைவுகள் நீரில் மிதக்கின்றன என்று உள்ளூர் ஊடகங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜக்கார்த்தாவின் சுஹர்னோ – ஹட்டா (Soekarno-Hatta) விமான நிலையத்தில் இருந்து நாட்டின் மேற்கு கலிமன்தான் (West Kalimantan) மாகாணத்தின் தலைநகர் Pontianak விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த போயிங் 737 (Boeing 737) ரக விமானம் ஒன்றே விபத்துக்குள்ளாகி இருக்கிறது.புறப்பட்டு சிறிது நேரத்தில் ராடார் திரையில் இருந்து காணாமற் போன அந்த விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தன.

அதில் ஒரு குழந்தை மற்றும் சிறுவர்கள் உட்பட 60 பயணிகள் இருந்தனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. எவராவது உயிர்பிழைத்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

‘போயிங்’ தயாரிப்புகளில் ஒன்றான 737-500 MAX ரக விமானங்கள் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கிவருகின்றன. இரு ஆண்டு இடைவெளிக்குள் நிகழ்ந்த இரண்டாவது விபத்து இதுவாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *