சுதந்திரக்கட்சியை மொட்டு கட்சியிடம் விற்பனை செய்தார் மைத்திரி!

நானே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர். மைத்திரிபால சிறிசேன என்பவர் சட்டவிரோதமாகவே அப்பதவியை வகிக்கின்றார்.”  – என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான முன்னாள் பிரதமர் எஸ்.டிபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 122 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, காலி முகத்திடலில் உள்ள அன்னாரின் திருஉருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே சந்திரிக்கா அம்மையாளர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தற்போது அரசியல் பயணம் என்று ஒன்று கிடையாது. எனவே, கட்சி சரியான வழியில் பயணிக்கின்றதா அல்லது திசைமாறி பயணிக்கின்றதா என கூறமுடியாது.
சுதந்திரக்கட்சிக்கு பொதுஜன பெரமுனவால் அநீதி இழைக்கப்படுகின்றது என இன்றுதான் சிலர் கூறுகின்றனர். ஆனால் முன்கூட்டியே இது குறித்து நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

தற்போது கட்சிக்கு தலைவர் என ஒருவர் இருக்கிறார். அவர் சட்டவிரோதமாகபே அப்பதவியை வகிக்கின்றார். சுதந்திரக்கட்சியில் இருந்து நான் விலகவில்லை. ஆயுட்கால உறுப்பினர். நான்தான் தலைவர். எனினும், எந்தவொரு கூட்டத்துக்கும் எனக்கு அழைப்பு விடுக்கவேண்டாம் என சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

நான் ஐக்கிய தேசியக்கட்சி பக்கம் செல்லவில்லை. சிறிசேனதான் 5 தடவைகள் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகம் சென்றார். ரணிலை சேர் என விளிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என கேட்டார். சுதந்திரக்கட்சியை மொட்டு கட்சியிடம் விற்பனை செய்தவர்தான் சிறிசேன.” – என்றார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *